For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான எரிபொருள் விலை குறைப்பு-கட்டணம் குறையாது?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: விமான எரிபொருள் விலையை எண்ணை நிறுவனங்கள் 16 சதவீத அளவுக்கு குறைத்துள்ளன. இருப்பினும் விமான நிறுவனங்கள் ஏற்றிய கட்டணத்தைக் குறைக்கவில்லை. இப்போதைக்கு குறைக்கும் எண்ணத்திலும் அவை இல்லை என்று தெரிகிறது.

சர்வதேச அளவில் ஜெட் பியூல் எனப்படும் விமான என்ஜின் எரிபொருளின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய எண்ணை நிறுவனங்கள் இந்தியாவிலும் எரிபொருளின் விலையை கணிசமாக குறைத்துள்ளன. 16 சதவீத அளவுக்கு விலை குறைப்பை ஞாயிற்றுக்கிழமை இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து இந்தியாவின் பாதி அளவு தேவையை பூர்த்தி செய்யும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவிக்கையில், சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு எரிபொருள் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் விமான நிறுவனங்களுக்கான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 11,784 குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான விலைக் குறைப்பு கிலோ லிட்டருக்கு 205 டாலர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விலை குறைப்புக்குப் பின்னர் கிலோ லிட்டர் எரிபொருள் விலை ரூ. 59 ஆயிரத்து 244.26 ஆக இருக்கும். தற்போது விலை 71 ஆயிரத்து 28.26 ரூபாயாக உள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரத்தைப் பொருத்து மாதம் ஒருமுறை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை திருத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அளவுக்கு விலை குறைக்கப்பட்ட பின்னரும் கூட ஏற்றிய விமானக் கட்டணத்தை குறைக்கும் யோசனையில் விமான நிறுவனங்கள் இல்ைல. மாறாக, அடுத்த மாதம் புதிய விலை உயர்வை அவை அறிவித்துள்ளன.

அரசு நிறுவனமான ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் முதல் தனியார் விமான நிறுவனங்கள் வரை கட்டணத்தைக்குறைக்கும் யோசனையில் அவை இல்லை.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை செயலதிகாரி உல்ப்காங் பிராக் ஷூயர் கூறுகையில், இப்போதைக்கு கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது. விலை குறைப்பை பொருத்திருந்து பார்த்த பின்னர்தான் எந்த நடவடிக்கையையும் நாங்கள் பரிசீலிக்க முடியும்.

இப்போது விலை குறைக்கப்பட்டிருந்தாலும் கூட கடந்த ஆண்டு இருந்த விலையை விட இப்போது கூடுதலாகத்தான் உள்ளது என்றார்.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ்தான் கட்டணத்தை உயர்த்தியதில் முன்னணியில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் ஜெட் ஏர்வேஸ் மற்றும் அதன் உப நிறுவனமான ஜெட் லைட் ஆகியவற்றின் அடிப்படை கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் பயணக் கட்டணம் குறித்துக் கூறுகையில், விலைக் குறைப்பால் எங்களது நஷ்டம் கணிசமாக குறையும். இந்த பலனை பயணிகளுக்கும் அளிக்கும் வகையில், திங்கள்கிழமை முடிவு எடுக்கவுள்ளோம் என்றார்.

விமானக் கட்டண உயர்வினால் இந்தியாவின் விமானத்துறை வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 4 சதவீத பயணிகள் சரிவு காணப்பட்டது. ஜூலை மாதம் இது 10 சதவீதமாக அதிகரித்தது.

ஒவ்வொரு நிறுவனமும், அடிப்படை பயணக் கட்டணமாக ரூ. 1000 முதல் 1500 வரை வசூலிக்கின்றன. ஆனால் ஒரு டிக்கெட்டுக்கு வரிகள், எரிபொருள் உப வரிகள் வகையில் மட்டும் ரூ. 3475 வரை வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வால் கிங் பிஷர் ரெட் (முன்னாள் டெக்கான்), ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட பொறுத்திருந்துதான் முடிவெடுப்போம் என்றுகிங் பிஷர் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் ஹிதேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனமோ 2 அல்லது 3 மாதங்கள் பொறுத்துப் பார்த்து விட்டுத்தான் விமானக் கட்டணத்தை திருத்தி அமைப்பதுகுறித்து முடிவெடுப்போம் என அறிவித்துள்ளது.

பெங்களூர்-லண்டனுக்கு கிங் பிஷர்:

இதற்கிடையே, பெங்களூரிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு இயக்கப்படும் இந்த நான் ஸ்டாப் நேரடி விமான சேவை செப்டம்பர் 3ம் தேதி தொடங்குகிறது.

ஏர்பஸ் ஏ330-200 விமானம் இந்த சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதுகுறித்து நிறுவன தலைவர் விஜய் மல்லையா கூறுகையில், பெங்களூர்-லண்டன் சேவைதான் கிங்பிஷர் நிறுவனத்தின் முதல் சர்வதேச சேவையாகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X