For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட மாவட்டங்களில் பதட்டம்: திமுக-பாமக பதவிகள் தப்புமா?

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: திமுகவுடனான கூட்டணி முறித்தைத் தொடர்ந்து பாமக மெஜாரிட்டியாக உள்ள மாவட்டங்களில் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல, திமுக தயவுடன் பதவிக்கு வந்த பாமக உள்ளாட்சித் தலைவர்கள் பலர் எப்போது தங்கள் பதவி பறி போகுமோ என பதட்டத்தில் உள்ளனர்.

கூட்டணி முறிந்ததை இரு கட்சியினரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினாலும் இன்னொரு பக்கம் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் போன்ற பாமக வலுவாக உள்ள மாவட்டங்களில் கடும் பதட்டம் நிலவுகிறது. முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டிவனம், பெரம்பலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் பாமகவினர் திமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் விரட்டயடித்தனர்.

தங்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்து இப்போது தங்களையே திட்டுகிறார்கள் என திமுகவும் பாமகவும் இந்த மாவட்டங்களில் கடும் சாடலில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவைச் சேர்ந்த அதிக உள்ளாட்சி தலைவர்கள் உள்ளனர். ஆனால் இங்கெல்லாம் அதிக அளவில் கவுன்சிலர்கள் இருப்பது திமுகவுக்குத்தான். எனவே கூட்டணி இல்லையென்றாகிவிட்ட பிறகு, இனி பாமக தலைவர்களுக்கு ஆதரவளிக்கத் தேவையில்லை என கவுன்சிலர்கள் முடிவெடுத்திருப்பதால், பல பாமக தலைவர்கள் பதவி இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் பல பகுதிகளில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றும் அதிகாரமில்லாதவர்களாக உள்ளாட்சிகளின் தலைவர்கள் மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பாமக பலம் என்ன?:

கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 நகராட்சிகள், 27 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டன.

இவற்றில் வட மாவட்டங்களில் பாமக தலைமைப் பொறுப்பில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் விவரம்:

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தராதேவி, திண்டிவனம் நகரசபை தலைவர் பூபாலன், வல்லம் ஒன்றிய சேர்மன் ஏழுமலை, மேல்மலையனுர் ஒன்றிய சேர்மன் அன்பழகன், முகையூர் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார், சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் சந்திரசேகரன், வானூர் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் பொன்னி ஆகிய 8 பேரும் பாமகவைச் சேர்ந்தவர்கள்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் கடலூர், பண்ருட்டி, கம்மாபுரம் ஒன்றிய குழு, கடலூர் மாவட்ட ஊராட்சி குழு, விருத்தாசலம் நகரசபை ஆகிய 5 இடங்களில் பாமக தலைவர்கள் உள்ளனர்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர். 6 பேர்தான் பாமக உறுப்பினர்கள். ஆனால் தலைவர் பதவி பாமக வசம்தான் உள்ளது. இங்கு திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் பாமக தலைவர் பதவியை இழப்பார். கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுவை பொறுத்த வரை மொத்தம் உள்ள 29 உறுப்பினர்களில் பாமக 5 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், இங்கும் பாமகவிடம்தான் தலைமைப் பதவி உள்ளது.

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாமக-11, அதிமுக-6, திமுக-5, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் தலா ஒன்று என்ற பலத்துடன் உள்ளனர். இங்கும் திமுக ஆதரவில்தான் பாமகவை தலைமைப் பொறுப்பில் உள்ளது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 25 உறுப்பினர்கள். இதில் அதிமுகவிற்கு 10, பாமகவிற்கு 8, திமுகவிற்கு 5, காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு திமுக ஆதரவை வாபஸ் பெற்று அதிமுக கை கொடுத்தால் பாமக தலைவரின் பதவி தப்பலாம்.

விருத்தாசலம் நகராட்சியில் மொத்தம் 33 கவுன்சிலர்கள். இதில் திமுக 12, அதிமுக11, பாமக 5, தேமுதிக, காங்கிரஸ் தலா 2, சுயேச்சை ஒன்று என்ற நிலை உள்ளது. இங்கும் திமுக ஆதரவுடன்தான் பாமக தலைவர் பதவியில் நீடிக்கிறது.

திருவள்ளூர்-காஞ்சிபுரம்:

சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களைப் பொறுத்தவரை மாதவரம் நகராட்சியில் 30 வார்டுகளில் பாதியை திமுக கைப்பற்றியது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் வென்ற பாமகவுக்குதான் தலைவர் பதவி விட்டுத் தரப்பட்டது.

மறைமலைநகரிலும் இதே நிலைதான்.

திமுக கவுன்சிலர்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றால் இங்கெல்லாம் பாமக தலைவர்கள் அனைவரின் பதவிக்கும் ஆபத்துதான்.

இதேபோல வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் பாமக ஆதரவுடன் திமுக தலைவர் பதவியில் இருந்து வருகிறது. அங்கு பாமக தன் ஆதரவை விலக்கிக் கொண்டால் திமுக தலைவர்கள் பதவியிழக்கும் சூழல் உள்ளது.

ஆதரவை வாபஸ் பெறுவார்களா... அல்லது அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என லோக்கல் லெவலில் கட்சியினர் அமைதியாய் இருந்து பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வார்களா? என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X