For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீ: 2 சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் பலி-உடல்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து நடந்து 24 மணி நேரம் கழிந்த நிலையில் தீயில் கருகிய நிலையில் இரு ஊழியர்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டன.

சென்னை தியாகராய நகரின் முக்கியப் பகுதியான ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பாத்திரக் கடையில் நேற்று அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. நேற்று இரவு வரை நீடித்த இந்த பயங்கர விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பெரும்பாலான ஊழியர்கள் மீட்கப்பட்டு விட்ட நிலையில் கோட்டைச்சாமி (27), ராமஜெயம் (22) ஆகிய இரு ஊழியர்களை மட்டும் காணவில்லை என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் கடைக்காரர்களும், போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் உயிரிழப்பு இல்லை என்று கூறி வந்தனர்.

இந் நிலையில் இன்று காலை இருவரின் கருகிய உடல்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர். இறந்தவர்களில் கோட்டைச்சாமி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர். ராமஜெயம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டன.

இவர்களின் உடல்கள் 5வது மாடியில் இருந்தன. பலியான இருவரும் கடை பாதுகாப்புக்காக இரவு உள்ளே தங்கி இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

5வது மாடி வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்ப இயலாமல் போய் விட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

இன்னொருவர் எங்கே?:

அவர்களுடன் திலீப் என்ற கூர்க்காவும் காவலுக்கு இருந்துள்ளார். அவர் என்ன ஆனார் என்று தெரியவி்ல்லை. அவர் தீக்காயங்களுடன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை.

பலியானவர்களில் ஒருவர் நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் மூவேந்தர் தெற்கு தெருவை சேர்ந்த பேச்சிமுத்து என்ற வெள்ளையனின் மகன் கோட்டைசாமி ஆவார். மற்றொருவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கிழக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சந்திரன் நாடார் மகன் ராம ஜெயம் (22) ஆவா

இரு உடல்களையும் போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் மீண்டும் தீ விபத்து:

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. ஐந்தாவது மாடியில் இந்த விபத்து ஏற்பட்டது.

ஏற்கனவே எரிந்து போயிருந்த பொருட்களிலிருந்து பரவிய பொறியால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ரங்கநாதன் தெருவில் நேற்று மூடப்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்றும் மூடப்பட்டுள்ளன. தெருவில் உள்ள ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அந்தத் தெரு இன்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மட்டுமே அங்கு முகாமிட்டுள்ளனர்.

கட்டடம் இடியும் ஆபத்து:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தீயணைப்பு வண்டிகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை பெரும் சேதமடைந்திருப்பதால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே அது இடிந்து விழலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் கூறுகையில், ஒரு கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் வெப்பம் 3 அல்லது நான்கு மணி நேரத்திற்குள் வெளியேறி விடவேண்டும். ஆனால் சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஏற்பட்ட வெப்பம் இன்னும் வெளியேறாமல் உள்ளது. கட்டடம் மிகவும் நெருக்கடியான இடத்தில் இருப்பதால் வெப்பம் போகாமல் உள்ளது.

இதனால் கட்டடத்தின் பலம் பலவீனமடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் கட்டடத்தில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.இதனால் மொத்த கட்டடமும் இடியக் கூடிய ஆபத்தும் இருப்பதை இல்லை என்று சொல்லி விட முடியாது.

வியாபாரிகள் கோரிக்கை:

இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படவுள்ளதால், கடைகளை திறக்க போலீஸார் அனுமதிக்க வேண்டும் என்று ரங்கநாதன் தெரு கடை உரிமையாளர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் போலீஸார் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைகளைத் திறக்க அனுமதி மறுத்து விட்டனர்.

சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் இடியக் கூடிய ஆபத்து இருப்பதால் ரங்கநாதன் தெருவில் மக்களை நடமாட அனுமதிப்பது பெரும் ஆபத்தாகி விடும் என காவல்துறை கூறியுள்ளது.

இந்த சிக்கல் காரணமாக ரங்கநாதன் தெருவில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X