For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ காரணம்: இந்தியா சந்தேகம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை குறி வைத்து இன்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலை தலிபான் உதவியுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் செய்துள்ளதாக இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளது.

காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று பெரும் தாக்குதலுக்கு ஆளானது. தூதரகத்தை தகர்க்கும் நோக்கில் காரில் வெடிகுண்டு பொருத்தியபடி வந்த மனித வெடிகுண்டு தீவிரவாதி, அது முடியாததால் வாசலிலேயே வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் 40க்கும் மேற்பட்டோர் உடல்சிதறி பலியானார்கள். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியே ரத்தக் களறியாகியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாதிகளே காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தலிபான் இதை மறுத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என இந்தியா உளவு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

தலிபான் உதவியுடன், ஐஎஸ்ஐ இந்த தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதற்கு சில முக்கிய காரணங்களையும் அவர்கள் முன் வைக்கிறார்கள்.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களைப் போலவே இந்த தாக்குதலும் உள்ளது அதில் முக்கியமான ஒரு காரணம்.

பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம்

இதற்கிடையே இந்த சம்பவத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் இந்தியாவின் உறுதிப்பாட்டை குலைத்து விட முடியாது. தீவிரவாதத்தை வேரறுக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் நடவடிக்கையில் எந்த தொய்வையும் ஏற்படுத்தி விட முடியாது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவை சீர்குலைக்க நடந்த முயற்சி இது. ஆனால் இது பலிக்காது என்றார் முகர்ஜி.

தாக்குதலில் சிக்கிய முதல் இந்திய தூதரகம்

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் ஒன்று தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயவும், இதுதொடர்பான விசாரணையில் பங்கேற்கும் வகையிலும் இந்தியாவிலிருந்து உயர்மட்டக் குழு ஒன்று காபூல் விரைந்துள்ளது.

சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் புணரமைப்பு பணிகளில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது.

அங்குள்ள சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இப்பணிகளில் ஈடுபட்டு வரும் பல இந்தியர்களை தலிபான்தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். பலர் கடத்தப்பட்டும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 2 இந்திய பொறியாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.

கடந்த 2005ம் ஆண்டு எல்லை போக்குவரத்துக் கழக டிரைவர் ஒருவரை கடத்தி மிரட்டியது தலிபான்.

கடந்த 2006ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்ற பொறியாளர் கடத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது 2000 இந்தியர்கள் பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, சராஜ் - டெலாராம் நெடுஞ்சாலை, காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம், மின் திட்டங்கள், பல்வேறு மாகாணங்களில் உள்ள தொலைபேசி எக்சேஞ்சுளில் இந்தியர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா கண்டனம்:

இந் நிலையில் தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார்.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்டனி, பாதுகாப்புத் துறை செயலாளர், வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X