For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமாவுக்கு நான் எதிரியல்ல-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சினிமாவுக்கு நானோ, பாட்டாளி மக்கள் கட்சியோ என்றும் எதிரிகள் அல்ல. குத்துப்பாட்டுக் கலாச்சாரத்தை நிறுத்திவிட்டு, நல்ல சினிமாவைக் கொடுங்கள், என் ஆதரவு எப்போதும் இருக்கும் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொலைக்காட்சியில் 171 பகுதிகளாக ஒளிபரப்பான சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.

விழாவுக்கு திரைப்பட இயக்குனர் மகேந்திரன் தலைமை தாங்கினார். திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முன்னிலை வகித்தார்.

பாமக நிருவனர் மருத்துவர் ராமதாசு இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, தொடரில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் கேடயங்கள் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் ராமதாஸ் பேசியதாவது:

சந்தனகாடு தொடரில் உண்மையை உள்ளவாறே சொல்ல நினைத்தபோது, பல உண்மைச் செய்திகளை சொல்ல முடியாமல் போனதற்காக நானும், இயக்குனரும் வருத்தப்பட்டோம். உண்மை எப்போதுமே அதிகமாக கசக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் வாழ்கிறார்கள், ராஜ்குமாரை தவிர.

உண்மையான வீரப்பனின் பேச்சை காட்டி இருக்கலாம். முயற்சித்தோம், முடியவில்லை. காரணம் தெரியவில்லை.

'மாவீரன்' வீரப்பன்!

வீரப்பனால் பயன்பெற்றவர்கள், விளம்பரம் தேடியவர்கள், பணக்காரர் ஆனவர்கள் வாழட்டும். அதிரடிப்படையினரை அத்துமீறியவர்கள் என்ற அளவில் விட்டுவிட முடியாது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிறையில் வாட வேண்டியவர்கள்.

வீரப்பன் ஒரு மாவீரன் என்பதில் சந்தேகமில்லை. மாவீரன் வீரப்பன் என்று நான் சொல்வதால், அதை பத்திரிகைகள் வீரப்பனை ராமதாஸ் மாவீரன் என்று கூறுகிறார் என்று குறையாக எழுதுவார்கள். இங்கு மற்றவர்கள் பேசும்போது, எல்லோருமே வீரப்பனை மாவீரன் என்றுதான் சொன்னார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த தொடரை விரும்பி பார்த்திருக்கிறார்கள்.

குத்துப்பாட்டு எதற்கு?

என்னை பற்றி தவறாக திரையுலகில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் சினிமா துறைக்கு எதிரி என்றே சித்தரித்து வைதேதேதிருக்கிறார்கள். நண்பர்களே, நான் எதிரி அல்ல.

சினிமாவும் தொலைக்காட்சியும் அடிப்படைத் தொழில் நுடபத்தில் ஒன்று போலத் தெரிந்தாலும், இரண்டும் வெவ்வேறு ஊடகங்கள். தொலைக்காட்சியில் 90 சதவிகிதம் சினிமாவே வரக்கூடாது. எனக்குத் தெரிந்து வேறு எந்த நாட்டிலும் இப்படிச் செய்வது இல்லை. தொலைக்காட்சியை சினிமாவின் அடிவருடியாக ஏன் மாற்றுகிறீர்கள். இரண்டையும் மசாலாவாகக் கொடுப்பதை நிறுத்துங்கள்.

இங்கும் அற்புதமான திரைப்பட இயக்குனர்கள் உள்ளனர். நல்ல தயாரிப்பாளர்கள் உள்ளனர். எநீங்கள் நினைத்தால் அதிகமாக சத்தியஜித் ரேக்களை உருவாக்க முடியும். அதற்கு மக்கள் ரசனை மாறவேண்டும். ரசனை எப்போது மாறும்? நீங்கள் கொடுத்தால்தானே மாறும்.

குத்துபாட்டு மசாலாவை நிறுத்திவிட்டு நல்ல கதைகளை ஒன்றரை மணிநேர சினிமாக்க் கொடுத்தால் கூட மக்கள் விரும்பி வரவேற்பார்களே... குப்பையான படங்களுக்கெல்லாம் மானியம் கொடுத்து பணத்தை விரயம் செய்வதை விட, இப்படித் தயாராகும் தரமான படங்களுக்கான முழுச் செலவையும் அரசே ஏற்று ஊக்கம் தரலாம். ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க அது உதவும்.

பருத்தி வீரனைப் பார்ப்பேன்

உலக திரைப்பட விழாவிற்கு இங்கிருந்து நிறைய திரைப்படங்கள் செல்ல வேண்டும். மீண்டும் சொல்கிறேன், நான் சினிமாவுக்கு எதிரி அல்ல. எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அருமையான படம் தயாரிப்பவர்களை ஊக்கப்படுத்துவேன்.

மலையாளம், குஜராத்தி, வங்காளத்தில்தான் தரமான படங்கள் வர முடியுமா?, தமிழிலும் அப்படித் தர முடியும். இலக்கணம் எனும் தரமான படத்தைத் தந்தவர்கள்தான் நம் தம்பிகள். அதிக விருதுகளைப் பெற்றுள்ள பருத்திவீரன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதைப் பார்க்க வேண்டும். அதன் பிறகு அந்த படத்தை பற்றி சொல்கிறேன்.

அருமையான படம் எடுக்க நம்மிடம் ஏராளமாய் கதைகள் உள்ளன. ஒன்றரை மணிநேரப் படங்களைத் தொடர்ந்து பரீட்சார்த்த முயற்சியாக எடுக்கலாம்.

திறமையுள்ள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வடிகாலாக மக்கள் தொலைக்காட்சி இருந்து வருகிறது. நல்ல படைப்புகளை கொடுக்கும் எண்ணம் எல்லா தொலைக்காட்சிக்கும் வரவேண்டும். மசாலா இல்லாமல் படம் எடுத்தால் இளைஞர்கள் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அதை மாற்றும் நிலை வரவேண்டும்.

ரூ.100 போட்டு ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் உத்தியைத்தான் பிரமாண்டம் என்கிறார்கள். பிரமாண்டத்தில் என்ன இருக்கிறது... நேரம் காலம் வரும். தமிழுக்கு நல்ல நேரம் வரும். நல்ல படமும் வரும். மக்கள் ரசனையும் மாறும், என்றார் மருத்துவர் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X