For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி பிரஸ்மீட்- 3 அரசு பிஆர்ஓக்கள் சஸ்பெண்ட்?

By Staff
Google Oneindia Tamil News

Dayanidh Maran
சென்னை: தங்களுக்கும் சன் டிவி சேனல்களை ஒளிபரப்ப அனுமதி தரப்பட வேண்டும் என்று கோரி தொலைத் தொடர்பு வழக்குகள் தீர்ப்பாயத்தில் மு.க. அழகிரியின் ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி) வழக்கு தொடர்ந்துள்ளது.

சன் டிவியின் கேபிள் டிவி நெட்வோர்க்கான சுமங்கலி கேபிள் விஷனுக்குப் (எஸ்சிவி) போட்டியாக மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷனை தொடங்கியுள்ளார் அழகிரி. மதுரையைச் சேர்ந்த பெரும்பாலான ஆபரேட்டர்கள் எஸ்சிவியிலிருந்து தாங்களாகவே விலகி ஆர்.சிவியில் சேர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார் அழகிரி.

இதையடுத்து மதுரை முழுவதும் சன் டிவி ஒளிபரப்பு தடைபட்டுள்ளது. தங்களுக்கு சன் டிவி சேனல்களை ஒளிபரப்பும் உரிமை மறுக்கப்படுவதாக அழகிரி குற்றம் சாட்டினார். இதனால் சன் டிவியை எதிர்த்து தொலைத் தொடர்ப்பு ஆணையமான டிராய், தொலைத் தொடர்பு வழக்குகள் தீர்ப்பாயம் (Telephone Disputes Settlement and Appellate Tribunal-TDSAT) ஆகியவற்றில் வழக்குப் போடப் போவதாக அறிவித்தார்.

இந் நிலையில் சன் டிவியின் சேனல்களை தாங்களும் ஒளிபரப்பும் வகையில் 'டீ-கோடர் பாக்ஸ்'களைத் (decoder boxes) தருமாறு சன் டிவி்க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி தீர்ப்பாயத்தில் ஆர்சிவி தரப்பு மனு தாக்கல் செய்தது.

இதற்கு சன் டிவி பதில் மனு தாக்கல் செய்தது, தங்களிடம் எத்தனை பேர் இணைப்பு பெற்றுள்ளனர் என்ற விவரத்தை எங்களுக்கு ஆர்சிவி தரவில்லை. ஒளிபரப்பு உரிமை கோரும் முன் இந்த விவரத்தை தர வேண்டியது அவசியமாகும். மேலும் ஆர்சிவி மிகப் புதிய நிறுவனம். 3 மாதங்கள் வரை புதிய நிறுவனத்துக்கு சிக்னல் தர வேண்டிய அவசியமில்லை என்று விதியே உள்ளது என்று கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், முதலில் சன் டிவியிடம் இணைப்பு பெற்றவர்கள் விவரத்தை ஆர்சிவி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

அதே நேரத்தில் தங்களுக்கு உடனடியாக சன் டிவி தனது சிக்னல்களை தர வேண்டும் என் ஆர்சிவியின் கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்கவில்லை.

சன் சேனல்களை பெறுவது தொடர்பாக முறைப்படி விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வேண்டிய தகவல்களை தந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆர்சிவி அவசரமாக மனு தாக்கல் செய்திருப்பது புதிராக உள்ளது என்று கூறிவிட்டது.

சன் டிவி போட்டுள்ள கிடுக்கிப் பிடியால், ஆர்சிவி தன்னிடம் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையை வெளியில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிஆர்ஓக்கள் சஸ்பெண்ட்?:

இதற்கிடையே ஆர்.சி.வியை துவங்கிய தினத்தன்று பத்திரிக்கையாளர்களை அழகிரி சந்தித்தபோது அவருடன் இருந்து பிரஸ் ரிலீஸை வினியோகம் செய்த மதுரை அரசு பிஆர்ஓ சரவணன், இரு துணை பிஆர்ஓக்களான சாலி தளபதி, பாஸ்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் உதவி பி.ஆர்.ஓ. பாஸ்கர் ஏற்கனவே அழகிரியின் பி.ஏவாக இருந்தவர் ஆவார். சாலி தளபதி, அழகிரியின் தீவிர ஆதரவாளரான முபாரக் மந்திரியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிஎச்சுக்கு மாறும் மதுரை மக்கள்:

அழகிரி-சன் டிவி தரப்பு மோதலால் சன் டிவி சேனல்கள் தெரியாமல் எரிச்சலுக்கு ஆளாகியுள்ள பொது மக்கள் டி.டி.எச்சுக்கு மாறத் தொடங்கியுள்ளதாக கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.

இதனால் சன் டிவியின் டிடிஎச் விற்பனை சூடு பிடித்துள்ளது என்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X