For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3வது அணிக்கு தாவ காத்திருக்கும் கருணாநிதி- ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

திண்டிவனம்: மாயாவதி தலைமையிலான புதிய 3வது அணிக்கு திமுக தாவப் போகிறது. இதற்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமதாஸ். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து இடதுசாரிகள் வெளியேறி விட்டாலும், கம்யூனிஸ்ட்டுகளுடன் உறவு தொடர்வதாக முதல்வர் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் தற்போது மூன்றாவது அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்களோடு எந்த உறவும் இல்லையென்று திட்டவட்டமாக அறிவிக்காததன் மூலம் மூன்றாவது அணியில் சேருவதற்கான கதவை திமுக திறந்து வைத்திருக்கிறது என்பதைதான் இது காட்டுகிறது.

மேலும் மூன்றாவது அணியில் திமுக இருக்காது என்று சொல்லாததால் கதவு திறந்திருக்கிறது என்று பொருள். எங்களை பொறுத்தவரையில் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கிறோம் என்று சொல்லி வருகிறோம். தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும் என்றும் கூறி வருகிறோம்.

அரசியல் கட்சிகளோ, அவற்றை சார்ந்த அமைப்புகளோ போராட்டம் நடத்தும் போது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் அரசியல் கட்சிகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் 1992 ஆம் ஆண்டு அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது.

இது அநியாயம் என்று திமுக குரல் கொடுத்தது. அப்போது முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். நாங்களும் அந்த சட்டத்தை எதிர்த்தோம். அந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் சட்டசபையில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.

பொதுவாக அரசியல் கட்சிகள் கிளர்ச்சிகளை நடத்தும்போது அடையாளம் தெரியாத சமூக விரோத சக்திகள் பொது சொத்துக்களை சேதப்படுத்தக் கூடும். இதனை அரசியல் கட்சிகள் மீது சுமத்துவது நியாயமல்ல.

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதை அரசியல் கட்சிகள் மீது சுமத்துவது அநியாயம், அக்கிரமம், ஜனநாயகத்திற்கு விரோதம் என்று சொன்னதோடு அதனை ரத்து செய்ய சட்டம் முன்வடிவு கொண்டு வந்த முதல்வர், திருப்பூரில் பேருந்து தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் பாமகவினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவியிருப்பது என்ன நியாயம்?

முதல்வரின் இந்த இரட்டை வேடத்தையும், அவருடைய பழிவாங்கும் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். நேற்று சோனியா வீட்டில் மத்திய அமைச்சர் வேலுவிடம், 'நான் அவர்களை மன்னிப்பா கேட்க சொன்னேன்; வருத்தம்தானே கேட்க சொன்னேன்" என்று சொல்லியிருக்கிறார்.

தொகுதி மக்களுக்கு சேவையாற்றாத, கட்சி விரோத போக்கை கடைபிடிக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த கட்சியின் பொதுக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவோடு அவர்களை கட்சியே வெளியேற்றும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

நாடாளுமன்ற விவகாரம் ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமாக நடைபெறவில்லை. இதனை பார்க்கும் எதிர்கால சந்ததிகள் அரசியலுக்கு வரவே பயப்படுவார்கள். கட்சி உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை? தனிப்பட்டவர்களை விட கட்சி முக்கியம் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X