For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வயசு 75'-பவள விழா காணும் மேட்டூர் அணை!

By Staff
Google Oneindia Tamil News

Mettur dam
11 காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கி வரும் மேட்டூர் அணைக்கு இன்று வயது 75. இத்தனை காலமானாலும் கூட, கம்பீரம் குறையாமல் தவித்த வயல்களுக்கு தண்ணீர் கொடுத்து வரும் மேட்டூர் அணையைப் பற்றிய ஒரு பெருமைப் பார்வை ...

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ளது மேட்டூர். காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்திலிருந்து பாசனப் பகுதி மக்களைக் காப்பாற்ற பிரமாண்ட அணை கட்ட வெள்ளையர் அரசு முடிவு செய்தது.

1925ல் தொடங்கி ...

இதையடுத்து அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

ரூ. 4.80 கோடி செலவு ..

1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும்.

அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.

11 மாவட்டங்களுக்கு பாசனம் ..

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன. மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும் உள்ளது.

அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் மொத்த நீர் தேக்க அளவு 120 அடியாகும். அதில் அதிகபட்சம் 93.4 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

மின்னலையும் தாங்கி ..

3 முறை மேட்டூர் அணையை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுக் குலையாமல் புதுக் கருக்கு கலையாத புதுப் பெண் போல இன்றும் எழிலுற திகழ்கிறது மேட்டூர் அணை.

இந்தியாவின் மிகப் பழமையான, மிகப் பெரிய அணைகளில் மேட்டூர் அணையும் ஒன்று.

'2 அனா கூலி'

மேட்டூர் அணை கட்டுமானப் பணியின்போது அதில் பங்கெடுத்துக் கொண்ட சின்னம்மாள் என்ற மூதாட்டி மேட்டூர் அணை குறித்து பெருமையுடன் பேசுகிறார். அப்போதெல்லாம் ஏராளமான பேர் அணை கட்டும் வேலையில் ஈடுபட்டோம். நல்ல சாப்பாடு போடுவார்கள். 2 அனா கூலி கொடுப்பார்கள்.

நமக்காக கட்டப்படும் அணை என்பதால் நாங்கள் ஆர்வத்தோடு வேலை பார்த்தோம். கட்டிய புதிதில் பார்த்தது போலவே இப்போதும் அணை இருப்பது பெருமையாக இருக்கிறது என்கிறார் சின்னம்மாள். இந்த குடு குடு பாட்டிக்கு இப்போது வயது 90ஐ நெருங்கி விட்டதாம்.

மேட்டூர் அணை 75 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியை பவள விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

75 அடி உயர கோபுரம் ..

பவள விழா ஆண்டை முன்னிட்டு, மேட்டூர் அணை வலது கரையில் லிப்ட் வசதியுடன் கூடிய 75 அடி உயர கோபுரம் கட்டப்படுகிறது. அதன் அருகில் அணை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அடங்கிய நூலகம், கான்பரன்ஸ் ஹால் கட்டப்படுகிறது.

மேட்டூர் அணை கட்டடத்தில் ஸ்டான்லி அணை என்று பெரிய அளவில் இரவிலும் ஒளிரும் வகையில் எழுத்துக்கள் வடிவமைக்கப்படுகிறது. மேட்டூர் அணை பூங்கா நுழைவாயிலில் பவளவிழா நினைவுத் தூண் கட்டப்படவுள்ளது. பவளவிழா சிறப்பு மலர் வெளியிடவும், பொதுப்பணித் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கிப் பெருகி பிரவாகம் எடுக்கும் காவிரித் தாயின் வேகத்தைக் கட்டுப்படுத்த கட்டப்பட்ட மேட்டூர் அணை இன்று காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் ஜீவாதாரமாக மாறியுள்ளது. அந்தக் கடமையை இன்றளவும் மேட்டூர் அணை தவறாமல் செய்து வருவது அனைவருக்கும் பெருமை தருவதாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X