For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் சிலை அவமதிப்பு-தென் மாவட்டங்களில் பதற்றம் நீடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதையடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மதுரை, உசிலம்பட்டி, தேனி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கல்வீச்சு, சாலை மறியல்கள், பஸ்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்தன.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலையை கீழத்தோப்பைச் சேர்ந்த ஒரு பெண் தினமும் தண்ணீர் ஊற்றி கழுவி பூஜை செய்து வழக்கம்.

நேற்று காலை அந்த பெண் தேவர் சிலையை கழுவ வந்தார். அப்போது அந்த சிலை மீது சாணம் வீசப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தக் தகவல் பரவவே பார்வர்ட் பிளாக் கட்சியினர் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தினர் அங்கு கூடினர்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் நந்தபாலன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர்.

அப்போது தேவர் சிலையை சுற்றி நின்றவர்கள் அப் பகுதியில் சென்ற பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டதோடு கடைகளையும் சூறையாடினர்.

இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால், சிலையை அவமதித்தவர்களை கைது செய்யும் வரை போகமாட்டோம் என்று கூறியபடி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டினர்.

தீயணைப்பு படை வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தேவர் சிலை மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அதிகாரிகள் சுத்தம் செய்தனர்.

இதையடுத்து பார்வர்ட் பிளாக் கட்சியினர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதி கோரினர். போலீசார் அதற்கு அனுமதி தந்ததையடுத்து பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜைகளும் செய்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலைகள் அணிவித்து வழிபட்டனர்.

சிலை அவமதிப்பை கண்டித்து செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, கோரிப்பாளையம் அண்ணாநகர், கே.கே.நகர், கரிமேடு, பைபாஸ் ரோடு, தத்தனேரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர்களிலும் ஆங்காங்கே பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

இந் நிலையில் கோரிப்பாளையத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில அமைப்பாளர் பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக துணைத் தலைவர் ஒச்சாத்தேவர், தேவர் தேசிய பேரவையினர் உள்பட 46 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வந்து மாலை அணிவித்துவிட்டு சிலையை அவதூறு செய்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். கைது செய்யும் வரை இப்போது முதல் இங்கேயே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். என்று கூறி தேவர் சிலை எதிரே உள்ள பிளாட்பாரத்தில் சாக்கை விரித்து அதில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதனை அடுத்து டாக்டர் சேதுராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆனால் டாக்டர் சேதுராமன் உள்பட 25 பேர் மீண்டும் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

உசிலம்பட்டியில் கடைகள் அடைப்பு:

இந் நிலையில் உசிலம்பட்டியில் இரண்டாவது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை. சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு்ள்ளன.

தேவர் சிலையை அவமதிப்பு தகவல் கிடைத்ததும் அங்குள்ள 3 தியேட்டர்களிலும் காட்சிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

தேவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்யக்கோரி தேனி ரோட்டில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முருகன்ஜி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் அல்லிக்கொடி, ஒன்றிய செயலாளர் பரமதேவர், ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, பிரமலைக் கள்ளர் பேரவை மாநில செயலாளர் ராஜபாண்டி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மறியிலில் ஈடுபட்ட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமங்கலத்தில் பஸ்கள் சிறைப்பிடிப்பு:

இதற்கிடையே சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்திலும் பஸ் மறியல் போராட்டம் நடந்தது. விக்கிரமங்கலம் கிராமத்தில் 5 பஸ்களை சிறைபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தால் மதுரையிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் இன்றும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. கோரிப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சி பகுதியில் மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற 3 பஸ்கள் உடைக்கப்பட்டன. மானாமதுரையை அடுத்த கிருங்காகோட்டையில் பொதுமக்கள் மறியலில் ஈடு பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களால் மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பரமக்குடியில் இன்று 9 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. பசும்பொன் கிராமத்தில் இன்று காலையும் பல அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

அதே போல ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி ஆகிய இடங்களிலும் பஸ்கள் மீது தாக்குதல் நடந்தது. முதுகுளத்தூரில் இருந்து கமுதி சென்ன அரசு பஸ்சை கோட்டைமேட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அருகே முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியது.

இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்களில் இருந்து இறங்கி ஓடினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X