For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவதூறு பரப்பும் சன் டிவி: கருணாநிதி கடும் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அரசு கேபிள் டிவி கழகத்திற்கு சேனல்களைத் தராமல், பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு, அதற்குப் புறம்பாக பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுக்களைப் பரப்பும் சன் டிவி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மதுரையில் சன் டிவிக்கும், மு.க.அழகிரியின் ஆர்.சி.விக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. மறுபக்கம், அரசு கேபிள் டிவி கழகத்திற்கு தனது சேனல்களைத் தராமல் சன் டிவி இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை சன் டிவி நிர்வாகம் மறுத்திருந்தது.

இந் நிலையில், முதல்வர் கருணாநிதி சன் டிவிக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

கேபிள் டிவி குறித்து மதுரையில் உள்ள ராயல் கேபிள் விஷன் அறிக்கை கொடுப்பதும், அதற்கு சன் டிவி நிறுவனத்தினர் பதில் அறிக்கை கொடுப்பதும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் உண்மை நிலை புரியாமல் இருப்பதும் தொடர்வது கண்டு அரசின் சார்பில் அதற்கான விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் இதை யார் நடத்துகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. அரசின் சார்பில் ஒரு நிறுவனம் இந்த ஆட்சியிலே தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில்கூட இதுபோன்ற அரசு கேபிள் நிறுவனம் தொடங்க முற்பட்டபோது, இதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. மத்திய அரசுதான் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றுதான் திமுக சார்பில் கருத்து கூறப்பட்டது.

தற்போதுகூட மாநில அரசு கேபிள் நிறுவனத்தை தொடங்குவதற்கான அனுமதியை முறைப்படி மத்திய அரசிடம் விண்ணப்பித்து சட்டப்படி பெற்றுத்தான் இதனை நடத்த தொடங்கி உள்ளது.

அரசு கேபிள் நிறுவனம் தற்போது தஞ்சையிலும், கோவையிலும் தொடங்கப்பட்டு அதன் மூலமாக பல மாவட்டங்கள் இந்த வசதியை பெற்றுள்ளன. அரசின் மூலமாக கேபிள் இணைப்பை பெற்றவர்கள் குறைந்த கட்டணத் தொகையை செலுத்தினால் போதும். எனவே மக்களுக்கு சலுகை விலையில் பாரபட்சமற்ற முறையில் நல்லது செய்ய வேண்டுமென்ற சீரிய குறிக்கோளோடுதான் இந்த அரசு நிறுவனம் செயல்பட தொடங்கி உள்ளது.

விதண்டாவாதமே தவிர வேறல்ல..

அரசு ஒரு கேபிள் நிறுவனத்தை தொடங்கும்போது, அதற்கு அனைத்து டிவிகளும் ஒத்துழைப்பு நல்குவது தானே முறை. மாறாக நாங்கள் ஏகபோக உரிமையாகத்தான் இருப்போம். யார் கேட்டாலும் இணைப்பைத் தரமாட்டோம். கடிதம் மூலம் பதில் எழுதி இழுத்தடிப்போம் என்பதை எல்லாம் விதண்டாவாதமே தவிர வேறல்ல.

நேற்று சன் டிவியில் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு கேபிள் டிவிக்கு சன் டிவி தன் சேனல்களை தர மறுப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் என்று கூறி இருக்கிறது.

அதிலே என்ன பொய் ...

இணைப்பு கொடுக்கவில்லையாம், ஆனால் அதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக்கிறார்களாம். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றால் இன்னும் இணைப்பு கொடுக்கவில்லை என்பது தானே உண்மை. அதிலே என்ன பொய் இருக்கிறது.

பேச்சுவார்த்தை நடந்ததற்காக ஒரு ஆதாரம் காட்டியிருக்கிறார்கள். அதிலே 18.08.2008 அன்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கடிதம் எழுத 10 நாள், அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்த 10 நாள் என்று நாளை கடத்துவது ஏமாற்றும் செயல்தானே?

ஜெயா டிவி, மக்கள் டிவி ஒத்துழைப்பு..

மற்றவர்கள் நடத்தும் ஜெயா டிவி, மக்கள் டிவி ஆகியவை அரசு டிவிக்கு ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், ஒரு நிறுவனம் மட்டும் குதர்க்கம் செய்வது தாமதப்படுத்தும் நடவடிக்கையே தவிர, கடைசி வரை இணைப்பு கொடுக்காமல் இருக்க முடியாது.

