For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வெளிநடப்பு விதிமீறிய செயல்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: என்றைக்கோ ஒருநாள் அவைக்கு வருவதையும் அவையின் மரபுகளுக்கு முரணாக நடந்து கொள்வதையும், பின்னர் தங்களுக்கு பேசவே வாய்ப்பளிக்கவில்லை என்று கூறுவதையும் ஜெயலலிதா ஒரு புதிய வழக்கமாகவே கடைபிடிக்கிறார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்த பின் கோட்டையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், சட்டமன்ற கூட்டம் நடக்கும் போது ஒரு உறுப்பினரோ அல்லது அவரது கட்சி சார்பிலோ விளக்கம் கேட்பதாக இருந்தாலோ உரிமை மீறல் போன்ற பிரச்சினைகளை எழுப்புவதாக இருந்தாலோ காலையில் சட்டமன்றம் தொடங்கி கேள்வி-பதில் நேரம் முடிந்த பிறகுதான் எழுப்ப முடியும் என்பது சட்டமன்ற விதியில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

வெளியூர் செல்வதற்காக...:

எனவே அதிமுக தலைவி ஜெயலலிதாவும், அவரது கட்சியினரும் இன்று காலை சட்டமன்றம் கூடியதும் உரிமைப் பிரச்சினை எழுப்புவதாக சொல்லி பேசுவதற்கு முற்பட்டபோது கேள்வி நேரம் முடிந்த பிறகு அதாவது 1 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சினையை எழுப்புங்கள். அதற்கு ஆளுங்கட்சி சார்பில் விளக்கம் தரப்படும் என்று எடுத்துக் கூறியும் கேட்காமல், அந்த 1 மணி நேரம் காத்திருக்க மனமில்லாமல் அல்லது நேரமில்லாமல் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் (இன்று கொடநாடு சென்றார் ஜெயலலிதா) பேரவைக்கு வெளியில் சென்று அரசு மீது சில அவதூறுகளையும் கூறி இருக்கிறார்.

என்றைக்கோ ஒருநாள் அவைக்கு வருவது...:

என்றைக்கோ ஒருநாள் அவைக்கு வருவதும் அவையின் மரபுகளுக்கு முரணாக நடந்து கொள்வதும், பின்னர் தங்களுக்கு பேசவே வாய்ப்பளிக்கவில்லை என்று கூறுவதும் ஒரு புதிய வழக்கமாகவே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இதை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சட்டமன்ற மரபுகளை உணர்ந்தவர்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

கேள்வி: கனிமொழிக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் ஓகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டீர்கள் என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: கர்நாடகத்தில் உள்ளவர்கள் யாருக்காவது கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கும் அதிகாரம் இருக்கிறதா?. பதிலுக்கு பதில் சொல்லி மண்ணை வாரி தூற்ற விரும்பவில்லை.

கேள்வி: கேள்வி நேரத்திற்கு முன்பே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர 56வது விதி இருக்கிறது என்று ஜெயலலிதா கூறுகிறாரே?

பதில்: கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றால் முன்னதாகவே அவையில் தீர்மானம் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் முடியாத என்றால் கூட அது நிறைவேறாது.

கேள்வி: ஓகேனக்கல் திட்டத்தை நீங்கள் கைவிட்டுவிட்டதாக ஜெயலலிதா கூறுகிறாரே?

பதில்: கையும் இருக்கிறது திட்டமும் இருக்கிறது. இந்த திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டது. மேற்பார்வையிட்டு, ஆலோசனை பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது பிப்ரவரி 2008ல்.

ஒப்பந்தப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டது மார்ச் 2008ல். திட்டம் இறுதி செயல்பட இருப்பது ஜூலை 2008ல். திட்டம் முழுமையாக நிறைவு பெறுவது டிசம்பர் 2012ம் ஆண்டில்.

ஒரு தமிழன் என்ற உணர்வோடு..:

கேள்வி: இந்த திட்டத்தை 1 மாதம் தள்ளி வைத்தது ஏன்?

