For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கு சலுகை: 20 நாடுகள் எதிர்ப்பு-முடிவெடுக்காமல் கலைந்த என்.எஸ்.ஜி!

By Staff
Google Oneindia Tamil News

Nuclear deal
வியன்னா: இந்தியாவின் அணு வர்த்தகம் தொடர்பான சலுகைகள் அளிப்பது குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட என்.எஸ்.ஜி. கூட்டம் எந்த முடிவையும் எட்டாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான முதல் படியாக சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியில், இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளிப்பது, இந்தியா கோரியுள்ள சலுகைகள் குறித்து பரிசீலிப்பது ஆகிய முக்கிய முடிவுகளை அணுப் பொருள் சப்ளை குழுமம் எனப்படும் என்.எஸ்.ஜி.
கூடியது.

என்.எஸ்.ஜி. குழும உறுப்பினர்களிடம் வெளியுறவுத்துறைச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் தலைமையிலான இந்தியக் குழு இந்தியாவின் அணுக் கொள்கை குறித்து விளக்கம் அளித்தது.

அணு ஆயுத விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்டு வரும் விதம், அது கடைப்பிடித்து வரும் சுய கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

இந்தியாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டால் அது எந்த வகையிலும், உலகளாவிய அணு ஆயுதமற்ற சூழ்நிலையை பாதிக்காது என்றும் இந்தியா விளக்கியது.

மேலும், அணு எரிபொருளையோ அல்லது தொழில்நுட்பத்தையோ இந்தியா எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வதில்ைல என்பதையும் இந்தியக் குழு தெளிவுபடுத்தியது.

இக்கூட்டத்தின்போது உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்கள், விளக்கங்களை எழுப்பினர். இவற்றுக்கு இந்தியாவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் இந்தியாவுக்கு சலுகைகள் அளிக்க எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் நிபந்தனை விதிக்காமல் சலுகையை அளிக்கக் கூடாது என 20 நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் அணு மையங்களை ஐ.நா. ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும், அணு சோதனைகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும், என்.எஸ்.ஜி. சலுகைகளை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற முக்கிய நிபந்தனைகள் இந்தியாவுக்கு விதிக்கப்பட வேண்டும் என இந்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு அம்சம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவை எல்லாம் பூர்த்தி செய்யப்பட்ட பிறகே அணு வர்த்தகத்திற்கு இந்தியாவை அனுமதிக்கலாம் என இவை கூறின.

இருப்பினும் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகள் அளிப்பது குறித்து உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து 2 நாட்கள் நடந்து வந்த என்.எஸ்.ஜி. கூட்டம் எந்த முடிவையும் எடுக்காமல் முடிவடைந்தது.

அடுத்த கூட்டம் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் வியன்னாவில் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முடிவடைந்த கூட்டத்தின்போது, கிட்டத்தட்ட 20 நாடுகள் இந்தியாவுக்கு சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்தியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாததாலும், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தை அது அங்கீகரிக்காததாலும், நிபந்தனையற்ற சலுகைகள் அளிக்கக் கூடாது என அவை திட்டவட்டமாக கூறி விட்டன.

இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தீவிரமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடன்பாடு எட்டப்பட முடியவில்லை. இதையடுத்து கூட்டம் முடிவெடுக்காமல் கலைந்துள்ளது.

2 நாள் நடந்த என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் எஸ்.எஸ்.மேனன், பிரதமரின் சிறப்புத் தூதர் ஷியாம் சரண், அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருத்தம் கொண்டு வரலாம்-அமெரிக்கா:

இந்த நிலையில், என்.எஸ்.ஜி.யில் சலுகை கோரும் இந்தியாவின் வரைவு அறிக்கையில் சில திருத்தங்களைக் கொண்டு வரலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் கூறுகையில், என்ன மாதிரியான திருத்தங்களை செய்யலாம் என்பது குறித்து இந்திய, அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர்.

சில மாற்றங்களை நாம் ஏற்க முடியும். அவற்றை செய்யலாம். சிலவற்றில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். மொத்தத்தில் சலுகைகள் தேவை. அதற்கேற்ப வரைவு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யலாம்.

சில நாடுகள் திருத்தங்கள் கோருகின்றன. அவற்றில் சிலவற்றை ஏற்க முடியும். சிலவற்றை ஏற்க முடியாது.

சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பிய நாடுகளுடன் நான் பேசினேன். இப்போது பிரச்சினை என்னவென்றால் எப்படி நாம் இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான். பதிலளிக்கக் கூடிய கேள்விகளுக்கு மட்டுமே நாம் பதிலளிக்க முடியும் என்றார் பெளச்சர்.

இருப்பினும் என்ன மாதிரியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பெளச்சர் தெளிவுபடுத்தவில்லை. இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்துதான் என்.எஸ்.ஜியில் சமர்ப்பித்த வரைவறிக்கையை தயாரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

20 நாடுகள் வரை நிபந்தனையற்ற சலுகை தர எதிர்ப்பு தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர்களையும் ஆதரவு நாடுகள் வரிசையில் சேர்க்க முயற்சிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்திகள்:

வியன்னா..பெர்லின்..வாஷிங்டன்..!வியன்னா..பெர்லின்..வாஷிங்டன்..!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X