For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ராமதாஸ்': சமாதானமாகாத திமுக!

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
திண்டிவனம்: திண்டிவனத்தில் கூடிய பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் திமுக உயர் நிலைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவைப் பொறுத்து செயல்படலாம் என்று கூறிவிட்டார் ராமதாஸ். இதன்மூலம் திமுகவுக்கு சாமாதானக் கொடியை காட்டியிருந்தார். ஆனால் திமுக தரப்பு அதை நிராகரித்து விட்டது.

நேற்று பாமக செயற்குழுக் கூட்டம் நடந்தபோது வெளி நபர்களோ, பத்திரிகையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. கதவைப் பூட்டிவிட்டு விவாதம் நடத்தினர்.

கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஆலோசனை நடந்தது.

அதில் பேசிய பாமக நிர்வாகிகள் அனைவருமே திமுகவை வாட்டி எடுத்தனர். அவர்களுடன் உறவே வேண்டாம், அதிமுக உறவை நாடலாம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிறது.

ஆனால், அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்ட ராமதாஸ் இறுதியில் பேசுகையில், திமுக உயர்மட்டக் குழு (இன்று) எடுக்கும் முடிவை பொறுத்து நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

இந் நிலையில் இன்று வன்னியர் சங்கக் கூட்டத்தை ராமதாஸ் கூட்டியுள்ளார். இதில் காடுவெட்டி குரு உள்ளிட்ட முக்கிய வன்னியர் சங்க நிர்வாகிகளும், பாமகவின் இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, விவசாயிகள் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டமும் அவரது திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திலேயே நடக்கிறது.

ராமதாஸ் அறிக்கை:

இதற்கிடையே நேற்றைய கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஒரு கூட்டத்தில் பேசும்போது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அவரது அந்தப் பேச்சுக்கு பின்னால் சதி இருப்பதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

6 மாதத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குரு பேசியிருப்பதை, இப்போது நடந்த கூட்டம் போல குற்றம் சுமத்துவதும், அதற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதாகச் சொல்வதும், ஏன் என்று விளங்கவில்லை.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் குரு உள்ளிட்ட பாமகவினர் மீது வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலின் பேரில் (மத்திய அமைச்சர் ராசாவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) பொய் வழக்குகள் போடப்பட்டு வருவது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

11.3.2008 அன்று முதல்வரிடம் அந்த கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதம் கிடைத்த ஓரிரு மணி நேரத்திற்குள்ளாக முதல்வர் கருணாநிதி அவரது கைப்பட எனக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

அதில்,

அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் கடிதம் கண்டேன். அதில் கண்டுள்ள தகவல்களை அலட்சியப்படுத்தாமல் கண்ணும் கருத்துமாய் எல்லாவற்றையும் விசாரித்து அறிந்து, எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது பற்றியெல்லாம் எந்த விதமான நோக்கும், போக்கும் கடைபிடிக்க விரும்பாமல் இருசாராரிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தணித்து, ஒற்றுமையை ஏற்படுத்தவே முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

நண்பர் குரு போன்றவர்களின் வசைமாரிகளைத் தாங்களே பொறுத்துக் கொள்ளவில்லை என்பதையும், இத்தகைய தாக்குதல்களை என்மீது நடத்தவிடாமல் தாங்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டீர்கள் என்பதும் எனக்கு மன ஆறுதல் அளித்த செய்திகளாகும்.

நம்பிக்கையூட்டும் நிலையில் இருந்து நான் என்றும் நழுவிப் போகமாட்டேன். காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும், அந்த வட்டாரத்தில் எழுந்துள்ள தேவையற்ற பூசல் குறித்தும், தாங்கள் எழுதியுள்ள விவரங்களை மனதில் வைத்து, பொதுவில் நமது நட்பும், தோழமையும் இருசாராரிடமும் அன்பான அமைதியும் காண முயற்சி மேற்கொள்வோம்.

இவ்வாறு கருணாநிதி கூறியிருந்தார்.

நான் என்னுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்த பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்புக் காவல்துறை உயர் அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக வேறொரு அதிகாரி உடனடியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிதத்தில் நான் தெரிவித்திருந்த புகார்கள் நியாயமானவை என்றதால்தான் முதல்வர் கருணாநிதி அன்று நடுநிலையோடு நின்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், குரு மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, 15க்கும் மேற்பட்ட முறை நேரில் வலியுறுத்தியிருக்கிறார்.

குருவை முதல்வரிடம் அழைத்து வந்து சந்திக்கச் செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்போதெல்லாம் குருவை அழைத்து வாருங்கள் என்று முதல்வர் மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

இத்தகைய நிலையில் மார்ச் மாதத்திலேயே முடிந்து போன ஒரு பிரச்சினை குறித்து இப்போது மீண்டும் புதிய பிரச்சினை போன்று பேசுவதும், அதை அரசியலாக்குவதும் ஏன் என்று எங்களுக்கு விளங்கவில்லை.

"குரு போன்றவர்களின் பேச்சை (வசைமாரிகளை) தாங்களே பொறுத்துக் கொள்ளவில்லை என்பதையும், இத்தகைய தாக்குதல்களை என்மீது நடத்தவிடாமல் தாங்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டீர்கள் என்பதும் மன ஆறுதல் அளித்த சேதிகளாகும்'' என்று கடந்த மார்ச் மாதத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மன ஆறுதல் பெற்ற முதல்வருக்கு இப்போது நம்பிக்கை இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை.

இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

தனது அறிக்கையில் திமுக மீது வழக்கமான காட்டத்தை ராமதாஸ் காட்டவில்லை. இதன்மூலம் அவர் அடக்கி வாசித்திருந்தார்.

அப்படியிருந்தும் கூட காடுவெட்டி குருவின் பேச்சை பொறுக்க முடியாமல், கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கும் முடிவை திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு எடுததுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X