For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் ஒரு 'ஹைட்ரோகார்பன்' கதை...

By Staff
Google Oneindia Tamil News

Bonga
-ஏ.கே.கான்

மீண்டும் ஒரு பெட்ரோலியக் கதை. உனக்கு இதைவிட்டால் வேறு எதுவுமே தெரியாதா என்று சிலர் கேட்கலாம். இன்றைய தேதியில் 'ஹைட்ரோகார்பன்' தான் உலக ஹீரோ. இதனால் எனக்கு மிகப் பிடித்தமான அரசியல் விவகாரங்களை விட்டுவிட்டு பெட்ரோலியம் பற்றி மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதை எழுத வைத்தது என் முதல் கட்டுரைக்கு உங்களிடம் கிடைத்த வரவேற்பு தான்.

கதைக்கு வருவோம். யூக வர்த்தகத்தால் பெட்ரோலிய விலை உயர்ந்தாலும் இதற்கு உடனடித் தீர்வு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தான் என OPEC நாடுகளிடம் உலக நாடுகள் வைத்த கோரிக்கையை செளதி ஏற்றுக் கொண்டுவிட்டது.

உறுதியளி்த்தபடி செளதி எண்ணெய் துறை அமைச்சர் அலி நைமி நடந்து கொண்டால், அடுத்த வாரத்தில் இருந்து (ஜூலை) ஒரு நாளைக்கு 2,55,000 பீப்பாய்கள் அளவுக்கு கூடுதலாக எண்ணெய் 'பம்ப்' செய்யப்படவுள்ளது.

ஆனால், செளதி அரேபியா உற்பத்தி செய்யப் போகும் இந்த கூடுதல் எண்ணெய் சந்தைக்கு வரப் போகும் அதே நேரத்தில் இன்னொரு இடத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் எண்ணெய் நிற்கப் போகிறது (தாற்காலிகமாவது). அது நைஜீரிய எண்ணெய்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இங்கு அதிக அளவில் எண்ணெய்யை உற்பத்தி செய்து வருவது டச்சு நிறுவனமான ஷெல் (Shell). ஆனால், நைஜீரியாவின் சொத்தை ஷெல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதாகக் கூறி அந்த நிறுவனங்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் தாக்க ஆரம்பித்துள்ளன நைஜீரிய நாட்டு அதிருப்தி அமைப்புகள். குறிப்பாக 'மென்ட்' (Mend) என்ற அமைப்பு.

'Movement for the Emancipation of the Niger Delta' என்பது தான் இந்த 'மென்ட்' அமைப்புக்கு விரிவாக்கம். சரியாகச் சொன்னால் இதுவும் ஒரு தீவிரவாத அமைப்பு தான்.

இந்த அமைப்பின் தொல்லை தாங்க முடியாமல் நிலப் பகுதியில் எண்ணெய் எடுப்பதை கைவிட்டுவிட்டு நடுக் கடலில் போய் எண்ணெய் உற்பத்தி செய்ய (offshore) ஆரம்பித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். கிட்டத்தட்ட கரையிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் ஆயில் பிளாட்பார்ம்களை அமைத்து எண்ணெய்யை தோண்டி எடுத்து வருகின்றனர்.

இதற்காக ஷெல் நிறுவனம் போங்கா (Bonga) என்ற மாபெரும் கப்பல்-கம்-எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு கிடங்கை (floating oil production and storage facility) பயன்படுத்தி வருகிறது. 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த எண்ணெய் உற்பத்திக் கப்பல் இதுவரை மென்ட் அமைப்பிடம் இருந்து தப்பி வந்தது. காரணம், இந்தக் கப்பல் நைஜீரிய கடலோரத்தில் இருந்து 100, 120 கி.மீ தூரத்தி்ல் இருந்தது தான்.

ஆனால், சில நாட்களுக்கு முன் 3 அதிவேக படகுகளில் வந்த மென்ட் தீவிரவாதிகள் போங்காவை 'பதம்' பார்த்துவிட்டுப் போய்விட்டனர். இதனால் போங்கா எண்ணெய் பிளாட்பார்ம் 'ஷட்-டவுன்' செய்யப்பட்டுவிட்டது. (போகும் வழியில் ஒரு அமெரிக்கக் கப்பலையும் தாக்கி அதிலிருந்த மாலுமியையும் கடத்திச் சென்றுவிட்டனர்).

'போங்கா' அடியானதால் அப்படி என்ன பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி குறைந்துவிடப் போகிறது என்கிறீர்களா?. OPEC-ன் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் நைஜீரியாவில் தான் உற்பத்தியாகிறது, குறிப்பாக அதை போங்கா தான் தோண்டி எடுத்து வருகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

எண்ணெய் எடுப்பதை போங்கா நிறுத்தி 4 நாட்களாகிவிட்டது. ஆனால், இதன் தாக்கம் இன்னும் சில வாரங்கள் கழித்துத் தான் சந்தையில் உணரப்படும்.

செளதியின் கூடுதல் எண்ணெய் சந்தைக்குள் நுழையும் அதே நேரத்தில் நைஜீரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த எண்ணெய் நிற்கப் போகிறது... மென்ட் தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்காத வரை போங்கா தாக்குதல்கள் தொடரத்தான் போகின்றன..

இந்தக் காரணம் போதாதா.. கச்சா எண்ணெய் விலையை மேலும் சில டாலர்கள் ஏற்றி விடுவதற்கு...?

பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்!பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X