For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்பரேட் சண்டையி்ல் பிரதமர் தலையிடுவதா?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: முகேஷ்-அனில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள்ளான மோதலில் பிரதமர் அலுவலகம் தலையிட்டது அந்தப் பதவிக்கு அழகல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்பரேட் நிறுவனங்கள் இடையிலான மோதலில் பிரதமரும் பிரதமர் அலுவலகம் தலையிட்டது அதிர்ச்சி தருகிறது. அது அந்தப் பதவிக்கு அழகல்ல.

மத்திய அரசுக்கு தந்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்ற பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் எதிரொலியாக இந்த அபாயகரமான நிகழ்வு நடந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

புதிய மூன்றாவது அணி-இடதுசாரிகள் முயற்சி:

இடதுசாரிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பிரிந்து வந்துள்ள கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் ஒருங்கிணைந்து புதிதாக மூன்றாவது அணியை அமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

காங்கிரஸ் கூட்டணி அரசை பதவியிறக்குவதற்காக தங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள இந்தக் கட்சிகளை அப்படியே ஒருங்கிணைத்து மூன்றாவது அணியாக்க இடதுசாரிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பர்தான், சமீம் பைஜி ஆகியோர் கூறுகையில், காங்கிரசும், பாஜகவும் அமெரிக்க ஆதரவு கட்சிகள் மட்டுமல்ல, இருவரின் பொருளாதாரக் கொள்கைகளும் ஒன்று தான்.

மார்க்கெட் சக்திகளுக்கே அவர்கள் செவி சாய்ப்பர். சமானியர்கள் குறித்து கவலையில்லாதவர்கள். இந்த இரு கட்சிகளையும் ஒடுக்க மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி சேர வேண்டியது மிக மிக அவசியம்.

காங்கிரஸ் அல்லது பாஜக தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என இந்திய கார்பரேட் நிறுவனங்கள் கருதுகின்றன. இருவரில் யார் இருந்தாலும் அவர்களுக்கே லாபம்.

கார்பரேட் நிறுவன விவகாரங்களில் கூட பிரதமர் அலுவலகம் தலையிடும் அளவுக்கு போய்விட்டதைப் பார்க்கும்போது, இவர்கள் உலக வங்கி, சர்வதேச நிதி அமைப்பிடம் நாட்டை அடகு வைக்க தயங்க மாட்டார்கள் என்பது புரிகிறது. இவர்களுக்கு ஏழை, எளிய சமானியர்கள் குறித்தெல்லாம் எந்தக் கவலையும் கிடையாது.

மின்துறை, வங்கிகள், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் தனியார் முதலீட்டை அனுமதிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை ஜார்ஜ் புஷ் நெருக்கிக் கொண்டிருக்கிறார் என்றனர்.

காரத் ஆவேசம்:

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவுக்கு எப்படி அடகு வைத்துள்ளது என்பது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் கராத் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இடதுசாரிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை மன்மோகன் சிங் அரசு மீறிவிட்டது. இதற்கு அமெரிக்க நிர்பந்தமே முற்றிலும் காரணம். ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது அதிபர் புஷ்சிடம் நடத்திய ஆலோசனையின் விளைவு தான் இவ்வளவு அவசரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தான் பதவியில் உள்ளபோதே இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி மன்மோகன் சிங்கிற்கு அதிபர் புஷ் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, மத்திய அரசு இவ்வளவு அவசரமாக அணுசக்தி ஒப்பந்த கழகத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் புஷ்சின் ஆசையை நிறைவேற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, மக்களின் பிரச்னைகளான பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றில் பிரதமர் காட்டவில்லை.

காங்கிரசின் மக்கள் விரோதப் போக்கு காரணமாகவே குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் மதவாதக் கட்சியான பாஜக வென்று வருகிறது.

காங்கிரசும், பாஜகவும் அல்லாத மதச்சார்பற்ற, ஜனநாயக நம்பிக்கை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஏன் விலக்கிக் கொண்டோம் என்பது குறித்து மக்களிடம் தீவிரமான பிரசாரத்தை மேற்கொள்வோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X