For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஒப்பந்தம்: சமரசம் செய்ய டெல்லி செல்கிறார் கருணாநிதி!

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே நிலவி வரும் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டெல்லி செல்லவிருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மணி விழா மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் தலைமை தாங்கினார். முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருணாநிதி விழாவில் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்பட்டது. அதை நிலை ஏற்பட்டபோதும் நாங்கள் கொள்கையை புறம் வைத்து விட்டு அந்த கூட்டணிக்குச் செல்லவில்லை. கொள்கையிலே துளியும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கூட்டணியிலே நாங்கள் இணைத்துக் கொண்டோம்.

கூட்டணி உருவானபோது, நானும், தம்பி முரசொலி மாறனும், இன்றைய மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் தம்பி கோபாலசாமியும் (வைகோ), படித்துப் பார்த்து, திருத்தம் சொல்லி, இந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பது என்றால், நீங்கள் மத வெறியை விட்டொழிக்க வேண்டும். ஒரு பொதுக்கொள்கையில், நாம் உடன்பாடு கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக அயோத்தியிலே நீங்கள் ராமர் கோவில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்கின்ற பணியிலே ஈடுபட்டிருக்கிறீர்கள், அதை அந்தக் காரியத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேட்டு, அதற்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுத்து, அதற்கெல்லாம் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் என் கையெழுத்தைஅந்தக் கூட்டணி பெற முடிந்தது.

அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணமும், எங்களது கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக முதலில் சொல்லி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை தளர்த்திய காரணத்தால், அதிலே இருந்தவர்கள் விலகிய காரணத்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம். அமைச்சர்களாகவே இருந்து விலகினோம்.

அதற்குப் பிறகுதான், இனி இப்படி கொள்கையிலே உறுதியாக இருப்போம் என்று கூறி விட்டு பின்னர் மாறி நிற்பவர்களின் நட்பு வேண்டாம், சொன்ன சொல் மாறாத கட்சி இருந்தால்தான், அந்தக் கட்சியோடுதான் இனிமேல் கூட்டணி, நன்றி உணர்வோடு இருக்கிற கட்சியோடுதான் இனி கூட்டணி என்று அன்று நாங்கள் எடுத்த உறுதிதான், நாங்கள் அடுத்த வேறொரு கூட்டணியை காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைக்க வேண்டியிருந்தது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளோடும், திருமாவளவன் கட்சியோடும் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டோம். இடையில் ஒரு கூட்டணி விட்டு விட்டேன். எது என்று கேட்கலாம். பெயர் சொல்லத்தான் விட்டு விட்டேனே தவிர விட்டு விடவில்லை. அவர்கள் என்ன செய்தால் போகச் சொல்வார்கள் என்று எண்ணிய காரணத்தால் போனவர்களே தவிர நாங்களாக எதையும் இழக்கவும் விரும்பவில்லை, விலக்கவும் விரும்பவில்லை. நாங்கள் யாரையும் போ என்று விரட்டி விடவில்லை.

ஆனால் நாங்கள் எவ்வளவு இழிவைத் தாங்கிக்கொண்டு, எவ்வளவு அவமானத்தை தாங்கிக் கொண்டு ஒரு அணியை நடத்துவது. நான்தான் அந்த அணிக்கு தலைவன் என்றாலும் கூட, அந்த அணியைக் கட்டிக்காப்பது என்ற கேள்விக்கு கிடைத்த பதில்தான் எங்களது அணியிலிருந்து ஒரு கட்சி இன்றைக்கு வெளியேறியதற்கு காரணம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளுவன் அப்போதே சொன்னான். தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே, நாவினால் சுட்ட வடு என்று. என்றைக்கும் நாவினால் சுட்ட வடு ஆறாது, மாறாது. அதனால்தான் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்தோம்.

இந்திய முஸ்லீம் லீக் கட்சி, சந்தர்ப்பவாத இயக்கம் அல்ல. காயிதே மில்லத் போன்றவர்கள் இந்த இயக்கத்தை கூட்டணியை எப்படி நடத்திச் செல்ல துணை புரிந்தார்கள் என்பதையெல்லாம் நான் மறந்து விடவில்லை. இடையிடையே ஆயிரம் கசப்புணர்வுகள், கருத்து வேறுபாடுகள் எங்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டாலும் கூட கண்ணியம் மறந்ததில்லை. அதனால்தான் அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படுகிறார்.

கோபதாபங்கள் எனக்கும், அப்துல் சமதுவுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் வாய் தவறி கூட எனது பெயரைச் சொல்லி அருமை நண்பர் அப்துல் சமது அழைத்தது இல்லை. அதனால்தான் அவரது மகள் பாத்திமாவை எனதருமை செல்வி என்று சொல்லி அரவணைக்க முடிகிறது.

இன்று இந்தியாவின் நிலை என்ன. அவைகளை எல்லாம் சாங்கோபாங்கமாக பேச வேண்டிய நேரம்தான் இது. அதைத் தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஒருபுறம் ஏழை, எளிய மக்கள் வாடுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்கிறது. தமிழகத்திலே அதைத் தடுக்கின்ற முயற்சியிலே ஈடுபடுகின்றோம். முடிந்த வரையில் தாங்க பார்க்கிறோம். முடிந்த வரையிலே தாங்கி கொண்டிருக்கின்றோம்.

இந்த நேரத்தில் அணுசக்தி விவகாரம். அதிலே நம்முடைய மதிப்புக்குரிய கம்யூனிஸ்ட் தோழர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளைக்கு கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களோடு நான் பேசவிருக்கிறேன்.

அதன் பிறகு நான் டெல்லி செல்ல இருக்கிறன். ஏனென்றால், புதுத்தகவல் என்பதால் அதை உங்களிடத்திலே சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

அந்தத் தகவல்கள் பரிமாற்றம், அந்த சந்திப்பு, அதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகள், இந்தியாவைக் காப்பாற்ற பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பாற்றவோ, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ என்று சொல்வதற்குப் பதில், இந்த இருவரிடையே ஏற்படுகின்ற நல்லெண்ணம் இந்தியாவைக் காப்பாற்ற பயன்படும்.

இவர்களிடத்திலே பிளவு ஏற்படுமேயானால் மதவாத சக்திகளுக்கு வெற்றியாகி விடும். மீண்டும் ஒரு அயோத்தி மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சினை, மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்பு என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். அவையெல்லாம் வராமல் இருக்க, சுமூகமான, அமைதியான இந்தியா அமைய வேண்டுமேயானால் என்ன நடக்க வேண்டும்.

ஒருவேளை விரைவிலே தேர்தல் வந்தாலும், உரிய நேரத்தில் தேர்தல் வந்தாலும் அந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டிய முடிவு, யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா, இல்லையா என்ற அந்தக் கேள்விக்கு கிடைக்கிற பதிலாகத்தான் இருக்கும் என்றார் கருணாநிதி.

மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், அகமது, ராசா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உலமா நல வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய பல்கலைக்கழகத்திற்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X