For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸை புள்ளி விவரங்களால் 'காய்ச்சிய' முதல்வர்!

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு கொடுக்கும்போது, அமைச்சரவை மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது என்றும், சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்றும் ராமதாஸ் கூறியுள்ள 'நல்ல யோசனை'யை, 2011ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு வந்து நிறைவேற்றட்டும் என முதல்வர் கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:

கேள்வி: நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடியதும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடியதுமான தொழில் திட்டங்கள் ஏராளமாக வர வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: அதற்காகத் தானே தமிழக அரசும் இடைவிடாமல் முயன்று கொண்டிருக்கிறது. சென்னையிலே இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களா என்றும், டாட்டாவையும் கிஷோர்களையும், குஹாக்களையும் தொழிற்சாலை தொடங்க அனுமதிப்பதா என்றும் கேள்வி கேட்டுக் கொண்டே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று கூறுவது எப்படி பொருத்தமாகும்?. தொழிற்சாலைகளைத் தொடங்கினால்தான் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தான் அந்த முயற்சியிலே தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

கேள்வி: தொழிற்சாலைகளை மிக மிகப் பின்தங்கிய மாவட்டங்களிலே தொடங்க வேண்டுமென்று டாக்டர் கூறுவதைப் பற்றி?

பதில்: இது தான் நம்முடைய எண்ணமும் ஆகும். அதனால் தான் ஏற்கனவே ஆட்சிக்கு வந்தபோதே, நீதியரசர் ரெத்தினவேல் பாண்டியன் தலைமையில் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்பதற்காக குழு ஒன்றையே அமைத்தோம். பின் தங்கிய பகுதியான ஓசூரில் சிப்காட் வளாகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினோம்.

மிக மிகப் பின் தங்கிய பகுதிகளிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்பது நம்முடைய விருப்பம். அதைத் தான் தொழில் தொடங்க முன் வருபவர்களிடம் எல்லாம் சொல்கிறோம். நாங்குனேரியில் சிறப்பு தொழில் வளாகம் முரசொலி மாறன் முயற்சித்து தொடங்கப்பட்டது பின் தங்கிய பகுதி என்பதால் தானே!.

ஆனால் ஆயிரம் கோடி ரூபாய், இரண்டாயிரம் கோடி ரூபாய் என்று முதலீடு செய்ய முன் வருபவர்களும் ஒத்துக்கொள்ள வேண்டுமல்லவா?

சென்னைக்கு அருகே தொழிற்சாலை தொடங்க அனுமதிக்கவில்லை என்றால், வருகிறவர்களும் ஆந்திராவிற்குப் போகிறோம், கர்நாடகத்திற்குப் போகிறோம் என்று போய் விடுவார்கள். அந்த மாநிலங்கள் எல்லாம் மேலும் பல சலுகைகளை கொடுத்து இவர்களுக்கு வரவேற்பளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஏன், டாட்டா கம்பெனி டைட்டானியம் தொழிற்சாலையைத் தொடங்க தூத்துக்குடி மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தபோது, இதே டாக்டர் ராமதாஸ் அவர்கள் அவசர அவசரமாக அங்கே சென்று ஒரு சென்ட் நிலத்தைக் கூட கொடுக்க விடமாட்டேன் என்று போராட்டம் நடத்தவில்லையா?. அப்போது அது பின் தங்கிய மாவட்டம் என்பது நினைவில்லையா?.

இவர்கள் நடத்திய அந்தப் போராட்டத்தால் அந்தத் தொழிற்சாலை இன்னமும் வரவில்லையே.

அதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் பெறவிருந்த வேலை வாய்ப்பு போய் விட்டதே?. அதையெல்லாம் அந்த இளைஞர்கள் நினைக்காமலா இருப்பார்கள்? தொழில் தொடங்க முன் வந்தது யார்-அதைத் தடுத்தது யார்? அதனால் ஏற்பட்ட விளைவு என்ன? என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

பின் தங்கிய பகுதியான ஓசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்படும் என்று அறிவித்தபோது, அதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிக்கவில்லையா?

