For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாய்ந்தது பிஎஸ்எல்வி: 10 சாட்டிலைட்களையும் வெற்றிகரமாய் ஏவியது!

By Staff
Google Oneindia Tamil News

pslv-c9
சென்னை: உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது.

ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக பிரியத் தொடங்கிவிட்டன. முதலில் கார்டோசாட், ஐஎம்எஸ் ஆகிய செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணி்ல் ரிலீஸ் செய்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 8 நானே செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தியது.

இப்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிடப்பட்டது.

அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இதையடுத்து வரிசையாக 10 சாட்டிலைட்களையும் புவி வட்டப் பாதையில் பி.எஸ்.எல்.வி. வரிசையாக ஏவியது.

இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும். உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம்.

உலக சாதனை:

இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

திருப்பதியில் மாதவன் நாயர்:

முன்னதாக பி.எஸ்.எல்.வி -சி9 சிறப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

சனிக்கிழமை இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளை மாதவன் நாயர் மேற்கொண்டார். நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.

சந்திராயன் ஆய்வு தீவிரம்:

10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் ஏவி சாதனை படைத்த சந்தோஷத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பிஎஸ்எல்வி -சி9 மூலம் செலுத்தப்பட்ட பத்து செயற்கைக் கோள்களும் புவி வட்டப் பாதையில் விடப்பட்டுள்ளன. இது வெற்றிகரமானது, மிகவும் அரியசாதனை, மிகப் பெருமையாக உள்ளது. விஞ்ஞானிகள் அனைவரும் அந்த திரில்லில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

அடுத்த கட்டமாக சந்திராயன் திட்டத்தின் வேலைகளில் விஞ்ஞானிகள் மூழ்கவுள்ளனர். நாளை முதல் இந்த ஆய்வு தொடங்குகிறது.

பல செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் செலுத்த முடியும், அந்தத் திறமை இந்தியாவிடம் உள்ளது என்பதை உலகுக்கு நாம் இன்று எடுத்துக் காட்டியுள்ளோம் . ரஷ்யா மட்டுமே இதற்கு முன்பு ஒரே ராக்கெட் மூலம் 13 செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது. ஆனால் அது வெற்றிகரமாக முடிந்ததா என்ற விவரம் தெரியவில்லை.

நிலவுக்கு செல்லும் திட்டத்தை இந்த ஆண்டின் 3வது கால் பகுதியில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாதவன் நாயர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X