For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்யூ. குற்றச்சாட்டு: இது நம் 'ராசி'- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அண்ணா பிறந்த நாளில் விடுவிக்கப்பட்ட 1,405 கைதிகளில், ஒருவர் கூட, கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதைப் போல ஓராண்டு மட்டுமே சிறை தண்டனையை அனுபவித்தவர்கள் அல்ல. ஏழாண்டுகள் தண்டனையை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் விவரம்:

கேள்வி: மதுரை லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலே இருந்தவர்களை அண்ணாவின் நூற்றாண்டு விழாவினையொட்டி விடுதலை செய்திருப்பதை தா. பாண்டியன், வரதராசன் போன்றவர்கள் கண்டித்திருக்கிறார்களே?

பதில்: அண்ணாவின் பிறந்த நாளையொட்டியும், மற்ற தலைவர்களின் பிறந்த நாளையொட்டியும் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதென்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் இது கழக ஆட்சியிலே மட்டுமல்ல, அதிமுக ஆட்சியிலும் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அவருடைய பிறந்த நாளையொட்டியே கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்போது கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கவில்லை. இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் அது நம்முடைய 'ராசி' என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக எப்போதும் பத்தாண்டு காலம் சிறையிலே இருந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

தற்போது அண்ணாவின் நூற்றாண்டு என்பதால் 7 ஆண்டு காலம் சிறையிலே இருந்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற புதிய முடிவினை ஒரு சலுகையாக அரசு எடுத்துள்ளது. ஆளுநரின் அனுமதியோடு இந்த முடிவினை எடுக்க அரசுக்கு உரிமையுண்டு.

1,405 கைதிகளை விடுவிக்கும் போது அதிலே மதுரையைச் சேர்ந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்றும் கொலை செய்யப்பட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எப்படி விடுவிக்கலாம் என்று கேட்கிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர் மதுரையைச் சேர்ந்த லீலாவதி. அவர் கொலை செய்யப்பட்ட போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுக என்பதற்காக எந்தத் தயக்கமும் காட்டப்படவில்லை. முறைப்படி கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், அரசு தரப்பில் பப்ளிக் பிராசிகியூட்டர் இந்த வழக்கிலே ஆஜரானால் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவார் என்றும் வழக்கை முறையாக நடத்த மாட்டார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய போது, குற்றஞ்சாட்டப்பட்ட தனது கட்சியினருக்கு எதிராகவே- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்ட வழக்கறிஞரையே அந்த வழக்கில் ஆஜராகச் செய்து, தன் கட்சியினர் தண்டிக்கப்படவே காரணமாக இருந்தது தான் திமுக அரசு.

லீலாவதி கொலைக்கு பிறகு நான் மதுரைக்குச் சென்றிருந்த போது இறந்தவரின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லச் சென்றேன். காவல் துறையினரும், புலன் ஆய்வுத் துறையினரும் அங்கே செல்வது நல்லதல்ல என்றார்கள். இருந்தாலும் நான் கேட்காமல், அந்த வீட்டிற்குச் சென்றதோடு குடும்ப நிதியும் வழங்கினேன். அதனை இறந்தவரின் கணவர் நன்றியோடு பெற்றுக் கொண்டார்.

ஆனால் அன்று மாலையில் அவருடைய கட்சி அதனைப் பெற்றுக் கொள்ள தடை விதித்துள்ளது என்று கூறி, வாங்கிய பணத்தை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டார்.

அந்த வழக்கிலே தண்டிக்கப்பட்டு சிறையிலே இருந்த திமுகவை சேர்ந்தவர்கள் தான் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த கைதிகள் 6 பேரில் முதல் குற்றவாளியான முத்துராமலிங்கம் 2004ஆம் ஆண்டே சிறையில் இறந்து விட்டார்.

மற்றொரு குற்றவாளியான முருகன் என்பவர் பத்தாண்டுகள் சிறையிலே இருந்து, காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார். மற்ற நான்கு பேரில் இருவர் பத்தாண்டு காலம் சிறை தண்டனை முடித்தவர்கள். கருமலையான் என்ற கைதி 9 ஆண்டு கால சிறை தண்டனையை முடித்து விட்டார். இருந்தாலும் இப்போது அவர் விடுதலை செய்யப்படவில்லை.

காரணம் விடுதலைக்கான நிபந்தனையை அவர் நிறைவு செய்யவில்லை. அவர் 'பரோலில்' ஒரு முறை சென்றிருந்த போது, குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஒரு நாள் அதிகமாக தங்கிவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டாரெனினும், அரசு விதிமுறைப்படி தற்போது விடுதலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. ஒரேயொருவர் தான் ஏழாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்களது நாளேடான ஜனசக்தியில் "இக்கொலையில் தண்டிக்கப்பட்டவர்கள் ஓராண்டு சிறைத்தண்டனை கூட அனுபவிக்காத சூழ்நிலையில் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வந்திருப்பது என்ன வகை அனுதாபம்'' என்று கேட்டுள்ளார்.

