For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய கட்டணம்-பொறியியல் கல்லூரிகள் ஏற்க மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கட்டணத்தை கல்லூரிகள் ஏற்க மறுத்துள்ளன.

தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டண விவரத்தை தமிழக அரசு அமைத்த நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி இரு நாட்களுக்கு முன் அறிவித்தது.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, தேசிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு கட்டணம் ரூ.40,000ம் என்றும், அங்கீகாரம் பெறாத படிப்புக்கு கட்டணம் ரூ. 32,000 என்றும் அறிவித்தது.

அதே நேரத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அல்லாமல் கல்லூரி நி்ர்வாகத்தின் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 62,000 என அறிவித்தது.

அரசு நிர்ணயித்த இந்த கட்டணத்துக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.

தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு:

இந் நிலையில், தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் (கன்சார்டியம்) தலைவர் ஜேப்பியார் நிருபர்களிடம் கூறியதாவது:

நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம் நாங்கள் 6 மாதத்திற்கு முன்பே அறிக்கை அளித்தோம். அதில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தேசிய அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு உள்ள கல்லூரியில் படிக்க மாணவர்களுக்கு வருடத்திற்கு கல்வி கட்டணம் ரூ.75,000மும்,

தேசிய அங்கீகாரம் பெறாத கல்லூரியில் படிக்க மாணவர்களுக்கு ரூ.67,000மும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும், அரசு ஒதுக்கீட்டுக்கும் ஒரே கட்டணம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

அதன்பிறகு கடந்த 2 வாரத்திற்கு முன்பு எங்களை நீதிபதி கமிட்டி அழைத்து பேசியது. ஆனால் இறுதி முடிவு எடுக்கும் போது எந்தவித அறிவிப்பும் இன்றி எங்களிடம் கலந்து பேசாமல் கமிட்டி தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

அரசு-கல்லூரி நிர்வாக சீட் பங்கீடு 65-35 என்ற அளவில் இருப்பதையும் கன்சார்டியம் ஏற்கவில்லை. நிர்ணயித்த கட்டணத்தையும் ஏற்கவில்லை.

இதுபற்றி உடனே எங்களை அழைத்து பேசவேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் கொடுத்துள்ளோம். கமிட்டி அறிவித்துள்ள கட்டணம், சீட் பகிர்வு ஆகியவற்றை சராசரி செய்து பார்த்தால் ஒரு மாணவருக்குரிய கட்டணம் ரூ.42,000 தான் வருகிறது. இது நாங்கள் கோரிய கட்டணத்தைவிட ரூ.25,000 குறைவு.

கேரளாவில் அரசும் கல்லூரி நிர்வாகமும் தலா 50-50 என்று இடங்களை பகிர்ந்து கொள்கின்றன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர் ரூ. 1.5 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும். ரூ.17,500 கட்டணம் செலுத்த வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவருக்கு அங்கு கட்டணம் ரூ.75,000 ஆகும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.1 லட்சமாக உள்ளது.

கர்நாடகாவில் 45-55 என்ற அளவில் இட பகிர்வு உள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேர ரூ.25,000மும் நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.75,000மும்கட்ட வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரூ.1.25 லட்சம் கட்டணம். அங்கு சராசரி ரூ.72,000 வருகிறது.

இந் நிலையில் தமிழக அரசின் கமிட்டி எங்களுக்கு இந்த ஆண்டு நிர்ணயித்த கட்டணம் போதாது. ஒரு படிப்பு தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவுக்கு ரூ.40,000 செலுத்த வேண்டியுள்ளது.

அதே படிப்புக்கு அங்கீகாரம் பெற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டும். ரூ.25,000 ஆய்வு கட்டணம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு மாணவருக்கு ரூ. 1,000 கொடுக்க வேண்டும்.

கருத்தரங்கு நடத்த, தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல, மாணவர்களுக்கு மேலாண்மை, திறன்மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த புதிய கட்டணம் போதாது.

நீதிமன்றம் 100 சதவீத இடங்களை நாங்களே நிரப்பி கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. இதனால் மீண்டும் நீதிமன்றத்துக்கு போவது பற்றி எதுவும் இப்போது எதுவும் கூற விரும்பவில்லை.

மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கல்லூரி தொடங்க வேண்டும். அமைச்சர் பொன்முடி உடனே எங்களை அழைத்துப் பேச வேண்டும். இதுகுறித்து அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அழைத்து பேசுவார் என்று கருதுகிறேன் என்றார் ஜேப்பியார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X