For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சி அமைக்க இன்று ஆளுநரை சந்திக்கிறார் சிபுசோரன்

By Staff
Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபுசோரன் இன்று அம்மாநில ஆளுநரை சந்திக்கிறார். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுக்கும் சோரன், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் மதுகோடா.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேச்சை எம்எல்ஏ மதுகோடா தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அவரது ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலக்கிக் கொண்டதால் மதுகோடா ஆட்சிக் கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்தது நேற்று முன் தினம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மதுகோடா.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபுசோரன் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மத்திய அரசுக்கு தனது 5 எம்பிக்கள் ஆதரவை கொடுத்து உதவியதற்காக, சிபுசோரனை முதல்வராக்க காங்கிரசும், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் முன் வந்துள்ளன.

இதனால் சிபுசோரன் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு கட்டமாக செயல்பட்டு வருகிறார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்ட சபையில் ஆட்சி அமைக்க 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக அதிகபட்சமாக 30 எம்எல்ஏக்கள் வைத்துள்ள போதிலும் பெரும்பான்மை பலத்தை எட்ட ஆதரவு இல்லாத நிலை உள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் (9), ராஷ்டீரிய ஜனதா தளம் (7), தேசியவாத காங்கிரஸ் (1) கட்சிகளின் ஆதரவை சேர்த்தால் 34 பேர் பலம் உள்ளது. இதனால் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க சிபுசோரன் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அம்மாநில ஆளுநர் சையது சிப்தே ரசியை சிபுசோரனின் மகன் துர்கா நேற்று சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்க உள்ளார் சிபுசோரன். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

சிபுசோரனை ஆதரிக்க 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் முன் வந்ததுள்ளதாக லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்தார். மேலும் 3 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் தேவை. அதற்கான ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. தேவைப்பட்டால் சிபு சோரனை முதல்வராக்க, நானே நேரில் ராஞ்சி செல்வேன் என்றும் லாலு பிரசாத் கூறினார்.

மதுகோடா-மராண்டி ஆதரவு:

சிபுசோரன் ஆட்சி அமைக்க நானும், என்னுடன் உள்ள 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க மாட்டோம் என்று பதவி விலகிய மதுகோடா கூறி இருந்தார். இந்நிலையில் திடீரென்று மனம் மாறியுள்ளார் மதுகோடா.

சிபு சோரனை முதல்வராக்குவதில் தீவிரமாக களமிறங்கிய மத்திய ரயில்வே அமைச்சர் லாலுவின் லீலையால் மனம் மாறி சோரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கோடா. அவரோடு சோரனை கடுமையாக தாக்கி விமர்சித்து வந்த சுயேச்சை எம்எல்ஏ ஸ்டீபன் மராண்டியும் சோரன் ஆட்சி அமைக்க திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இருவரும் தாங்கள் ஆதரவு தெரிவிக்கும் ஒப்புதல் கடிதத்தை சோரனிடம் இன்று வழங்கினர். இதுகுறித்து மதுகோடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லாலுஜி மற்றும் குருஜி (சிபு சோரன்) ஆகியோர் எனது வீட்டுக்கு வந்திருந்தனர். நமது பண்பாட்டின்படி விருந்தினர்கள் தெய்வத்துக்கு ஒப்பானவர்கள் (!). அந்த வகையில் அவர்களுக்கு மரியாதை செய்தேன். முன்னதாக ஆதரவளிப்பதில்லை என்று கூறியிருந்தேன். பின்னர் யோசித்து, சோரனுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு சோரன் முதல்வராக ஆதரவு அளிக்க முன் வந்துள்ளேன். சோரனின் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. நான் முதல்வராக இருந்த 23 மாதங்களில், செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை முடித்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்றார் கோடா.

கோடாவும் மராண்டியும் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர் என்று மட்டும் கூறிய லாலு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த இருவரின் ஆதரவும் சோரனின் முதல்வர் முயற்சிக்கு சுப முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

அதிக எம்எல்ஏக்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் முதலில் ஆட்சி அமைக்க பாஜகவைத்தான் அழைக்க வேண்டும் என்று மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதை ஆளுநர் கண்டுகொள்ள மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும், பணமும் தருவதாக சிபுசோரன் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே சிபுசோரன் ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் கூடிவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X