1,405 பேரில் ஒருவர் கூட ஓராண்டு சிறை தண்டனை மட்டுமே அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. ஏழாண்டுகள் நிறைவு பெற்ற பிறகு தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டோர் பட்டியலில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சொல்வதைப் போல, அவர்கள் குறிப்பிடுபவர்கள் உட்பட மொத்தம் 356 பேர் ஏழாண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசியல் காரணங்களுக்காக கொலைச் செயல்களை நடத்துபவர்களை இப்படி விடுவிக்கக் கூடாது என்று ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

1987ம் ஆண்டு இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் கற்பழிப்பு, ஆள் மாறாட்டம், கொள்ளை, தீவிரவாத குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், கறுப்புச் சந்தையில் ஈடுபடுதல், கள்ளக்கடத்தல் செய்தல், ஊழல் வழக்கில் ஈடுபட்டவர்கள், உணவுக் கலப்பட வழக்கில் தண்டனை பெற்றவர்களைத் தான் விடுவிக்கக் கூடாது என்று தான் குறிப்பிட்டுள்ளது. அந்த அரசாணையின் அடிப்படையில் தான் தற்போது கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகளிலே உள்ள சாதாரண உறுப்பினர்கள் கூட நல்ல தெளிவு படைத்தவர்கள். அவர்களாவது உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தான் இந்த முழு விவரங்களையும் இந்தக் கேள்வி பதில் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் நினைவுக்காக ஒரு குறிப்பு: கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த தோழர் பாலதண்டாயுதம், ஓர் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக; பரோலில் விடுதலையாகி வெளி வந்த நிகழ்ச்சியும், அவர் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும்- தோழர்கள் வரதராசன், பாண்டியன் போன்றவர்கள் அறியாத வரலாறு அல்ல!

கேள்வி: மின்வெட்டைக் கண்டித்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு செய்வதாகவும், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: கடந்த வாரத்திற்கு முன்பு மின் வெட்டு இருந்தது உண்மை. ஆனால் அரசு சார்பில் பல முயற்சிகளையெடுத்து, மின் வெட்டை தற்போது அரசு படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வருகிறது. உண்மையான வியாபாரிகளும், தொழிலதிபர்களும் அதற்காக அரசைப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நேற்று நான் கவியரங்கத்திலே கூறியதைப் போல போராட்டத்திற்காக கோரிக்கையை தேடுபவர்கள் தற்போது மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் அதற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது அரசின் செயல்களை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்ததோ என்று யூகிப்பது தவறில்லை.

கேள்வி: ரேஷன் கடைகளில் ரூ. 50க்கு மளிகை சாமான் என்பது ஆளுங் கட்சியினருக்கு தான் லாபம் என்று புதிய அரசியல் கட்சித் தலைவர் (விஜய்காந்த்) சொல்கிறாரே?

பதில்: எதுவும் செய்யாவிட்டால், அரிசி விலை ஏறி விட்டது, விலைவாசியைக் குறைக்கவில்லை என்றார்கள். கிலோ அரிசி விலையை ஒரு ரூபாய் என்று குறைத்தோம். உடனே அரிசி விலையைக் குறைத்தால் கடத்தலுக்குத் தான் அது பயன்படும் என்கிறார்கள்.

கடத்தல் செய்பவர்kளை கைது செய்து, நடவடிக்கை எடுத்தால், கடத்தல் பெருகி விட்டது, பார்த்தீர்களா என்கிறார்கள். விலைவாசியைக் குறைக்க ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை நியாய விலையில் தருவோம் என்றால், யாருக்குமே அந்தத் திட்டத்தினால் பயனில்லை என்றார்கள்.

தற்போது 50 ரூபாய்க்கு 67 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருட்களைத் தருகிறோம் என்றால், அது ஆளுங்கட்சியினர் சம்பாதிக்கச் செய்யப்படும் வழி என்கிறார்கள்.

இப்படியெல்லாம் குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிட மாட்டார்கள். உண்மையிலேயே இதனை வாங்கி, அதன் மூலம் பயன் பெறுபவர்களுக்கு புகார் கூறுபவர்கள் வேண்டுமென்றே தான் இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இது வெறும் புகார் மட்டுமல்ல- வீண் புகார், வீம்புப் புகார் என்றே கூறலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X