For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு வனிதாவின் கல்வி தொடர கை கொடுத்த தட்ஸ்தமிழ் வாசகர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு: பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், குடும்பச் சூழல் காரணமாக, மேல் படிப்பு படிக்க முடியுமா, முடியாதா என்ற கவலையில் இருந்து வந்த ஈரோடு வனிதாவுக்கு, படிக்க தட்ஸ்தமிழ் வாசகர்களின் நிதியுதவி குவிந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள ராஜாஜி வீதியில் வசிக்கிறார் வனிதா. இவரது கதை சோகமானது. தந்தை பெயர் மூர்த்தி. டெம்போ ஒட்டுனராக உள்ளார். தாய் பூங்கொடி.

வனிதாவிற்கு சிறு வயது முதலே படிப்பதில் நல்ல ஆர்வம். நன்கு படித்து வந்த அவர் காலத்தின் கோலமாய், 16 வயதில் திருமண மேடை ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது.

வசந்த காலம் அவரது வாழ்வில் ஆறே வருடங்கள் மட்டுமே இருந்தது. அவரது கணவர் மூளை காய்ச்சல் நோயால் மரணமடைந்தார். கணவரை இழந்து, கையில் குழந்தையோடு மீண்டும் தாய் இல்லம் புகுந்தார் வனிதா.

கணவரை இழந்து, குழந்தையோடு கவலையில் உழன்ற வனிதாவுக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. பபடிக்க வைக்க கோரி வீட்டில் போராடினார். ஆனால் வீட்டிலோ வசதியில்லை. இந் நிலையில் உறவினர்கள் சிலரின் உதவியுடன், சேலத்தில் உள்ள அரசு சேவை பள்ளியில் சேர்ந்து பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ படித்தார்.

பிளஸ் டூவில் 1200க்கு 1071 மார்க் பெற்றார். அத்தோடு இல்லாமல், ஆடை வடிவமைப்பு பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்து சாதனையும் படைத்தார்.

தட்ஸ்தமிழில் செய்தி:

ஆனால் மேற்கொண்டு படிக்க வீட்டில் வசதியில்லை. வனிதாவின் இந்த நிலை குறித்து தட்ஸ்தமிழ் விரிவாக செய்தி வெளியிட்டது.

இதையடுத்து பல நாடுகளையும் சேர்ந்த தட்ஸ்தமிழின் வாசகர்கள் வனிதாவுக்கு உதவ முன் வந்து இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் நம்மை தொடர்பு கொண்டனர். இதையடுத்து வனிதாவின் முகவரியை வெளியிட்டோம்.

இந் நிலையி்ல் வனிதாவையும், அவரது வீட்டினரையும் தொடர்பு கொண்ட இந்த வாசகர்கள் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர். பலர் நிதி உதவியையும் அனுப்பி வைத்து வனிதாவின் கல்விக் கனவை நனவாக்கியுள்ளனர்.

இப்போது வனிதா சோகம் விலகி தெளிவாகியிருக்கிறார். மேலும் படிக்க ஆசையாக இருக்கிறார். அவர் பேஷன் டெக்னாலஜி படித்தால் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் வனிதாவின் எண்ணம் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.

ஆசிரியர் பணிக்குச் செல்வதையே விரும்புகிறார் வனிதா. இதற்கு இவர் கூறும் காரணம், வியக்க வைக்கிறது. பேஷன் டெக்னாலஜியோ அல்லது பிற பி.இ. படிப்போ படித்தாதல் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம். ஆனால் அதை நான் விரும்பவில்லை.

என்னைப் போல எத்தனையோ பேர் நிறைய திறமையுடன் இருப்பார்கள். அவர்களுக்கு பாடம் போதிப்பதையே நான் விரும்புகிறேன். நான் கற்ற பாடத்தை மற்றவர்களுக்குப் போதிக்க விரும்புகிறேன் என்கிறார் வனிதா.

வனிதாவின் வீட்டாரும் தட்ஸ்தமிழ் மற்றும் அதன் வாசகர்கலின் உதவியால் மனம் நெகிழ்ந்துள்ளனர். நமது செய்தியாளர் வனிதாவின் வீட்டுக்குச் சென்றபோது, அனைவரும் கண்ணீருடன் நன்றி கூறி வரவேற்றனர்.

வனிதா நம்முடன் பேசுகையில், எங்கள் குடும்பம் ஒரு ஏழைக் குடும்பம். அப்பா டெம்போ ஒட்டினால் தான் வீட்டில் அடுப்பு எரியும்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவுடன் வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆறு வருடத்தில் எனது கணவர் நோயால் மரணமடைந்து விட்டார்.

எனது குழந்தை சந்தோஷியும் நானும் எனது தாய் வீட்டிற்கு இடம் பெயர்ந்தோம். படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக தோழிகள் மூலம் சேலத்தில் உள்ள சேவை இல்லத்தில் சேர்ந்து கல்வி பயின்றேன்.மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றேன்.

பேஷன் டெக்னாலஜி பற்றிய மேல் படிப்பு படித்தால் பல லட்சம் சம்பளம் கிடைக்கும் என சிலர் கூறினார்கள்.

ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை போன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு என்றும் அழியாத கல்வியை தருவதே எனது லட்சியம்.

தட்ஸ்தமிழ் மூலம் எனக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது.

ஏழைகளுக்கு உள்ள ஒரே சொத்து கல்வி மட்டுமே. அந்த கல்வியை ஏழைகள் பெற ஒவ்வொரு நிமிடமும் பாடுபடுவேன் என்று வனிதா சொல்லி முடிக்கும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

குவிந்த உதவிகள்:

அமெரிக்காவை சேர்ந்த ஜெயசந்திரன் 101 அமெரிக்க டாலரையும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செந்தமிழ் செல்வன் ரூ.5.001மும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூர்த்தி என்பவர் ரூ.3,000 அனுப்பியுள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் ரூ.3,000மும் அனுப்பி உதவியுள்ளனர். மேலும் பலர் அவரை தொடர்பு கொண்டு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.

இந்த நல்ல உள்ளங்களுக்கு தட்ஸ்தமிழ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வனிதாவின் கல்வி தொடர தட்ஸ்தமிழ் செய்தது சிறு உதவி தான். ஒரு சிறிய செய்தி தான். ஆனால் வனிதாவுக்கு உதவிக் கரம் நீட்டிய வாசகர்கள் செய்தது பேருதவி.

வனிதாவின் கல்வி கனவு நிறைவேற வாசகர்களாகிய உங்களுடன் இணைந்து தட்ஸ்தமிழும் வாழ்த்துகிறது.

(வனிதாவின் முகவரி: வனிதா, த/பெ. மூர்த்தி, 81, ராஜாஜி தெரு, வீரப்பன் சத்திரம், ஈரோடு-4. செல்போன் - 9442727012)

அன்புடன்,
ஏ.கே.கான்,
ஆசிரியர்,
தட்ஸ்தமிழ்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X