For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் புகாரில் ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன்

By Staff
Google Oneindia Tamil News

Jyothikumaran
டெல்லி: இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன், வீரர் ஒருவரை அணியில் சேர்ப்பதற்காக பணம் வாங்கியதாக தனியார் டிவி ஒன்று வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜோதிகுமரன்.

இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் செயலாளர் பதவியில் இருந்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிகுமரன். பல ஆண்டுகளாக இவர் இப்பதவியில் நீடித்து வந்தார்.

இந் நிலையில், ஆஜ் தக், தி நியூஸ் டுடே சேனல், ஜோதிகுமரன் வீரர் ஒருவரை அணியில் சேர்க்க பணம் வாங்கியதாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஹாக்கி வீரர் தேர்வு நியாயமாக நடக்கவில்லை. அங்கு பணம் விளையாடுகிறது.

இந்த ஊழல்கள் குறித்து ஹாக்கி சம்மேளனத் தலைவர் கே.பி.எஸ். கில் மெளனம் சாதித்து வருகிறார். இந்த டிவி சானலின் நிருபர் ஒருவர் ஜோதிகுமரனை சந்தித்தார். அப்போது, அந்த நிருபர் பரிந்துரைக்கும் நபரை அடுத்த மாதம் நடைபெறவுள்ள அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க தான் தயாராக இருப்பதாக ஜோதிகுமரன் தெரிவித்தார்.

இதற்காக முதலில் ரூ. 2 லட்சமும், பின்னர் ரூ. 3 லட்சமும் பணம் தர வேண்டும் என ஜோதிகுமரன் கோரினார். இதையடுத்து முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் பணம் ஜோதிகுமரனிடம் தரப்பட்டது. அவர் அதைப் பெற்றுக் கொண்டார்.

டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு தவணைகளாக பணம் தரப்பட்டது என்று அந்த செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜோதிகுமரன். இருப்பினும் இந்த செய்தி தவறானது, பொய்யானது என்று அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை வந்து சந்தித்தவர்கள், அஸ்லன் ஷா கோப்பைப் போட்டியை விட மிகப் பெரிய போட்டி ஒன்றை இந்தியாவில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வந்ததாக தெரிவித்தனர். அவர்களின் சந்திப்பின்போது வீரர்கள் தேர்வு குறித்து பேசவே இல்லை.

எனக்கு லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் கூறும் பணம், போட்டி தொடர்பான ஏற்பாடுகளுக்காக அவர்கள் கொடுத்த தொகை. அதைத்தான் நான் வாங்கினேன்.

நான் கடந்த ஒரு வருடமாகவே வீரர் தேர்வில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை. இது சங்கத் தலைவர் கில்லுக்கு நன்றாகத் தெரியும். எனவே இது அப்பட்டமான பொய் செய்தி என்று கூறியுள்ளார் ஜோதிகுமரன்.

இந்த நிலையில் ஜோதிகுமரன் செயலுக்கு கே.பி.எஸ். கில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் அவமானகரமான ஒன்று. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X