For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் வீராசாமி பெயரைச் சொல்லி அடியாட்கள் அட்டகாசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பெயரைக் கூறி ஒருவரது வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளனர் ரவுடிகள். இதுகுறித்து போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் வசித்து வரும் முருகேசன் (62) என்ற கட்டடத் தொழிலாளி தனது குடும்பத் தாருடன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத் துக்கு எதிரே உள்ள மூன்றரை கிரவுண்ட் பரப்பளவு கொண்ட இடத்தில், என் தந்தையார் காலத்திலிருந்து 50 ஆண்டு களாக நாங்கள் வசித்து வருகிறோம். என் மனைவி கிருஷ்ணவேணி, குழந்தை கள் அலமேலு, ஏழுமலை, ரங்கநாதன், நடராஜ், ருக்மணி ஆகியோர் அந்த வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறோம்.

கடந்த 6ம் தேதி சென்னை தியா கராயநகர், வியாசர் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் (50), அவரது தம்பி பிருத்திவிராஜ் ஆகியோரது தூண்டுதலின் பேரில், தனசேகரன் மற்றும் நான்கு அடையாளம் தெரியாத அடியாட்கள் திடீரென என் வீட்டுக்குள் புகுந்து, நாங்கள் வைத்திருந்த 3 தென்னை மரங்கள் மற்றும் பூச்செடிகளை வெட்டிச் சாய்த்தனர்.

நீங்கள் யார் என்று கேட்டபோது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்லித் தான் நாங்கள் இந்த காரியத்தை செய்கிறோம் என்று கூறினார்கள். நீங்கள் வீட்டை காலி செய்து கொண்டு போகாவிட்டால் உங்களை குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டினார்கள். நாங்கள் உடனே நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 10ம் தேதி மீண்டும் அடையாளம் தெரியாத 4 பேர் வந்து மிரட்டினார்கள். 11ம் தேதி காலையில் புல்டோசரை கொண்டு வந்து காம்பவுண்ட் சுவர்களை இடித்தனர். இதை தடுக்க நாங்கள் முயன்றும் எங்களால் முடியவில்லை. இது பற்றி மீண்டும் போலீசில் புகார் செய்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த ஏழைகள் மீது கருணை கூர்ந்து, எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று முருகேசன் கூறியிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முருகேசன் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை துரைசாமி, திரிபுராள் என்கிற திரிபுரசுந்தரி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து வாய்மொழியாக இந்த இடத்தை வாங்கினார்.

இதற்கு ஆவணம் ஏதும் இல்லாவிட்டாலும் கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் தந்தையார் காலத்திலிருந்து இதே இடத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். இதற்கு ஆதாரமாக எங்களிடம் ரேஷன் கார்டு மற்றும் அனுபவ பாத்தியதைக்கான ஆதாரங்கள் உள்ளன.

அண்மையில் தி.நகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், அவரை சேர்ந்தவர்களும் எங்களிடம் வந்து, 1995ம் ஆண்டு இந்த இடத்தை திரிபுரசுந்தரி தங்களுக்கு எழுதி கொடுத்து விட்டதாக கூறி எங்களை அந்த இடத்திலிருந்து காலி செய்யுமாறு சொன்னார்கள்.

தாங்கள் தான் திரிபுரசுந்தரிக்கு வாரிசு என்று கூறிய அவர்கள், இடத்தை காலி செய்ய ரூ.50 ஆயிரம் தருவதாக அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம். அதற்கான சான்றுகளை வைத்திருக்கிறோம்.

திரிபுரசுந்தரி இப்போது இல்லை என்று எங்களுக்கு தெரியும். அவர் எப்போது இறந்தார் என்பதும் தெரியும். இத்தனை வருடமாக இல்லாமல் இப்போது ஏன் எங்களை காலி செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள் இந்த இடம் எங்களுக்கு தேவை. நாங்கள் தான் வாரிசுகள். உடனடியாக காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டினார்கள்.

நான் வசதி இல்லாதவன். என்னுடைய ஏழ்மை நிலையை தெரிந்து கொண்டு வந்து என்னை மிரட்டுகிறார்கள். நான் இந்த இடத்தை பல ஆண்டுகளாக அனுபவித்ததற்கான சான்றுகள் உள்ளன. எனவே இந்த கொலை மிரட்டலிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்த இடம் மூன்றரை கிரவுண்ட் பரப்பளவு கொண்டது. தற்போதைய நிலையில் அது பல கோடிக்கு விலை போகும். இதனால் எங்களை மிரட்டி அந்த இடத்திலிருந்து காலி செய்து விட்டு அந்த இடத்தை அபகரிக்க எண்ணுகிறார்கள் என்றார் கண்ணீருடன்.

அமைச்சர் பெயரைச் சொல்லி அடியாட்கள் அட்டகாசம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X