For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மை சொன்னா கவிதையால் திட்டுவதா-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உண்மை நிலையை சுட்டிக் காட்டுபவர்களை முதல்வர் கருணாநிதி வசைபாடி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே என்று மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நல்ல தரமான சான்று பெற்ற விதைகளை வினியோகிப்பது மற்றும் உரிய காலத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஒரு மாநில அரசின் தலையாய கடமையாகும். ஆனால், திமுக அரசு இதை செய்யத் தவறிவிட்டதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

விவசாயப் பயிர்களுக்கு மிக முக்கியமானதாக விளங்குவது தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை. இவற்றில், டி.ஏ.பி. போன்ற உரங்கள் பயிர்களுக்கு அடி உரமாகவும்; யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் மேல் உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் விதை நெல் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு பெருமளவுக்கு இருப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி விசாரித்த போது, உரங்கள் இன்னும் வரவில்லை என்ற பதில் தான் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கருக்கு மூன்று மூட்டை டி.ஏ.பி. உரம் தேவைப்படுகையில், சில கூட்டுறவு சங்கங்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி. உரமும் மற்றும் சில கூட்டுறவு சங்கங்களில் மூன்று ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி. உரமும் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகபட்சம் ரூ. 486 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உரத்தை ரூ. 800 அளவுக்கு விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்கும் நிலைக்கு ஏழை, எளிய விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

யூரியா, பொட்டாஷ், வேப்பம் புண்ணாக்கு போன்ற உரங்களும் தனியாரால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

ஏழை, எளிய விவசாயிகள், இடு பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பயிர்க் கடன் வழங்காமை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் குறைகளைக் கண்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், உண்மை நிலையை சுட்டிக் காட்டுபவர்களை முதல்வர் கருணாநிதி வசைபாடி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே என்று மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நெல் கொள்முதல் விலை உயர்வு-முதல்வர் அறிவிப்பு:

இதற்கிடையே முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2008-09ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை சாதாரண ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850 என்றும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.880 என்றும் நிர்ணயித்துள்ளது.

எனினும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்து ஊக்குவிக்கவும், 2008-09ம் ஆண்டு குறுவை பருவத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 என்றும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1050 என்றும் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X