For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கிரீமி லேயர்' என்பதே சட்டவிரோதமானது: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வசதி படைத்தோர் என்ற கொள்கையே சட்டவிரோதமானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல்சாசனத்தில் எங்குமே வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லப்படவில்லை. எனவே இந்த கொள்கையே சட்டவிரோதமானது.

எனவே இந்த அநீதியை எதிர்த்து சமூக நீதிக்காகப் போராடி வரும் அனைத்துத் தலைவர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும், குரல் கொடுக்க வேண்டும்.

கிரீமி லேயர் என்ற கொள்கையை அரசியல் சாசனத்தை வகுத்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.

சென்னை போக்குவரத்துக்கு மாற்றுத் திட்டம்:

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொழில், வேளாண்மை வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பாமக வெளியிட்டுள்ளது. அந்த வகையில், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்று போக்குவரத்து திட்டம் ஒன்றை பாமக சார்பில் வெளியிடுகிறோம்.

1984ல் 50 லட்சமாக இருந்த சென்னை நகர மக்கள் தொகை இப்போது 79 லட்சமாக அதிகரித்துள்ளது. ஏராளமான கார்களும், இருசக்கர வாகனங்களும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கி வருகின்றன.

சென்னையை வாழத்தகுந்த நகரமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேருந்து வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்தையும் ஒன்றோடொன்று இணைக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக 6 ஆயிரம் பேருந்துகளை நகரத்தில் இயக்க வேண்டும்.

மெட்ரோவால் பலன் இருக்காது:

பேருந்து மற்றும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு ஒரே பயணச்சீட்டை வழங்க வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டம் என்பது இந்த புதிய திட்டத்தை விட நூறு மடங்கு செலவு பிடிக்கும். மேலும் பூமிக்கு அடியில், பூமியில், பூமிக்கு மேலே என்று மூன்று விதமாக செயல்படக் கூடியது மெட்ரோ ரெயில் திட்டம். எனவே அது சிரமமானது.

அதிகமான மேம்பாலம் கட்டுவதும், அதிகமான வாகன நிறுத்தங்களை உருவாக்குவதும் பிரச்சனைக்கு தீர்வாகாது. அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட அவசியமான இடங்களில் மட்டுமே மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும்.

நீர்வழிச்சாலை வேண்டும்:

சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய்களை சீர்படுத்தி, நீர்வழிச்சாலை ஒன்றை உருவாக்குவதற்காக நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக பொதுமக்கள், பத்திரிகைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் விவாதம் நடத்தி, ஆலோசனை பெற வேண்டும். அதேபோல, சரக்குப் போக்குவரத்துக்கு என்று தனி திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும். பெருநகர திட்டக்குழு ஒன்றை உருவாக்கி, இதன் கீழ் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தை செயல்பட வைக்க வேண்டும்.

இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வழங்க இருக்கிறோம். இதனை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X