For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைட்டானியம் ஆலை-டாடாவுக்கு உதவ களமிறங்கும் தமிழக அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: டைட்டானியம் ஆலை அமைப்பதற்கான நிலங்களை கையப்படுத்த டாடா ஸ்டீல் நிறுவனத்துகுக்கு உதவ தமிழக அரசே நேரடியாக களமிறங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் டைட்டானியம் டை ஆக்சைடு பிரித்தெடுக்கும் ஆலையை அமைக்க டாடா ஸ்டீல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் கிடைக்கும் மணலில் டைட்டானியம் மிக அதிகமாக உள்ளதால் இங்கு ஆலை அமைக்க திட்டமிட்டது டாடா நிறுவனம். இதற்காக ரூ. 2,500 கோடி செலவில் பொது மக்களிடம் 10,000 ஏக்கர் தரிசு நிலங்களை வாங்கவும் தொழிற்சாலை அமைக்கவும் திட்டமிட்டது.

ஆனால், விவசாய நிலங்களை டாடா நிறுவனத்துக்கு தாரை வார்க்க முயற்சி நடப்பதாக எதிர்ப்பு கிளப்பப்பட்டது.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், கார்னெட் என்ற கனிமத்தை திருட்டுத்தனமான எடுத்து, சட்ட விரோதமாக, தேச நலனுக்கு பாதகமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் தொழில் செய்யும் ஒரு தாதாவுடன் (ஜெயா டிவி பங்குதாரர் வைகுண்டராஜன்) ஜெயலலிதா செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தமே டாடா திட்டத்தை ஜெயலலிதாவும் அவரை சார்ந்த சிலரும் எதிர்க்கக் காரணம் என்று கூறியிருந்தார்.

இது இல்லாத, பொல்லாத கற்பனை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதில் தந்தார்.

இந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் டாடா நிறுவனத்துக்கு எதிராக களத்தில் குதிக்கவே நிலத்தை வாங்க முடியாமல் டாடா நிறுவனம் திணறி வருகிறது.

மேலும் நிலத்தை விற்க முன் வந்தவர்கள் கூட, நிலத்தின் மதிப்பை 50 மடங்கு வரை உயர்த்தி விலையைச் சொல்லவே, சும்மா கிடக்கும் தரிசு நிலத்துக்கு இந்த விலையா என்று டாடா நிறுவனம் அமைதியாகிவிட்டது.

இந் நிலையில் டாடா நிறுவனத்துக்கு உதவ தமிழக அரசு இப்போது முன் வந்துள்ளது. நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்துக்கான கிரயப் பத்திரம் உள்ளிட்ட சில ஆவணங்களை பெற்று, டாடா நிறுவனத்துக்கு தரவும், டாடாவிடம் இருந்து லத்துக்குரிய விலையை வாங்கி நில உரிமையாளர்களுக்குத் தரவும் தமிழக அரசு முன் வந்துள்ளது.

இதன் மூலம் டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பெரிய அளவில் நிலத்தை கையகப்படுத்தும் செயலில் நேரடியாக ஈடுபடுவதைத் தடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

நிலங்களை கையப்படுத்தும் பணியில் டாடா நிறுவனத்துக்கு உதவும்படி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்கும் பணி மீண்டும் சூடு பிடிக்கவுள்ளது. இப் பகுதியில் நிலங்கள் தரிசாகக் கிடப்பதால் அதி்ல் விவசாயமும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் இன்றி திண்டாடும் இப் பகுதியினருக்கு இந்த ஆலை அமைந்தால் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

துரு பிடிக்காத இரும்பு தயாரிக்க டைட்டானியம் ஆக்ஸைடு உதவுகிறது. உலகின் முன்னணி இரும்பு தயாரிப்பு நிறுவனமான டாடாவுக்கு டைட்டானியம் பெரிய அளவில் தேவைப்படுவதால் இந்த ஆலையை அமைக்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X