For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸார் கூப்பிட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: போலீஸார் விசாரணைக்கு அழைத்தால் எத்தனை மணி நேரம் அல்லது எத்தனை நாள் என்பதை தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சிறையில் அடைத்து விடுவார்கள் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், தடய அறிவியல் துறை இயக்ககத்தில் கட்டிட திறப்பு விழாவும் இன்று நடைபெற்றன.

இந்த விழாவில் டிஜிபி கே.பி.ஜெயின் வரவேற்றார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசினார்.

அவர் பேசுகையில், சிறிது நேரம் வந்து திறப்பு விழாவை நடத்தி விட்டு சென்றாலே போதும் என்று என்னை அழைத்து இங்கே ஒரு விழா நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் ஏற்பாடு செய்து விட்டனர். இது அவர்களின் கெட்டிக்காரத்தனம்.

போலீசார் இப்படித்தான் அழைப்பார்கள். என்னை பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பும் போதும் இப்படித்தான் அழைத்தார்கள். முரசொலி அலுவலகத்திலிருந்து நான் வீடு திரும்பும் வழியில் ஒரு போலீஸ்காரர் வந்து கொஞ்சம் என்னுடன் வாருங்கள் என்றார். நான் எங்கே என்றேன். கமிஷனர் அலுவலகம் வரை என்றார். உடனே திரும்பி விடலாமா? என்றேன்.

ஆம், உடனடியாக திரும்பி விடலாம் என்றார். நம்பிச் சென்றேன். ஆனால் அங்கிருந்து என்னை பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி விட்டார்கள். 60 நாட்கள் அங்கே சிறையில் இருந்தேன்.

தமிழகத்தில் மொழி புரட்சி நடைபெற்ற காலகட்டம் அது. எனவே எப்போது போலீசார் அழைத்தாலும், எவ்வளவு நேரம் அல்லது எத்தனை நாட்கள் அவர்களோடு இருக்க வேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாளையங்கோட்டை முதல் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த பிறகும் அதை நான் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஐ.ஜி. அலுவலகம் - மனக் கிளர்ச்சி:

இந்த ஐஜி அலுவலக இடத்தை நினைத்தாலே எனக்கு மனக்கிளர்ச்சி ஏற்படும். ஏனென்றால் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு வேறொரு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கடந்த ஆட்சியில் முடிவெடுத்தார்கள்.

முன்னாள் ஐஜி அருள் இது தொடர்பாக பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். உலகில் எங்குமே கடற்கரையோரம் காவல் துறைக்கென்று இப்படிப்பட்ட எழில்மிகு கட்டிடம் இருந்ததில்லை. அதை இடிப்பதாக வந்த தகவல் வருத்தத்தை அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் அருள் குறிப்பிட்டிருந்தார்.

1989-ல் நான் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபையிலேயே சொன்னேன். இந்த கட்டிடம் இடிக்கப்பட மாட்டாது; இது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ஐஜி அலுவலகமாகவே இயங்கும் என்றேன். அதன்படி செயல்பட்டோம்.

கடப்பாறையோடு வந்த காண்டிராக்டர்:

ஆனால் ஏற்கனவே உள்ள அரசோடு ஒப்பந்தம் போட்டு அட்வான்ஸ் தொகையும் கொடுத்து விட்டுத்தான் அந்த ஒப்பந்ததாரர் கடப்பாறையோடு இடிக்க வந்து விட்டார். அவரிடமும் கெஞ்சி கூத்தாடி நீதிமன்றத்திற்கு போய் தடையாணை பெற்றோம். ஒப்பந்ததாரரும் மனமிறங்கி விட்டு கொடுத்து விட்டார்.

அதன் பிறகு இந்த கட்டிடம் ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு இன்று எழிலார்ந்த நினைவுச் சின்னமாக விளங்கி கொண்டிருக்கிறது.

இதே போலத்தான் அண்ணா மேம்பாலம் அருகே அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை சங்கம் இருந்த 320 கிரவுண்டு நிலத்தை 30 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமித் திருந்தார். அதையும் நீதிமன்றத்தில் போராடி மீட்டிருக்கிறோம்.

இதே போல மத்திய சிறைச் சாலையை புழல் பகுதிக்கு கொண்டு சென்று அந்த இடத்தை அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு வழங்கி இருக்கிறோம்.

பாராட்ட மாட்டார்களா?:

நம்மை எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்கள் இதற்காகவாவது பாராட்ட மாட்டார்களா? என்ற அங்கலாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் பாராட்ட மாட்டார்கள். அந்த பாராட்டையும் நான் விரும்பவில்லை.

சென்னை நகரிலேயே 4 ஆயிரம் விளம்பர பலகைகள் நகரின் எழிலையே கெடுத்து, காற்றோட்டத்தையே தடுத்து மரங்களை மறைத்து கொண்டு நின்றது.

நகரே ஒருவித புழுக்கமான சூழ்நிலையில் இருந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் வாதாடி, போராடி, வழக்காடி வெற்றி பெற்று இந்த விளம்பர பலகைகளை அகற்றியிருக்கிறோம். இதற்காகவாவது பாராட்ட வேண்டாமா?

நல்ல மனமுள்ளோர் சிந்திக்க வேண்டும்:

நல்ல மனமுள்ளோர் இதை சிந்திக்க வேண்டும். இது மட்டுமல்ல, விரைவில் சட்டமன்ற வளாகத்துடன் புதிய தலைமைச் செயலகம் கட்ட இருக்கிறோம். வெளிநாட்டில் உள்ளது போல மிகப் பிரம்மாண்டமான மாநில நூலகம் அமைக்க உள்ளோம்.

மெட்ரோ ரெயில் திட்டம் வர இருக்கிறது. அடையாறு பூங்கா 100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. போக்குவரத்து வசதிக்காக பல புதிய மேம்பாலங்களை கட்டி வருகிறோம். மெரீனா கடற்கரை அழகுப்படுத்தும் திட்டம் விரைவில் முடிய இருக்கிறது.

தடைகளை இடறி எறிவோம்:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நேற்று மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியிருக்கிறது. இனி இதற்கு தடை வராது என்று நம்புகிறேன். தடைகள் வந்தாலும் அது இடறி எறியப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும்.

சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து நகரம், கிராமம் அனைத்திலும் ஏற்றமிகு காரியங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X