For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கட்டப் பஞ்சாயத்து' மகளிர் காவல் நிலையங்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மகளிர் போலீஸ் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து அலுவலகங்களாக மாறி வருகின்றன என சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி குற்றம் சாட்டினார்.

சட்டமன்றத்தில் உள்துறை- காவல்துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தீண்டாமை தொடர்பான விவகாரங்களில் போலீசார் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோவிலை போலீசாரும்-மாவட்ட நிர்வாகத்தினரும் துணிந்து திறந்தார்கள். அதற்காக போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. கடைசியில் அது திருவிழாவாக மாறி இனிதே நடந்து முடிந்தது. தீண்டாமையை அகற்றுவதில் போலீசும்-அரசும் சிறப்பாக செயல்படுகின்றன. இதற்கு உத்தப்புரம் சம்பவம் சிறந்த உதாரணம்.

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் ஆலையில் தொழிற்சங்க பிரச்சினையில் அந்த நிர்வாகத்துக்கு நிர்வாகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏ யசோதா பேசுகிறார். அது தவறு. போலீசார் என்கவுன்ட்டர் என்ற பெயரில் குற்றவாளிகளை சுட்டு கொல்வதற்கு பதிலாக அவர்களை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். போலீசாரின் அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும்.

மகளிர் போலீஸ் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து அலுவலகங்களாக மாறி வருகின்றன. பெண் உரிமை கொள்கை பற்றி அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இளம் பெண் போலீசாருக்கு நைட் டூட்டி போடப்படக் கூடாது. போலீஸ் சங்கம் வைக்க அனுமதிக்க வேண்டும்.

சுதர்சனம் (காங்கிரஸ்): ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்துக்கு ஆதரவாக யசோதா பேசவில்லை. அங்குள்ள நிலைமையைத்தான் பேசினார்.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): யசோதா, சட்டசபை காங்கிரஸ் துணைத்தலைவர் போல் அல்லாமல், அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் போல் செயல்படுகிறார்.

யசோதா (காங்கிரஸ்): நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ. அங்கு பார்த்ததைத்தான் சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பேசுகிறார். வெளிநாட்டவருக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை. காந்திய கொள்கை மீது நம்பிக்கை கொண்டவள் நான்.

செங்கோட்டையன் (அதிமுக): கூட்டணி கொள்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதையே இது (மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் மோதல்) காட்டுகிறது.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு): சிலை அவமதிப்பு, பெயர் பலகைகள் அவமதிப்பு போன்ற வன்முறை வெறியாட்டங்கள் தொடருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக்கி தமிழக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த, வரும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து சிலர் தூண்டி விடுகின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது.

போலீசார் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக கலவரத்தை உருவாக்குகின்றனர். போலீசாரின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும்.
வீரப்பனை பிடிக்கச் சென்ற அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அச்சம் காரணமாக கமிஷன் முன்பு சாட்சியளிக்க வரவில்லை. அவ்வாறு விடுபட்டவர்களின் பட்டியலை ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை தர வேண்டும்.

ஜி.கே.மணி (பா.ம.க): அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களில் விடுபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: விடுபட்டவர்கள் என்றால் நான்கைந்து பெயர்களைக் கொடுத்தால் பரவாயில்லை. 820 பெயர்களை கொடுத்திருக்கிறீர்கள்.

ராமசாமி (காங்கிரஸ்): தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூலிப் படைகளால் தான் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் மீதான தடைக் காலம் முடிவடையவுள்ளது. இதை நீட்டிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

வி.பி.கலைராஜன் (அதிமுக): தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. விதிமுறைகளை மீறி போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சென்னையில் மனை ஒதுக்கியது பற்றி அரசு விளக்க வேண்டும். என் வீட்டையும், தந்தையையும் தாக்கியவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ஹெல்மெட் போட அவசியம் இல்லை என்று முதல்வர் கூறினார். ஆனால், வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.

செல்வம் (விடுதலை சிறுத்தைகள்): பெண் இன்ஸ்பெக்டர்கள் காவல் நிலையத்துக்கு வருகிறவர்களை மரியாதை குறைவாக தாறுமாறாக பேசுகிறார்கள் என்றார்.

English summary
Women police stations breaching rules: MLAs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X