For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களை அழிக்க முயலும் இந்திய அதிகாரிகள்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க முயலும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு இந்திய அதிகாரிகள் துணை போகிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, இலங்கை அரசு மற்றும் அதன் ராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

20-6-2008 அன்று வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு செயலாளர் விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக்குழு, இலங்கை அரசுடன் இருதரப்பு செய்திகளையும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு சென்றடைந்ததாக இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்திய அரசு இலங்கை விமானப்படைக்கு ராடார் கருவிகளை கொடுத்ததன் விளைவாக, அந்நாட்டு விமானப்படை குண்டு வீசித்தாக்கி அப்பாவித் தமிழர்கள் பலர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டார்கள். அத்தாக்குதலில் செஞ்சோலை படுகொலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழர்களின் குருதி தோய்ந்த கரங்களோடு இந்தியா வந்த இலங்கை அதிபரையும், அந்நாட்டு அமைச்சர்களையும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றது மாபெரும் தவறு என்று இந்திய அரசை நான் குற்றம் சாட்டுகிறேன்.

மிகக் குறைந்த வட்டியான 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலரை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்துக்குக் கடனாக வழங்கியதால், அவர்கள் அந்தப் பணத்தை கொண்டு பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து அதனால் தமிழினத்தையே அழிக்க முற்படுகிறார்கள். அதற்கு இந்திய அரசு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொலை செய்தும் வருவதை இந்திய அரசு காக்க வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டுகிறேன். போதாதென்று, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக்குழு தமிழக மீனவர்களின் பாதுகாப்புக் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்துக் கொண்டு இருக்கிறது.

இந்திய கடல் நீர்ப்பரப்புக்கு அருகில் சர்வதேச நீர்பரப்பில் கடலுக்கு அடியில் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்க இலங்கை அரசுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது, இந்திய இறையாண்மையை மாற்றாருக்கு அடகு வைத்த செயலாகும் என்று இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை வாழ் தமிழர்களுக்காக தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிப்பதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் இந்திய அரசு மனிதாபிமானத்தை ஆழ்கடலில் புதைத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறேன்.

பண்டித ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரது தொலைநோக்கு பார்வையால் தோற்றுவிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க உறுதி பூண்டு செயல்படும் இனவாத இலங்கை அரசுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 இந்திய அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்று மிகுந்த வேதனையோடு குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தீவில் அந்நாட்டு அரசால் உயிரிழக்கும் தமிழர்களின் உயிருக்கு, இந்திய மக்கள் மன்றத்திலே பொறுப்பேற்கவும், பதில் சொல்லவும் கடமைப்பட்டிருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுமே ஆகும் என்று குற்றம் சாட்டியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X