ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற கருணாநிதி உத்தரவு

ஓகேனக்கல் வந்து சேரும் காவிரி நீரை சுத்திகரிப்பு செய்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீராக வழங்க ஜப்பான் நிதியுதவியுடன் தமிழக அரசு திட்டத்தை துவங்கியது.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக பற்ற வைத்த இந்த நெருப்பு மிக வேகமாகப் பரவி திட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. தமிழர்கள், தமிழர்களின் அமைப்புகள், தமிழக பஸ்கள் தாக்கப்பட்டன. பதிலுக்கு தமிழகத்திலும் கர்நாடக அமைப்புகளும் கன்னடர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் கர்நாடக பஸ்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.
இந் நிலையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த நிலையில் ஓகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கர்நாடக தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு உதவும் வகையில் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந் நிலையில் இப்போது தேர்தல் முடிவடைந்து நாளை (ஞாயி்ற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
இதற்கிடையே நேற்று கருணாநிதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ரூ.1334 கோடி மதிப்பிலான ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றி முடிக்குமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.
சென்னை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்:
அதே போல சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் தற்போதைய நீரின் இருப்பு குறித்து ஆய்வு செய்த கருணாநிதி, நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை விழிப்புடன் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை மாநகரில் கழிவு நீரகற்று அமைப்பு இல்லாத தெருக்களில் கழிவுநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்கவும்,
மீஞ்சூரில் அமைக்கப்பட்டுவரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை 2009ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்கவும்,
கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே தொடங்கிட விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.4470.17 கோடி மதிப்பில் சென்னை, மதுரை, கோவை நகரங்களிலும் அவற்றை சார்ந்த நகர்ப்புற பகுதிகளிலும் நடைபெற்றுவரும் சாலைகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி, வீட்டு வசதி, குடிசைப்பகுதி மேம்பாடு போன்ற கட்டமைப்பு பணிகள் குறித்து கருணாநிதி பல்வேறு கேள்விகள் எழுப்பி, விளக்கங்கள் பெற்றார். இந்தத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற உத்தரவிட்டார்.
சென்னை வளர்ச்சி திட்டங்கள்:
சென்னை மாநகரின் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த கருணாநிதி, சாலைகளில் கிரானைட் கற்கள், இரும்பு கிராதிகள், செடிகள் ஆகியன அடங்கிய மைய தடுப்புச் சுவர்கள் அமைத்தல், மெரினா, எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளை அழகுபடுத்துதல், பூங்காக்களை சீரமைத்தல்,
அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல், நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைத்தல், ஒரே சீரான போக்குவரத்து சைகைப் பலகைகளை அமைத்தல், போக்குவரத்து திடல்களிலும், சாலையோர பூங்காக்களிலும் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான சிற்பங்களை அமைத்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்தி விரைந்து நிறைவேற்றி முடிக்க அறிவுறுத்தினார்.