பதில்: 1 மாதத்துக்குள் கர்நாடகத்தில் தேர்தல் வருகிறது. எனவே தமிழர்கள் கர்நாடகத்தில் ரத்தம் சிந்தாமல் இருக்கவேண்டும். பொதுவாக கர்நாடகத்தில் உள்ள சிலர் தமிழன் என்றாலே ஒரு ஒவ்வாமை உணர்வுடன் பார்ப்பார்கள் என்பதால்,

அமைதி காத்து கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழர்களையும், அவர்களுடைய உடமைகளையும், உயிர்களையும், அதே போலவே கர்நாடகத்தில் உள்ள அப்பாவி மக்களையும், வன்முறைக்கு பலியாகி விடக் கூடக்கூடாது. எனவே தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடும், ஒரு இந்தியன் என்ற பரந்த நோக்கத்துடனும் நான் இந்த முடிவை அறிவிக்க நேர்ந்தது.

சட்டசபையில் இதை ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்கிறார்கள். 5ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டபோது சட்டசபை நடக்கவில்லை. அடுத்த 3 நாள் விடுமுறை. அதனால் சட்டமன்றத்தில் அறிவிக்க இயலவில்லை.
அப்படியே இருந்தாலும் இது ஒரு கொள்கை மாற்ற முடிவு இல்லை. அடிப்பதையும், திருப்பி அடிப்பதையும் கொள்கையாக வைத்திருந்து அதை மாற்றினால் ஏன் என்று சில கட்சிகள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் இது ஒரு திட்டத்தை பற்றியது. நான் எந்த ஒரு அறிக்கையிலும், பேச்சிலும் இந்த திட்டத்தை கைவிடுவதாக கூறவில்லை.

துரோகத்தில் விளைந்த அதிமுக:

எனவே தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டேன் என்று துரோக்கத்திலேயே விளைத்த அதிமுகவும், மதிமுகவும் அவர்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்த திட்டத்தினால் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்கள் பயன்பெறும். இதை நான் கைவிடவில்லை என்று சொல்கிறேன். ஏற்கனவே அறிவித்து இருக்கிறேன்.

சேது-அதிமுக, மதிமுக நிலை:

ஆனால் தமிழ்நாட்டுக்கே பயன்படக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அறிவித்து அதை மதிமுகவும் பின்பற்றி சேது சமுத்திரத் திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்பது போல கர்ஜனை செய்து விட்டு இப்போது அந்த திட்டத்தை ஜெயலலிதா அறவே கைவிட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார்.

இந்த சூழ்நிலையில் துரோகமே அறியாத மதிமுக வினர் அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் துரோகமே உன் பெயர் தான் அரசியலா என்று கேட்க தோன்றுகிறது.

எடியூரப்பா.. நிஜமில்லப்பா:

கேள்வி: காங்கிரஸ் சதி செய்து தேர்தல் லாபம் அடைவதற்காக உங்களை பயன்படுத்தி இருப்பதாக எடியூரப்பா கூறி இருக்கிறாரே?

பதில்: இது நிஜமில்லப்பா.

கேள்வி: ரஜினியின் பேச்சுக்கு கர்நாடகத்தில் கண்டனம் எழுந்துள்ளதே?

பதில்: ரஜினி இதற்கு பதில் சொல்லி விட்டார்.

கேள்வி: ஓகேனக்கல் திட்டம் குறித்து சட்டசபையில் 2 தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மத்திய அரசு மெளனமாக இருக்கிறதே?

பதில்: மத்திய அரசுக்கு மெளனமாக இருப்பது எப்போது, வாய் திறப்பது எப்போது என்பது தெரியும். காத்திருப்போம்.

கேள்வி: இந்த பிரச்சனை காரணமாக ஜப்பான் நாட்டு நிதி பெறுவதில் பின்னடைவு ஏற்படுமா?

பதில்: ஏற்படாது.

தொலைபேசியில் பேசிய கிருஷ்ணா:

கேள்வி: எஸ்.எம். கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று கூறி இருக்கிறாரே?

பதில்: அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது, பத்திரிகைகளில் வந்ததை நம்ப வேண்டாம் என்று கூறினார் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X