புக் செய்தால் 60 நாட்களில் காஸ் இணைப்பு

டெல்லியில் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாண்டே இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எண்ணை நிறுவனங்கள், புதிய காஸ் இணைப்புகளை 60 நாட்களுக்குள் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதிகபட்சம் 60 நாட்களுக்கு மேல் இணைப்பு வழங்க தாமதம் கூடாது என எண்ணை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழா காலம் நெருங்கி வருவதால் காஸ் விநியோகத்திலும் எந்தவித தடங்கலும் இருக்கக் கூடாது என்று எண்ணை நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. காஸ் சிலிண்டர்கள் தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும் எனவும் அவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்ய மாவட்ட, மாநில நாடு தழுவிய அளவில் குறை தீர்ப்பு முகமைகள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு எண்ணை நிறுவனத்திற்கும் தனித் தனி முகமைகளும் அமைக்கப்படும்.
திருவிழாக் காலம் நெருங்கி வருவதால், காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வகை செய்ய வேண்டும் என எண்ணை நிறுவனங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோலியப் பொருட்கள் நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
சமீபத்தில்தான் புதிய காஸ் இணைப்புகளை நிறுத்தி வைத்திருப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்திருந்தன. கடந்த ஒரு வருடமாக இந்த முடிவை அமல்படுத்தி வருவதாகவும் அவை கூறியிருந்தன. இந்த நிலையில் 2 மாதங்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.