For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடதுசாரிகளை 'வெட்டிவிட' திமுக முடிவா?-கருணாநிதி மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இடதுசாரிகளுடனான உறவை துண்டித்துக் கொள்ள திமுக ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கூறியிருப்பதை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி குறித்த தமது நிலைபாட்டை திமுக முன்னதாகவே எடுத்து விட்டதாகத் தெரிகிறது. தற்போது திமுக தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளில் கம்யூனிஸ்ட் எதிர்ப்புத்தன்மை வெளிப்படுகிறது. இது வருத்தமளிக்கக் கூடியது. எனினும் தனிப்பட்ட முறையில் நான் என்றைக்கும் மரியாதை செலுத்தும் மூத்த தலைவர் கருணாநிதி என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: நானும் அதனைப் படித்தேன். தோழர் பரதன் எப்படி என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரோ, அதைப் போலவே தான் நான் என்றைக்கும் மரியாதை செலுத்தும் பொதுவுடைமைத் தலைவர்கள் தான் தோழர் பரதன் ஆனாலும், தோழர் ராஜா ஆனாலும், தோழர் பிரகாஷ் காரத் ஆனாலும், தோழர் எச்சூரி ஆனாலும் ஏன் இங்கே தமிழகத்திலே எடுத்துக் கொண்டால் கூட தோழர் நல்லகண்ணு, தோழர் தா. பாண்டியன், தோழர் என். வரதராசன், தோழர் டி.கே. ரெங்கராஜன் போன்றவர்கள். இதை அவர்களே அறிவார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் எனக்கு எந்த அளவிற்கு உடன்பாடானவை என்பதையும், நான் தந்தை பெரியாரையோ, பேரறிஞர் அண்ணாவையோ என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருப்பேனேயானால், நானும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகத்தான் இருந்திருப்பேன் என்பதை பலமுறை நான் கூறியதையும் இந்தத் தலைவர்கள் எல்லாம் நன்கறிவார்கள்.

கூட்டணி குறித்த தனது நிலைபாட்டை திமுக முன்னதாகவே எடுத்து விட்டதாகத் தெரிகிறது என்றும், திமுக தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளில் 'கம்யூனிஸ்ட் எதிர்ப்புத்தன்மை' வெளிப்படுகிறது என்றும், பரதன் கூறியிருக்கிறார். இதற்கு மட்டும் நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

கழகத்தின் பொருளாளர் ஆற்க்காட்டார், கம்யூனிஸ்ட்கள் பற்றி சற்று கடுமையாக விமர்சனம் செய்து, அதற்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பதில் சொல்வதற்கு முன்னதாகவே, நான் எழுதிய அறிக்கையில், திமுகவுடன் உறவு குறித்து தங்கள் கட்சியின் மாநிலக் குழுவைக் கலந்து கொண்டு தான் முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

கழகப் பொருளாளர் ஆற்க்காட்டார் பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல, நாம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைக்கும் முரணானது என்று அவரைக் கண்டித்திருக்கிறேன். அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

ஆற்க்காடு வீராசாமியை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், கழகத்தைச் சேர்ந்த வேறு யாரும் கூட அப்படி செயல்படக் கூடாது என்பதற்காகவே நான் விடுத்த அறிக்கையில்,

நமது கழகத்தினர் யாராயினும்- குறிப்பாக நம்முடைய தோழமை கொண்ட கட்சிகளைப் பற்றி- அவர்கள் எடுக்கும் முடிவினை அறிந்து- அதன் பின்னர் நாம் நமது தலைமைக் குழுவில் ஒரு முடிவெடுத்து அறிவிக்கும் வரையில் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டணிக் கட்சிகளாயிருந்தபோது கொண்டிருந்த நட்பையும்- ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும்- திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிட விட்டு விடக் கூடாது என்றும் சொல்லியிருப்பதிலிருந்தே திமுகழகம் முடிவு எதையும் முன்பாகவே எடுத்து விடவில்லை என்பதையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்புதன்மை எதையும் எடுக்கவில்லை என்பதையும் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான 'ஜனசக்தி'யில் கடந்த சில நாட்களாக வெளிவந்த ஒரு சில வாசகங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

* "சமூக விரோதிகளின் மக்கள் தொடர்பு அலுவலகங்களாகிவிட்ட காவல் நிலையங்கள்''

* "கொலை வழக்கில் அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆதரவாளர், ஆள் கடத்தல் புகாரில் என்.கே.கே.பி. ராஜா, தீண்டாமை வழக்கில் அமைச்சர் சுரேஷ்ராஜன், மிரட்டல் புகாரில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன், ரேஷன் அரிசி கடத்தல் சர்ச்சையில் அமைச்சர் எ.வ. வேலு, தனியார் கல்லூரியை அபகரிக்கும் சதியில் பொன்முடின்னு அமைச்சர்கள் வரிசையா மாட்றாங்க''

* "மின் இருட்டுக்கு யார் காரணம்?''

* "தமிழகத்தில் வன் முறைக் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது''

* "ஆள் கடத்தல், வீடு தரைமட்டம், மரங்கள் வெட்டி சாய்ப்பு- மனித உரிமை மீறலை வேடிக்கை பார்த்த பெருந்துறை காவல் துறை''

* "சிக்கலில் தடுமாறும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்''

* "காவல்துறை-சமூக விரோதிகள் கூட்டணி'' - தா. பாண்டியன் குற்றச்சாட்டு''

* "மாணவர்கள் மீது போலீஸ் தடியடி''

* "மணலும் தண்ணீரும் கொள்ளை போனால் மனிதன் எங்கே வாழ்வது?''

* "ரெட்டணை சம்பவம்- உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை- நல்லகண்ணு வலியுறுத்தல்''

இந்தச் செய்திகள் அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலத்தில் 'ஜன சக்தியில்' வெளியானவையாகும். இப்படிப்பட்ட செய்திகள் வெளியான நேரத்தில் எல்லாம் இது குறித்து டெல்லியிலும், தமிழகத்திலும் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு நான் தகவல் அனுப்பியிருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் உடன்பாடு, தோழமை கொள்வது என்பதெல்லாம் அந்தந்த கட்சிகளுக்கு உள்ள உரிமை. அவர்கள் கட்சியினரைக் கொண்டு கூட்டம் நடத்தி கலந்து பேசி எடுக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த அடிப்படையில் அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

ஆனால் திமுகழகத்தைப் பொறுத்தவரையில் எப்போதும் தோழமைக் கட்சியினரோடு தானாக முன் வந்து பகைத்துக் கொள்வதில்லை என்பதும், குறிப்பாக எங்களுடைய கொள்கைகளோடு ஒத்தக் கருத்துடைய பொதுவுடைமை கட்சியினரோடு உறவினை தானாக துண்டித்துக் கொள்ள முன் வந்ததில்லை என்பதையும் தோழர் பரதன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இது போன்ற பல உதாரணங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் பேசியதிலிருந்தும்- மார்க்சிஸ்ட் தினசரி ஏடான 'தீக்கதிர்' ஏட்டிலிருந்தும் எடுத்துக்காட்ட முடியும். அவையனைத்தும் இந்தப் பிரச்சினைக்கு முன்பே வெளி வந்தவை என்பதற்கு தேதிவாரி ஆதாரங்கள் இருக்கின்றன. இது ஒரு விளக்கம் தானே தவிர; பதிலுக்குப் பதில் என்று எழுதி விவகாரத்தை வளர்க்க விரும்பவில்லை.

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X