For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்னிப்பு கேட்க மாட்டோம்- ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ மாட்டோம், அது தேவையற்றது என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இன்று நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

தனிப்பட்ட ஒரு பிரச்சினையை பொதுப் பிரச்சனையாக்கி அதற்கும் பாமகவையே பொறுப்பாக்கிவிட வேண்டும் என்ற திமுக திட்டத்தின் வெளிப்பாடுதான் இப்போது எழுந்துள்ள நிலைக்குக் காரணம். இந்த நிலைக்கு நானோ, பாமகவோ பொறுப்பல்ல.

வன்னியர் சங்க கல்விக் கோயிலை திறந்து வைத்ததே முதல்வர் கலைஞர்தான். ஆனால் அவருடைய மூத்த அமைச்சர் அதை பொறம்போக்கு என்கிறார். இதை நாங்கள் வேண்டுமானால் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளலாம். மாவீரன் குரு போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா...

குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக மன்னிப்பு கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ தேவையற்றது. அதை நாங்கள் செய்ய மாட்டோம்.

எங்களைப் பார்த்து வன்முறைக் கட்சி என்றும் சதி செய்கிறார்கள் என்றும் கலைஞர் குற்றம் சுமத்துகிறார்.

கலைஞரே, மனசாட்சியுடன் பேசுங்கள். வரலாற்றை மறந்து விடாதீர்கள். உங்கள் மீது உங்கள் கட்சிக்காரர்களைவிட அதிகம் மதிப்பு வைத்தவர்கள் நாங்கள். எங்களது கட்சியின் மாநாட்டுக்கு உங்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, மாநாட்டுப் பந்தல் முழுக்க பார்க்குமிடங்களிலெல்லாம் உங்கள் படங்களையும் சுவரொட்டிகளையும் வைத்தவர்கள்.

அப்போது நீங்கள் ஆற்காட்டாரைப் பார்த்து, உங்களால் கூட இப்படி மாநாடு நடத்த முடியாதே என்று கூறிப் பெருமைப்பட்டீர்கள். நாங்களா வன்முறையாளர்கள்? சரித்திரத்தை மறந்துவிடாதீர்கள்.

1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு மதுரைக்கு வந்த இந்திரா காந்தி அம்மையாரை பயங்கர ஆயுதங்களுடன் துரத்தித் துரத்தி கொல்ல முயன்றது யார்... திமுக அல்லவா... அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறைந்து மறைந்தல்லவா சென்னைக்கு வர வேண்டியிருந்தது. நீங்கள் எங்களைப் பார்த்து வன்முறையாளர்கள் என்பது நியாயமா...?

பாமக பதவிக்கு ஆசைப்படும் கட்சியல்ல. மானமும் கொள்கையும்தான் எங்களுக்குப் பெரிது. சில பத்திரிகையாளர்கள் எங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்றும், பதவிக்காக அணி மாறுபவர்கள் என்றும் எழுதுகிறார்கள்.

ஏன், திமுக அணி மாறியதே இல்லையா. பதவிக்கு சண்டை போட்டதில்லையா?. அப்படியா நாங்கள் நடந்து கொண்டோம். மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவியைப் பிடிக்க திமுக என்னவெல்லாம் செய்தது? நாங்கள் அப்படியா நடந்து கொண்டோம்?

நண்பர்களே... பாமக அமைதி விரும்பி. வன்முறைக்கு எதிரான கட்சி. இந்த மண்ணிலே ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்று அறவழியில் குரல் கொடுக்கும் அமைதி இயக்கம். அந்தக் கட்சியைப் பார்த்து கலைஞர் இப்படியெல்லாம் நெருப்பு வார்த்தைகளை அள்ளிக் கொட்டியது யார் செய்த சதி என்று புரியவில்லை.

இனி பாமகவின் பாதை புதிது. இந்தக் கூட்டணி உறவு முறிந்ததும், அடுத்து எடுக்கப்போகும் முடிவு குறித்தும் நீங்கள் என் முடிவுக்கு விட்டு விடுவதாகச் சொன்னீர்கள். ஆனால் நான் அதை உங்கள் முடிவுக்கே விட்டுவிட்டேன். அதுதான் பொதுக்குழு தீர்மானமாக வந்திருக்கிறது.

இனி பாமக வெற்றிப் பாதையில் வெற்றி நடைபோடும் என்றார்.

தீர்மான விவரம்:

முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

பாமக மீது மலிவான காரணங்களைக் கூறி கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக செயல்பட்டுள்ளது. இந்த உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் பாமகவை நீக்கியிருப்பது, திமுகவின் தன்னிச்சையான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

மன்னிப்பு கேட்கமாட்டேன்:

முன்னதாக, கூட்டணி முறிவுக்குக் காரணமானவரான காடுவெட்டி குரு பேசுகையில், நாங்கள் கட்சியின் சார்பில் நடத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதை ஒட்டுக் கேட்டதே பெரும் தவறு. தனிப்பட்ட கூட்டம் அது. கூட்டணிக் கூட்டணமோ அல்லது பொதுக் கூட்டமோ அல்ல.

அதில் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். அதையெல்லாம் இவர்கள் ஒட்டுக் கேட்பதா. இதற்காக நாங்கள்தான் நியாயமாக கோபித்துக் கொள்ள வேண்டும். எங்கள் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குத் தொடுத்து வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் குரு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X