அரசின் சார்பில் குறிப்பாக மிக மிகப் பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்கத் தான் முயற்சிக்கிறோம். ஒரு சில முதலீட்டாளர்கள் அதை ஏற்று வேறு மாவட்டங்களிலும் தொழில் தொடங்க தற்போது முன் வருகிறார்கள்.

அதனால் தான் தகவல் தொழில் நுட்ப மையங்களை மதுரையிலும், கோவையிலும், திருச்சியிலும், சேலத்திலும், நெல்லையிலும், வேலூரிலும் தொடங்குவதாக திட்டமிட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

கேள்வி: 1999ல் ஹைதராபாத்தில் கிரீன்பீல்டு விமான தளம் கட்டப்பட்டது. அதே போன்று பெங்களூரில் இன்னும் இரண்டு மாதங்களில் விமான தளம் கட்டி முடிக்கப்பட உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இது போன்று இன்னும் கட்டப்படவில்லை. இதற்கு யார் காரணம்? சென்னையில் பசுமை வயல் வானூர்தி நிலையம் வேண்டாம் என்று நானா சொன்னேன்? நானா முட்டுக்கட்டை போட்டேன்? பிறகு ஏன் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்று டாக்டர் ராமதாஸ் கேட்கிறாரே?

பதில்: டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கே நன்றாகத் தெரியும். சென்னையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கிய போதே, அதற்கான இடத்தை எடுக்க முயற்சித்த நிலையில், இதே டாக்டர் ராமதாஸ் அவர்கள் உட்பட விரிவாக்கம் தேவை என்றாலும், அதற்காக இடத்தை எடுக்கக் கூடாது என்று சொல்லவில்லையா?

19.1.2007 அன்று பா.ம.க. சார்பில் விடப்பட்ட செய்தி வெளியீட்டில் 'மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது என்ற திட்டத்தை நிறைவேற்றினால் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அனகாபுத்தூர், பொழிச்சலூர், பம்மல், கவுல் பசார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 583 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் நிலைமை ஏற்படும். அதனால் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை அகற்ற வேண்டிய ஆபத்து உள்ளது' என்றெல்லாம் தெரிவித்ததோடு, டாக்டர் ராமதாஸ் அதே நாளில் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கே வாழும் மக்களிடையே பேசி அதுவும் ஏடுகளிலே வெளிவரவில்லையா?

10.3.2007 அன்று டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கை என்ன? தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு ஈடாக சென்னைப் பெருநகரிலும் வானூர்தி போக்குவரத்து வசதி பெருக வேண்டும் என்பதிலும், அதனால் பொருளாதார வளம் பெருகும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. பொருளாதாரம் வளம் பெற வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டு காலமாக வீடுகளைக் கட்டி, அங்கு வசித்து வரும் மக்களை கட்டாயமாக வெளியேற்றி அதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரத்தை சீர் குலைக்க வேண்டுமா, இது மனித நேய நடவடிக்கையா என்பதை அரசு சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

குடிசைகளையும், ஓட்டு வீடுகளையும் அகற்றி வானூர்தி நிலையத்தை விரிவாக்கம் செய்யப் போகிறோம், அப்படிச் செய்தால் சென்னை, சிங்கார சென்னையாக மாறும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?' என்று கேட்டிருக்கிறார்.

மீண்டும் 19.4.2007 அன்று டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம், காட்டுப்பாக்கத்தில் 800 ஏக்கர் கையகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. விரிவாக்கம் கூடாது, புதிய விமான நிலையத்தைத் தான் அமைக்க வேண்டுமென்று கூறினார்.

அதற்குப் பிறகு தானே அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டு, மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அப்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றியும் மத்திய அமைச்சருடன் விரிவாக கலந்து பேசி ஜூன் திங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

தொடர்ச்சி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X