For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரசேவையை ஜெ. ஆதரித்து பேசினார்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் அயோத்தியில் கர சேவையை ஆதரித்து பேசியவர் தான் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் கோ.க.மணி இல்லத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு கருணாநிதி செல்லவில்லை என்று "டெக்கான்-கிரானிகல்'' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதே?

பதில்: அரசியல் காரணங்களுக்காக நண்பர்களை அலட்சியப்படுத்துகின்ற இழிவான பண்பாடு எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால் நண்பர் மணி எனக்குத் திருமண அழைப்பே தரவில்லை. ஆனால் அந்த நாளேடு, அவர் எனக்கு நேரடியாக அழைப்பிதழைக் கொடுத்ததாக பொய்ச் செய்தி வெளியிட்டு என்னிடமிருந்து இந்த உண்மையான பதில் வர வழிவகை செய்துள்ளது.

கேள்வி: கரசேவையை தான் ஆதரிக்கவே இல்லை என்றும், நீங்கள்தான் திரும்பத் திரும்ப ஜெயலலிதா கரசேவையை ஆதரித்ததாகக் கூறுகிறீர்கள் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவையை 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று தொடங்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்த நிலையில்- "மத்திய அரசு அதிலே என்ன செய்யப் போகிறது என்பதை 23.11.1992க்குள் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதற்காக மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டு மன்றக்கூட்டத்தைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தை பாஜகவும், விஸ்வ இந்து பரிஷதும் புறக்கணித்தன.

கரசேவையை மீண்டும் தொடங்குவதாக விஎச்பி அறிவித்ததையொட்டி, சட்டத்தின் மாட்சியையும் அரசியல் சாசனத்தின் கண்ணியத்தையும் காப்பாற்ற பொருத்தமான நடவடிக்கை எதையும் எடுக்க- அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரசிம்மராவ் பேசும்போது, அயோத்தி விவகாரத்தில் சட்டமோ, நீதிமன்ற உத்தரவோ எந்த வகையிலும் மீறப்பட அனுமதிப்பதற்கில்லை என்றும், கரசேவை திட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தார்.

ஆனால் அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன பேசினார் என்பதை 'தினமணி' நாளோடு (24.11.1992) அன்று வெளியிட்டிருந்தது. அதன் விவரம்:

''பெரும்பான்மையினராக உள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே அளவில் சிறுபான்மையினராக உள்ள குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நம்முடைய நடைமுறைகள் அமைய வேண்டும் என்ற பொறுப்பை நமது அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை நமக்குத் தந்தள்ளது.

அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல், சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல.

இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச்சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும்.

பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப் போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.

அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும்.

உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவிதமான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக்கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கட்டுமானத்துக்குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். சட்டச் சிக்கல் இருப்பதையே இந்தப் பிரச்சினையில் முடிவு எடுப்பதை ஒத்திப் போடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் கட்டுப்பட மறுக்கும் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர் கொள்வது ஒவ்வொரு நாளும் நகர நகர அரசுக்குப் பெரும் கடினமாக அமையும். எனவே கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்த அமைப்பு எடுக்க வேண்டியுள்ளது.

கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுக தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரபிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்''.

இப்படியெல்லாம் கர சேவை பற்றி அதற்காகவே நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவிலே பேசியவர்தான், தற்போது இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதைப் போல கரசேவையா, நானா ஆதரித்தேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அவரது பேச்சு வெளி வந்த 'தினமணி' இன்றளவும் உள்ளது.

கேள்வி: 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற கருணாநிதி உதவி செய்யவில்லை என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

பதில்: 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கும், ஏன் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்த மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் யார் யார் காரணம் என்பதெல்லாம் அவருடைய உள்ளத்திற்குத் தெரியும். ஆனால் வெளிப்படையாக குற்றம் சொல்ல வேண்டுமென்பதற்காக இட்டுக்கட்டிச் சொல்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும். குறிப்பாக 27 சதவீத இடஒதுக்கீடு பற்றி அவசரச் சட்டம் ஒன்றையே பிறப்பிக்குமாறு நான் பிரதமருக்கே கடிதம் எழுதி, அது பழைய ஏடுகளில் இன்றளவும் செய்தியாக உள்ளது. அந்தக் கடிதம் எழுதியவுடன், அதனை வர வேற்றதும் இதே டாக்டர் ராமதாஸ்தான்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X