For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவீனத்துக்கு மாறும் இந்தியத் தபால்துறை!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தபால் துறையின் பாரம்பரியமும் சேவையும் மகத்தானது. கால்கடுக்க நடந்தும், மணிக்கணக்கில் பிரயாணம் செய்தும் தகவலைக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருந்த இந்தியத் தபால் துறைக்கு நூறாண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.

ஒரு காலத்தில்... அதாவது தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை வெறும் தபால் மட்டுமல்லாமல் தந்தி, தொலைபேசி என அனைத்து தகவல் தொடர்புகளையும் தன்னகத்தே வைத்திருந்த தபால் துறை இந்தத் துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்தது. நல்ல வருமானமும் சம்பாதித்தது.

சேவையின் தரம் முன்னே பின்னே இருந்தாலும், இவர்களை விட்டால் வழியில்லை என்பதால் தபால் அலுவலகங்கள் எப்போதும் நிரம்பி வழியும், சிறு நகரங்களிலும்.

பஸ் போகாத ஊருக்கும் கூட இந்திய தபால்காரர்கள் சைக்கிளில் பயணித்து கடிதங்களைச் சேர்த்தனர். இவர்கள்தான் அன்றைக்கு நற்செய்தியின் தூதுவர்கள். அதே போல இவர்கள் சார் தந்தி என்று சொல்லி வாய்மூடுமுன், கேட்பவர் அலறிவிடுவார். அப்படி ஒரு வழக்கம். கெட்ட செய்தி மட்டும்தான் (உறவினர் வருகை உள்பட!) தந்தியில் வரும் அப்போதெல்லாம்.

ஆனால் எப்போது கூரியர் சர்வீசும், மொபைல் போனும், தனியார் தொலைபேசிகளும் நுழைந்தனவோ அப்போதே தபால் துறைக்கு கஷ்ட காலம் தொடங்கிவிட்டது.

இமெயில், இன்டர்நெட் வசதிகள் வந்தபிறகு தபால் எழுதும் வழக்கத்தையே பலர் மறந்து போனார்கள்.

தகவல்களை வேகமாகவும் அனுப்பலாம், கட்டணமும் மலிவு என்பதால் காகித வடிவிலான தகவல் அனுப்புவதைப் பலர் நிறுத்திவிட்டு, இமெயிலுக்குத் தாவிவிட்டனர்.

இதனால், தபால் துறையும், அதில் பணிபுரியும் பல லட்சம் ஊழியர்களும் தடுமாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட தபால் துறை, ஸ்பீட் போஸ்ட், லாஜிஸ்டிக் போஸ்ட், ஏர் டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட் விற்பனை, பாஸ்போர்ட் பரிமாற்றம் என பல்வேறு புதிய விஷயங்களை மலிவான கட்டணத்தில் அறிமுகப்படுத்த ஆரம்பித்தது.

இதுவரை தபால்களை மட்டுமே கையாண்டு வந்த ஊழியர்கள், வணிக நோக்கிலான செயல்பாடுகளையும் மேற்கொண்டனர். கடும் சரிவிலிருந்த தபால் துறைக்கு இதன் மூலம் வந்த வருவாய் சற்றே இளைப்பாற உதவியது.

தபால் பணி வருமானத்தைப் பங்குபோட நிறைய தனியார் பங்காளிகள் வந்துவிட்ட நிலையில் நல்ல நெட்வொர்க் மற்றும் பணியாளர் வசதி கொண்ட தபால் துறை ஏன் மக்களுடன் அன்றாடம் நுகர்வோர் தொடர்புள்ள சேவைகளைச் செய்து பணம் ஈட்டக்கூடாது? இப்படிச் சிந்தித்தன் விளைவு, பல புதிய சேவைகள் மூலம் வருமானம் ஈட்டுவதில் மும்முரமாக இறங்க வைத்தது தபால் துறையை.