ஏதாவது வம்பு வளர்க்க வேண்டும் என்று நினைப்பது உள்ளபடியே யார் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.

அவ்வாறு அரசாங்கமே மக்கள் நலனுக்காக இந்த செயலை ஆற்றிட முற்பட்டால் நாங்கள் எங்கள் சேனல்களை வழங்க மாட்டோம் என்று கூறி பிரச்சனையை ஏற்படுத்துவது யார்? தேவையில்லாமல் இடைஞ்சலையும், தாமதத்தையும் ஏற்படுத்தி எப்படியாவது குழப்பத்தை உருவாக்க நினைப்பது யார்?

என்னைப் பொறுத்தவரை காவல் துறை அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுரைகள் வழங்கி உள்ளேன். இதில் சட்டம் ஒழுங்குக்கு கெடுதல் ஏற்படுத்தும் எண்ணத்துடன் யார் செயல்பட்டாலோ அல்லது தூண்டி விட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

கம்பியை வெட்டினால் நடவடிக்கை ..

ஒருவர் இன்னொரு நிறுவனத்தின் கம்பியை வெட்டுவது என்ற புகார் எந்த தரப்பிலிருந்து வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு பாரபட்சமற்ற நேர்மையான அரசுதான் முக்கியமே தவிர, சொந்தம் என்பதெல்லாம் எப்போதும் கிடையாது.

அரசு தொலைக்காட்சிக்கு சன் டிவி மட்டும் சேனல் வழங்காமல் இல்லை. ஸ்டார், சோனி, ஜி குழுமங்களும் அரசு டிவிக்கு சேனல் தரவில்லை என்று பெரிய விளக்கத்தை அந்த நிறுவனம் தனது அறிக்கையிலே கூறியிருக்கிறது.

அவர்கள் குறிப்பிடுகின்ற இந்த ஒரு சில நிறுவனங்கள் ஜி குழுமத்தை தவிர சன் தொலைக்காட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற டிவிக்கள் என்பதை தொழில் புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

ஜி குழுமத்தின் சேனல்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சையில் ஒளிபரப்பி வருகிறது. ஒன்றுமறியாத பாமர மக்களை இப்படியெல்லாம் எழுதி ஏமாற்றலாம். அரசு கேபிளுக்காக வக்காலத்து வாங்கும் இவர்கள் அங்கே ஆர்சிவியை ஆரம்பித்து அரசு கேபிள் வராமல் தடுக்க முனைவது ஏன்? என்று சன் டிவி கேட்டுள்ளது.

வக்காலத்து வாங்கத்தான் செய்வார்கள் ..

ஜனநாயக உணர்வுள்ள யாரும் அரசு கேபிள் டிவிக்காக வக்காலத்து வாங்கத்தான் செய்வார்கள். அரசை பகையாக நினைப்பவர்கள்தான் வக்காலத்து வாங்குவதாக எழுத துணிவார்கள்.

ஆர்சிவியை ஆரம்பித்து அரசு கேபிள் வராமல் தடுக்க அவர்கள் முயற்சிப்பதாக இவர்கள்தான் இட்டுக்கட்டி கூறுகிறார்களே தவிர, ஆர்சிவியாக இருந்தாலும் சரி, வேறு எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அவர்கள் அரசு நிறுவனத்தோடு ஒத்துழைத்துத்தான் செயலாற்ற போகிறார்கள். அப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல் மதுரையில் ஏதோ அரசு டிவி நிறுவனமே வராது என்பது போல நினைத்துக் கொண்டு அறிக்கை விட்டுள்ளார்கள்.

மதுரை உட்பட, சென்னை உட்பட, நெல்லை உட்பட அனைத்து இடங்களிலும் வரும் 15ம் தேதி முதல் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட உள்ளது. அரசு கேபிள் நிறுவனத்துடன் ஒத்துழைப்புடன் மற்ற நிறுவனங்கள் எல்லாம் பணியாற்ற போகின்றன.

இதை எல்லாம் மறைத்துவிட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிற நோக்கத்தை அரசு கேபிள் டிவி மீது அவதூறு பரப்புபவர்கள் சட்டப்படி அணுக வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது என்று சுட்டிக் காட்டுவது என் கடமை என்பதால் இந்த அறிக்கை வெளியிட தேவைப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X