For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னத்த சொல்ல.. காலம் மாறிப் போச்சு-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: மதுவுக்கு அடிமையானவர்களும் அதற்கு ஆதரவானவர்களும் ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் மாறி, இன்றைக்கு மது ஒழிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இளைஞர்கள் இளம் வயதிலேயே மது அருந்தத் தொடங்கி விடுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதில் முதன்முதலாக மது அருந்தத் தொடங்கிய இளைஞர் சமுதாயம் இன்றைக்கு 19 வயதிலேயே மது அருந்தத் தொடங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய இளைஞர்களிடையே 15 வயதிலேயே மதுப்பழக்கம் தொற்றிவிடும்.

மதுப்பழக்கம் 60க்கும் அதிகமான நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் எத்தனை உயிரிழப்பு ஏற்படுகிறதோ, அதே எண்ணிக்கையிலும் உயிரிழப்பு மது அருந்துவதாலும் ஏற்படுகிறது என்றெல்லாம் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

மது என்பதும், மதுவிலக்கு என்பதும் வெறும் வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாநிலத்தின் பொருளாதாரம், உற்பத்தி, வேலைத் திறமை, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. குடிப்பழக்கத்தால், உற்பத்தி குறைகிறது. குடிப்பழக்கத்தால் உடல் நலம் கெடுகிறது. குடிக்கு அடிமையானவர்களின் உடல் நலச் சீர்க்கேட்டைப் போக்க பெருமளவு பணம் செலவிடப்படுகிறது. எனவேதான் மதுவினால் வரவு எட்டணா என்றால், செலவு பத்தணா என்று சொல்வதுண்டு.

மதுவிலக்கை நாடு முழுவதும் கொண்டுவரட்டும் என்று காத்திருந்து அதுவரை இங்கே மதுவை அனுமதிக்கத் தேவையில்லை.

தமிழ்நாட்டிற்கென்று வரலாற்றுப்படி தனிச் சிறப்பு இருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் மது இருந்தபோது, தமிழகத்தில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் 5 மைல் சுற்றளவில் மதுவே கூடாது என்று மக்களைச் சொல்ல வைத்தவர் ராஜாஜி.

கோடி கோடியாய் வருமானம் வரும் மதுக்கடைகளைத் திறந்துவிடுங்கள் என்று சொன்னபோது, மக்களின் நிம்மதி, கோடான கோடி பெறும் என்று கருதி, மதுக்கடைகளைத் திறக்க மாட்டேன் என்று உறுதிபடச் சொன்னவர் அண்ணா. அவர் மறைந்தாலும், மதுக்கடைகளை இங்கே திறந்தபோது மது ஒழிப்பை உள்ளடக்கிப் பெரும் போராட்டத்தை அறிவித்தவர் காமராஜர்.

இந்தத் தலைவர்கள் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு மதுக்கடைகளைத் திறப்பதைத் தவிர இனி வேறு வழியில்லை என்று எம்.ஜி.ஆர். சொன்னார் என்று சொல்லி மதுக்கடைகளைத் திறந்துவிட்டதற்கு நியாயம் கற்பிக்க முயற்சிப்பது வியப்போ வியப்பு.

மதுவிலக்குப் பற்றிப் பேசுவது இன்றைக்குச் சில விதிவிலக்கான வேதாந்திகள் மட்டுமே என்ற அளவுக்கு ஏளனம் செய்யப்படுகிறார்கள்.

திடீர் மகாத்மாக்கள்' என்றும், மகாத்மா காந்தியின் பேரனால் கூட மதுவிலக்குக் கொள்கையில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியாது என்ற பாராட்டைப் பெறும் அளவுக்கு அரசியல் அரங்கில் சிலர் உரத்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் முதல்-அமைச்சரே ஏளனம் செய்திருக்கிறார்.

மதுவுக்கு அடிமையானவர்களும் அதற்கு ஆதரவானவர்களும் ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் மாறி, இன்றைக்கு மது எதிர்ப்பும் மது ஒழிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போரும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். காலம் மாறிப்போச்சு என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன சொல்ல முடியும்?.

மதுவிலக்கை செயல்படுத்தினால், கள்ளச் சாராயம் பெருகிவிடும். கள்ளச் சாராயச் சாவுகள் அதிகரிக்கும் என்றும், எந்த ஆட்சி பொறுப்பிலே இருந்தாலும் சாராயச் சாவுகள் மட்டும் நடைபெற்று வந்திருக்கின்றன என்ற வாதத்திலும் சாரம் இல்லை.

தமிழகத்தில் மதுவிலக்கு செயல்பாட்டில் இருந்தபோது, கள்ளச்சாராயச் சாவுகள் என்பது பெரும்பாலும் இல்லை. இங்கே மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகுதான் சாராயச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.

மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வருமானம் குறையும். ஆனால், மக்களின் கையில் வருமானம் மிஞ்சும். அவர்கள் கையில் மிஞ்சும் வருமானம் துணி மணியாய், நிலபுலனாய் மாறும். அதனால், மக்களுக்கும் அவர்கள் மூலம் அரசுக்கும் வளம் சேரும். எனவேதான் மதுக்கடைகளை ஒழித்து மக்களை வளம்பெறச் செய்யுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X