• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விலைவாசியை குறைக்க மத்திய அரசுக்கு ஜெ. 15 நாள் கெடு

By Staff
|

Jayalalitha
சென்னை: அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தை 15 நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரிசி, பருப்பு, உப்பு, சமையல் எண்ணை, காய்கறிகள், பழங்கள் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது.

கட்டுமான பொருட்கள் விலை சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. கடந்த சில மாதங்களில் பல மடங்கு விலைகள் உயர்ந்துள்ளன.

நாட்டின் பணவீக்கம் 7.61 சதவீதம் என்று கணக்கிட்டு உள்ளனர். மொத்த விற்பனை விலையை வைத்து இந்த கணக்கீடு செய்துள்ளனர். இடைத்தரகர்கள் விலை, சில்லறை விலை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு தன்பங்குக்கு சொத்துவரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி உள்ளது. பால்விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலம் விலை விண்ணை முட்டுமளவுக்கு உள்ளது. பஸ்கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டுமானப் பொருள்கள் பல மடங்கு விலை உயர்வு காரணமாக கட்டடச் செலவு அதிகமாகி வீட்டு உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வீட்டு வாடகைகளை உயர்த்திவிட்டனர். கடந்த 6 மாதங்களில் வீட்டு வாடகை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் சாதாரண மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சாமானிய மக்களின் பிரச்னை புரியவில்லை. அதை தீர்த்து வைக்கவும் தெரியவில்லை. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க முடியவில்லை. இறக்குமதி பொருள் விலையேற்றம், அமெரிக்க கொள்கை, சர்வதேச விலை என்று ஏதேதோ சொல்கிறார்கள்.

செங்கல்பட்டில் விளையும் புளி, வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு, நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டை, ஈரோட்டில் விளையும் மஞ்சள் பற்றி சொல்கிறோம். இவற்றை சென்னை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதில் எப்படி விலை ஏற்றம் வந்தது.

விலை ஏற்றத்தை குறைப்பதாகக் கூறி மத்திய அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு தடவை நடவடிகை எடுக்கும்போதும் பணவீக்கம் அதிகரித்தபடி இருக்கிறது.

இப்போது தொழில் நிறுவனங்களிடம் விலையை குறையுங்கள் என்ற வேண்டுகோள் விடு்ககிறார்கள். தொழிற்சாலைகளுக்கு எத்தனையோ சலுகை வழங்கியிருக்கும் நிலையில் அவர்களிடம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுப்பது நிதியமைச்சரின் பலவீனத்தை காட்டுகிறது.

அவருடைய அறிக்கைகலால் மக்களின் காலி வயிறு நிரம்பப் போவதில்லை. அவரும், பிரதமரும் தாங்கள் படித்த பொருளாதாரத் தத்துவத்தை கூறிக் கொண்டிருக்காமல் விலையைக் குறைக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விலை ஏற்றத்துக்கு ஆன்லைன் வர்த்தகம், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் ஆகியவைதான் முக்கிய காரணமாக உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொதுவளத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். வியாபாரிகள் 50 ஆயிரம் டன்வரை இருப்பு வைக்கலாம் என்று இருப்பதை குறைக்க வேண்டும். பதுக்கல் மீது அரசு எந்திரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும். இவற்றை செய்தால் தானாக விலை குறையும்.

விவசாயத்தால் லாபம் இல்லை என்பதால் விவசாயிகள் அந்த தொழிலை கைவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய மானியம் வழங்கி விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். உலகமயமாக்கல் என்ற பெயரில் மானிய விஷயத்தில் கண்மூடித்தனமாக நடக்கக்கூடாது. விவசாய உற்பத்தியை ஊக்குவிக்காவிட்டால் வரும் காலத்தில் பெரும் பிரச்னைகளை நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பெட்ரோல், டீசல், சுங்கவரி, கலால் வரியை குறைக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை 15 நாளில் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு எடுத்து விலைவாசியை கட்டுப்படுத்தத் தவறினால் பலவீனமான, ஊழல்நிறைந்த இந்த அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையி்ல் ஜெயயலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X