For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலீடுகள்: 6வது இடத்தில் தமிழகம்- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முதலீடுகளைப் பெறுவதில் இந்தியாவில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: நில உச்ச வரம்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அமைச்சரவை முடிவெடுத்ததற்கு டாக்டர் ராமதாஸ் ஐயப்பாடுகளை எழுப்பியிருக்கிறாரே?

பதில்: இந்தியாவிலேயே நில உச்சவரம்புச் சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்தது திமுக அரசுதான். சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, மிகை நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி, உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்ற நோக்கத்தை முழுமையாக எய்துவதற்கான புதிய நிலச் சீர்திருத்தச் சட்டம் கழக ஆட்சியிலேதான் கொண்டு வரப்பட்டது.

கழக ஆட்சியில்தான், 1970ம் ஆண்டு உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று திடீரென்று அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது.

இதன் விளைவாக, 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் உபரி நிலம் என்று கைப்பற்றப்பட்டு தகுதியுள்ள நிலமற்ற 1 லட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. அதில், 61 ஆயிரத்து 985 பேர் ஆதிதிராவிடர்கள்; 204 பேர் பழங்குடியினர்.

கழக அரசு நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலமாக பணக்காரர் யாருக்கும் நிலம் வழங்கவும் இல்லை, சலுகை காட்டவுமில்லை. இனியும் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை.

டாக்டர் ராமதாஸ் நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு விதி விலக்கு வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்திருப்பதை மறந்துவிட்டு வேண்டுமென்றே தற்போது அறிக்கை விட்டிருப்பது என்பது யாரை ஏமாற்றுவதற்கு என்பதுதான் புரியவில்லை.

கேள்வி: தொழில் முதலீடுகளைப் பெற்ற முன்னணி மாநிலங்களில் தமிழகம் இடம் பெறவில்லையே என்று டாக்டர் ராமதாஸ் வினா தொடுத்திருக்கிறாரே?

பதில்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாட்டில் செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்புடைய அனைத்து விவரங்களையும் முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல் ஏதாவது குற்றம் சாட்ட வேண்டுமென்று அவசரத்தில் இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி, ஜூன் 2006ல் தொடங்கி மார்ச் 2008 வரையிலான காலத்தில் செய்யப்படவுள்ள புதிய முதலீடுகளின் மதிப்பு ரூபாய் 1,78,999 கோடியாகும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், புதிய முதலீடுகளைப் பெறுவதில் தமிழ்நாடு 6 இடம் வகிக்கிறது.

முன்னோடியாக உள்ள மராட்டியம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கனிமம் சார்ந்த தொழில்களில் (mining and quarrying) பெரும் அளவிலான முதலீட்டினைப் பெற்றுள்ளன. இதனால் தான் தமிழகத்தை விட அதிக அளவில் முதலீட்டைப் பெற முடிந்துள்ளது.

2006ம் ஆண்டு மே மாதத்திற்கு முன் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட முதலீட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், இம்மாநிலத்தில் தற்போது முதலீடு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது கண்கூடு.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையின்படி, 2004, 2005 மற்றும் 2006 ஆண்டுகளில் முறையே 69,436 கோடி ரூபாய், 75,600 கோடி ரூபாய் மற்றும் 69,340 கோடி ரூபாய் ஆகும்.

ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 2007ம் ஆண்டில் முதலீடு 3,29,184 கோடி ரூபாய். 2008ம் ஆண்டில் புதிய முதலீடு ரூபாய் 4,50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் ராமதாஸ் இன்னும் முறையாக அச்சிடப்பட்டு வெளியிடப்படாத 'அசோசெம்' ஆய்வறிக்கையை வைத்துக் கொண்டு தமிழ்நாடு பத்து மாநிலங்களில் ஒன்றாக இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதே அசோசெம் தலைவரான ஜிண்டால் "சட்டம் ஒழுங்கு, மின் வினியோகம், உள்கட்டமைப்பு வசதி, தொழிலாளர் நல்லுறவு ஆகியவை மேற்கு வங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில், இதுவரை கையெழுத்திடப்பட்ட 19 ஒப்பந்தங்கள் மூலமாக 61,210 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1,11,630 நபர்களுக்கு, மறைமுக வேலை வாய்ப்பும் உருவாகவுள்ளது.

இவை தவிர அமைச்சரவையிலே மேலும் 13 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த 13 திட்டங்களுக்கான முதலீடு 19,574 கோடி ரூபாயாகும். மேலும் அமைச்சரவை ஒப்புதலுக்கு வரவேண்டிய திட்டங்கள் நான்கு உள்ளன. அந்த 4 திட்டங்களுக்கான முதலீடு 9,550 கோடி ரூபாய் ஆகும். மேலும் 5550 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு திட்டங்கள் வருவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தம் 38 திட்டங்கள் 60,357 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X