விளம்பர சேகரிப்பு:

பத்திரிகை விளம்பரங்களை கேன்வாசிங் செய்தல், பத்திரிகைகளுக்கு சந்தாதாரர்களை சேர்த்தல், நாடு தழுவிய அளவில் கோர் பேங்கிங் போல ஒருங்கிணைக்கப்பட்ட போஸ்ட் பேங்க் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளை படிப்படியாக அறிமுகப்படுத்துவதுதான் தபால் துறையின் மாற்றுத் திட்டங்கள்.

இதன்படி இனி தபால் கொடுக்க வரும் ஊழியர்களே, பத்திரிகைகளுக்கு விளம்பரங்களையும் சேகரிப்பார்கள். மணமகன், மணமகள் தேவை, வீடு, நிலம் விற்பனை துவங்கி அனைத்து விளம்பரங்களும் போஸ்ட் மேன்கள் மூலம் பெற்று, தபால் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

விளம்பரங்களைச் சேகரித்த போஸ்ட்மேன்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாகவும் வழங்கப்படும்.

இதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, தபால் துறையின் வருமானமும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக, பத்திரிகைகளுக்கு புதிய சந்தாரர்களைச் சேர்க்கும் பணியிலும் தபால் துறை இறங்க உள்ளது. ஒரு வாடிக்கையாளரை சேர்த்தால் குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதன்படி, ஒவ்வொரு புதிய வாடிக்கையாளர் சேர்ப்பிற்கும் தபால்காரர்களுக்கும், தபால் துறைக்கும் கமிஷன் கிடைக்கும்.

போஸ்ட் பேங்கிங்:

இதேபோல வங்கித்துறையிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது தபால் துறை.

நாட்டின் பெரிய வங்கிகள் தற்போது கோர் பேங்கிங் என்ற திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து கிளைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம், நாட்டின் எந்த ஒரு கிளையில் பணம் செலுத்தினாலும், அந்த வங்கியின் பிற கிளைகளில் பணம் எடுக்க முடியும்.

இதே திட்டத்தை, 'போஸ்ட் பேங்கிங்' என்ற பெயரில் தபால் அலுவலகத்திலும் அறிமுகப்படுத்த தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாடு தழுவிய அளவில், சிறு கிராமங்களில் கூட தபால் அலுவலகங்கள் இருப்பதால், போஸ்ட் பேங்கிங் திட்டத்தின் கீழ் மிக எளிதாக பொதுமக்கள் பணத்தை எடுக்கவும், செலுத்தவும் முடியும்.

இன்னும் இது போன்ற பல மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவானத்தைப் பெருக்க உள்ளது தபால்துறை.

இப்படிப்பட்ட யோசனைகளை தபால் துறை மேற்கொள்ள உந்துதலாக இருந்தது இந்தியாவில் பெருகிவரும் பிபிஓ மையங்கள்தானாம்.

தபால் துறையின் வருவாய் உயர்ந்தால் மட்டும் போதுமா... தபால்காரரின் நிலை உயர வேண்டுமல்லவா... இன்னும் எத்தனை நாளைக்குதான் சைக்கிளிலேயே தபால் கொண்டு வருவார் அவர்... எனவே இதற்கும் ஒரு திட்டம் வைத்துள்ளது தபால்துறை.

அதன்படி ஒவ்வொரு தபால்காரருக்கும் அவரது அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் இரு சக்கர வாகனங்களை வழங்கும் திட்டமும் உள்ளது. இவர்கள் வருகையை அறிவிக்கவென்றே இரு சக்கர வாகனங்களில் தனி ஒலிப்பான்களும் பொருத்தப்படுமாம்!

என்ன... இனி கவிதைகளில் தபால்காரரின் சைக்கிளில் கொண்டு வருவது உன் கடிதமல்ல, என் இதயம் என யாரும் எழுத முடியாது, அவ்வளவுதான்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X