For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக மகளிர் மாநாடு-கடலூரில் பிரமாண்ட ஏற்பாடுகள்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்: கடலூரில் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திமுக மகளிர் மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திமுகவில் வழக்கமாக பொதுவான மாநில மாநாடுதான் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் அணிக்கென தனியாக மாநில மாநாடு நெல்லையில் நடந்தது.

இந்த நிலையில் தற்போது மகளிர் மாநாடு கடலூரில் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடலூருக்கு வரும் சாலைகளில் கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவுக்கு திமுக கொடிகள், தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. கடலூரே குலுங்கும் வகையில் பிரமாண்டமான அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மாநாட்டுக்காக மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு அண்ணாநகர் என்றும், வளாகத்துக்கு தந்தை பெரியார் பெயரும், பந்தலுக்கு மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் பெயரும், மேடைக்கு அஞ்சுகத்தாயின் பெயரும், அரங்கத்துக்கு ராணி அண்ணா பெயரும், பந்தல் முகப்புக்கு வெற்றிச்செல்வி அன்பழகன் பெயரும், கொடிமேடைக்கு சத்தியவாணி முத்து பெயரும் சூட்டப்பட்டு உள்ளது.

பந்தலின் உள்அலங்காரப் பணிகள் நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பந்தல் முகப்பு அலங்காரப்பணிகள் தொடங்கியது.

மாநாட்டு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் இரவு, பகலாக செய்து வருகிறார்கள்.

மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதல் நாள் மாநாடு அரசியல் மாநாடாகவும், 2-ம் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடாகவும் நடக்கிறது.

முதல் நாள் மாநாடு அன்று பிற்பகல் 2 மணிக்கு பிரமாண்ட பேரணி நடக்கிறது. இந்த பேரணி முடிவில் மாநாட்டு தலைவர் உரைக்கு பிறகு படத் திறப்பு விழா நடக்கிறது. இதில் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி. பேசுகிறார்.

2-வது நாள் மாநாட்டில் பகலில் துணைப் பொதுச்செயலாளரும், உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

இரவு 7 மணிக்கு பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் பேசுகிறார். இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கலைஞர் கருணாநிதி உரையாற்றுகிறார்.

மாநாட்டுக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை வரவேற்று நகரமெங்கும் 100 இடங்களில் மின்விளக்கு அலங்கார கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 3 திசைகளில் இருந்தும் கடலூருக்கு வரும் சாலைகளில் இருபுறங்களிலும் கொடி-தோரணங்களால் அலங்கரித்து வருகிறோம்.

கும்பகோணம் சாலையில் சேத்தியாதோப்பில் இருந்தும், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டியில் இருந்தும், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் தவளைகுப்பத்தில் இருந்தும் சாலைகளின் இருபுறங்களிலும் சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு தி.மு.க. கொடி தோரணங்களால் அலங்கரித்து வருகிறோம். கொடி-தோரணங்கள் கட்டிய சாலைகளில் எந்த சாலையின் வழியாக வந்தாலும் மாநாட்டு திடலை வந்தடைந்து விடலாம்.

முதல் நாளில் கடலூரே குலுங்கும் அளவுக்கு சீருடை அணிந்த 3 லட்சம் பெண்கள் கலந்து கொள்ளும் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

பேரணியின் முன்பு குதிரைகள் மற்றும் ஓட்டகங்களில் பெண்தொண்டர்கள் அணிவகுத்து வருகிறார்கள், ஒவ்வொரு மாவட்டங்கள் சார்பிலும் கலைக்குழுக்கள் மற்றும் அலங்கார வண்டிகள் இடம் பெறும். பேரணியை முதல்வர் கருணாநிதி தனிமேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார் என்றார்.

பலத்த பாதுகாப்பு:

மாநாட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதுதொட்பாக மாநாட்டுப் பந்தல் மற்றும் பேரணி நடக்கும் இடங்களை டி.ஜி.பி., ஜெயின் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் இரண்டு நாட்களுக்கு முன் வந்து மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று, டி.ஜி.பி., ஜெயின் பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், விஜயகுமார், ஐ.ஜி., ராதாகிருஷ்ணன், டி.ஐ.ஜி.,க்கள், 10 எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.

பாதுகாப்புப் பணியில் கிட்டத்தட்ட 7000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனராம். டி.ஜி.பி., ஜெயின் மேற்பார்வையில் இரண்டு ஏ.டி.ஜி.பி.,க்கள், இரண்டு ஐ.ஜி.,க்கள், ஐந்து டி.ஐ.ஜி.,க்கள், 10 எஸ்.பி.,க்கள், 10 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 50 டி.எஸ்.பி.,க்கள், 150 இன்ஸ்பெக்டர்கள், 600 சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 கம்பெனி தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X