For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தபுரம் இனி உத்தமபுரமாக திகழும்- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இதுவரை சமத்துவம் நிலவாத உத்தபுரம் இனிமேல் உத்தமபுரமாக இருக்கட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இன்று காலை அதிரடியாக இடிக்கப்பட்டது. இந்தத் தகவலை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பாமக), நன்மாறன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்), செல்வம் (விடுதலைச்சிறுத்தைகள்) ஆகிய உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதன் பின்னர் பேசிய அதிமுக உறுப்பினர் துரைராஜ், ஒரு அரசியல் கட்சி ஆதாயம் தேடுவதற்காக இந்த பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. நேற்று கூட அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் மதுரை கலெக்டரிடம் தங்கள் குடும்ப அட்டைகளை கொடுத்துவிட்டு அங்கு வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லை என்று ஊரைவிட்டு வெளியேறும் நிலை உள்ளது; இதற்கு அரசு என்ன பரிகாரம் வைத்திருக்கிறது என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் நன்மாறன், மீண்டும் இந்த பிரச்சனையை கிளப்பினால் கலவரம் உருவாகும் நிலை வரும். எனவே அப்படிப்பட்ட முயற்சியில் முன்னாள் ஆளும் கட்சி ஈடுபட வேண்டாம் என்றார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மதுரை மாவட்டம் உத்தபுரம் பகுதி பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்ச்சி அலைகளை உருவாக்கி இருந்ததை நாம் நன்கு அறிவோம். இந்த பிரச்சனை ஜாதி மோதலாக உருமாற்றம் பெறுமோ என்று அச்சம் ஏற்பட்ட நேரத்தில் தான் தற்போது ஒரு சுமூக சூழல் ஏற்பட்டுள்ளது.

உறுப்பினர் துரைராஜ் குறிப்பிட்டது போல, இரு சமூகத்தினருக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக சொல்ல முடியாது. அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் சுவர் இருப்பதை அவமானமாக கருதி அதனை இடிக்க வேண்டும் என்று ஆவேசமாக சொல்கின்றனர். ஆனால் இதனை அனுமதிக்க மாட்டோம் என்று மற்ற சமூகத்தினர் கூறுகின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கலவரம் விளைவாக அங்கு சுவர் எழுப்பப்பட்டது. அதன் பிறகும் அவ்வப்போது கலவரங்கள், மோதல்கள் அந்த பகுதியில் நடைபெற்று வந்துள்ளன. மீண்டும் அத்தகைய நிலவரங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையின் காரணமாகவே அங்கு அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பிரச்சனையை உறுப்பினர் என்னுடைய கவனத்திற்கும், இந்த அவையின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

நானும், கலெக்டருடன் தொடர்பு கொண்டு உத்தபுரத்தில் பாதையும் வேண்டும்; மற்ற பிரிவினருக்கு பாதுகாப்பும் வேண்டும்; அதற்குரிய நடவடிக்கையை எடுங்கள் என்று சொன்னேன். அதன்படி அந்த நீண்ட உயர்ந்த சுவரில் ஒரு பெரிய நுழைவாசலை உருவாக்கி வழியை ஏற்படுத்தி அந்த வழியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உருவாக்கியிருக்கிறோம்.

இரு சமூகத்தினரும் அங்கு சகோதரத்துவத்துடன் வாழட்டும் என்று இதனை செய்துள்ளோம். இந்த தீர்வில் கோபம் கொண்டவர்கள் தங்களை உயர் வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி கலெக்டரிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை வீசிவிட்டு தாங்கள் மலைப்பகுதிக்கு சென்று வாழப் போகிறோம் என்று சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் கோபத்தின் காரணமாகவே இப்படி நடந்து கொண்டதாக கருத வேண்டுமே தவிர, அவர்களையும் ஜாதியின் மீது விருப்பம் உள்ளவர்களாக நாம் கருதக் கூடாது.

ஆண்கள்தான் மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார்களே தவிர, அவர்கள் வீட்டு பெண்கள் இன்னும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தான் இருக்கிறார்கள். பரவாயில்லை பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

ராணுவத்தையும் வரவழைப்போம்:

பெரியார், அண்ணா பட்டப்பாடுகளின் விளைவாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். ஆண்களும் முன்னேறுவார்கள். இந்த அரசை பொறுத்தவரை அமைதி வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அங்கு வாழும் உயர் ஜாதி வர்க்கத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்றால், மத்திய அரசிடம் பேசி ராணுவத்தை கூட வரவழைத்து தருகிறோம்.

ராணுவம் வரவழைக்கப்படும் என்கிற சுடு சொல்லைவிட இன்னும் ஜாதி இருப்பதாக ஒப்புக் கொள்வது தான் பெரிய அவமானமாகும். ஜாதி வேற்றுமை கூடாது. இதனால் சிந்தப்படும் ரத்தம் நம் ரத்தம். பாதிக்கப்படுவர்கள் நம்முடைய மக்கள் என்பதை உணர்ந்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இதுவரை சமத்துவம் இல்லாமல் இருந்த நிலைமாறி உத்தபுரத்தில் இன்று சமத்துவம் ஏற்பட்டிருப்பதால் இனி உத்தபுரத்தை உத்தமபுரம் என்று அழைக்கலாம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X