For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்- பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும், ஒடுக்க முயல வேண்டும். தலை தூக்காமல் அதை நசுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

15வது சார்க் மாநாடு கொழும்பு நகரில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.

மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரையில், தீவிரவாதத்திற்கு எதிரான மன நிலையில் பெரும் மாற்றம் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மன்மோகன் சிங் பேசுகையில், காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தீவிரவாத தாக்குதல், பெங்களூர் மற்றும் அமகதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், கொடூரமான, காட்டுமிராண்டித்தனத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன. இவற்றுக்கு எதிராக இன்னும் உறுதியுடன் போராட வேண்ம் என்பதை இந்த சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

தீவிரவாதம் நசுக்கப்பட வேண்டும். அது தலை தூக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நாடுகளின் வளர்ச்சிக்கு தீவிரவாதம்தான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தோல்வி அடைந்து விடக் கூடாது. இல்லாவிட்டால் அது நமது சமூக கட்டமைப்பை அழித்து விடும்.

தெற்காசிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும், அமைதிக்கும், நிலையான வளர்ச்சிக்கும் தீவிரவாதம் பெரும் சவாலாக உள்ளது.

அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழும் கட்டமைப்பு, சட்டத்தின் ஆட்சி, வளர்ச்சிக்கான சவால்களை நாம் திறம்பட சமாளிக்க வேண்டும்.


தெற்காசியாவின் மீது தீவிரவாத மேகம் சூழ்ந்து கிடக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. நமது பிராந்தியத்தின் மிகப் பெரிய சவால் தீவிரவாதம்தான்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டி விட்டு வருகிறது தீவிரவாதம். மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்து வருகிறது. இதை வேரறுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எவ்வளவு விரைந்து செயல்படுகிறோமோ அவ்வளவு விரைவில் நமது பிராந்தியம் வளர்ச்சியை சந்திக்கும்.

தெற்காசிய நாடுகளிடையே பொருளாதார ஒருங்கிணைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் அவசியம். வரும் காலத்தில் இவை சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

எதிர்பாராத எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு நமது பிராந்தியத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளது.

உலக அரங்கில் நமது குரல் வலுவாக எதிரொலிக்க சார்க் நாடுகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.

சூரிய சக்தி, நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றை பெருமளவில் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். தெற்காசியாவில் இவை அபரிமிதமான அளவில் உள்ளன.

விவசாய உற்பத்தி, உணவு தானிய கையிருப்பு, விவசாய வருமானம் ஆகியவற்றைப் பெருக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் உணவுப் பற்றாக்குறை என்ற பதத்தையே இப்பகுதியிலிருந்து ஒழித்து விட முடியும் என்றார் மன்மோகன் சிங்.

முன்னதாக சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் ஒப்படைத்தார் மன்மோகன் சிங்.

இம்மாநாட்டில் இந்தியா தவிர இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பூட்டான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக மாநாட்டுக்கு வந்திருந்த எட்டு நாடுகளின் தலைவர்களுக்கும் பண்டாரநாயகே நினைவு சர்வதேச மாநாட்டு அரங்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டையொட்டி அரங்கத்திற்கு உள்ளும், வெளியும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல உயரமான கட்டடங்களின் மேல் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டு அரங்கம் உள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு அறிவுரை:

முன்னதாக நேபாள நாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், தீவிரவாததத்தை ஒழிக்க பாகிஸ்தான் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அப்பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு நல்லுறவாக இருக்க வேண்டும் என்றால் எல்லை தாண்டிய தீவிரவாதம் முடிவுக்கு வர வேண்டும். அதற்கான உறுதியை பாகிஸ்தான் ஏற்க வேண்டும். தீவிரவாதம் இல்லாத சூழல்தான் இருநாட்டு உறவுக்கும் தேவை.

அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதைதான் பாகிஸ்தானிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்தை அடக்குவதற்கு பாகிஸ்தான் உதவ வேண்டும். அதற்கு இந்தியா தனது ஆதரவை அளிக்கும் என்றார்.

இன்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்திக்கும்போதும் இதே கருத்தையே மன்மோகன் சிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்தியா பலமுறை கூறி வந்தும் அதை அமெரிக்கா இதுவரை பொருட்படுத்தியதில்லை. ஆனால் தற்போது அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.யை அமெரிக்கா குறி வைத்து பாகிஸ்தானை நெருக்கத் தொடங்கியுள்ளது.

இந்தப் புதிய சூழ்நிலையில், தீவிரவாதத்தை ஒடுக்கினால்தான் சுமூகமான உறவு ஏற்படும் என்ற கருத்தை மன்மோகன் சிங் அழுத்தம்திருத்தமாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அமெரிக்காவோடு சேர்ந்து பாகிஸ்தானை இந்தியாவும் இனி நெருக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X