For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆற்காடு வீராசாமி பெயரில் மிரட்டியது ஏன்? : பரபரப்பு தகவல்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ரூ. 3 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரிக்க நடந்த பெரும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே, அமைச்சர் ஆற்காடு வீராசாமி அடியாட்களை அனுப்பி மிரட்டினார் என்று போலீஸில் பொய்யாக கூறப்பட்ட புகார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக போலி வக்கீல் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராயநகர், வியாசர் தெருவில் வசிப்பவர் சந்திரசேகர். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருக்கும், இவரது தம்பி பிரிதிவிராஜுக்கும் சொந்தமான பாட்டி வழி குடும்ப சொத்து 3 கிரவுண்டு நிலம் சென்னை நுங்கம்பாக்கம்-வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் பார்க் வியூ' ஓட்டல் அருகே உள்ளது.

இந்த இடத்தில் ஒருபகுதியில் சிறிய ஓட்டு வீடு உள்ளது. அங்கு நிலத்தை பாதுகாப்பதற்காக காவலாளி முருகேசன் என்பவரை குடியமர்த்தி வைத்திருந்தனர். காவலாளி முருகேசனுக்கு மாதம் ரூ.750 சம்பளம் வழங்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக முருகேசன் தனது குடும்பத்தோடு அங்கு வசித்து வந்தார். சந்திரசேகர் குடும்பத்தினருக்கு, முருகேசன் விசுவாசமாக இருந்தார். இந் நிலையில் அந்த இடத்தில் கட்டிடம் ஒன்றை கட்ட சந்திரசேகர் முடிவு செய்தார். இதற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதலும் பெற்றார். கடந்த 2ம் தேதி அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் போடப்பட்டது. காவலாளி முருகேசன் எந்த பிரச்சினையும் கொடுக்காமல் அங்குள்ள வீட்டை காலி செய்துவிட்டு போவதாக கூறினார்.

அந்த இடத்தில் தென்னை மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் வளர்ந்திருந்தன. கட்டிடம் கட்டுவதற்காக அந்த மரங்கள் வெட்டப்பட்டன. புல்டோசர் மூலம் இடமும் சரிசெய்யப்பட்டது.

இந் நிலையில்தான் முருகேசன் கேம் ஆடத் தொடங்கினார். நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்று சந்திரசேகர் மீது புகார் கொடுத்தார். அதில், நான் குடியிருக்கும் வீடு எனக்கு சொந்தமானது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 கொடுத்து அந்த இடத்தை வாங்கியதாகவும், தற்போது அந்த இடத்தை சந்திரசேகர் ரவுடிகள் மூலம் ஆக்கிரமிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அமைச்சர் ஆற்காடு வீராசாமிதான் அடியாட்களை அனுப்பி வைத்தார் எனவும் புகாரில் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் புகாரை ஆற்காடு வீராசாமி திட்டவட்டமாக மறுத்தார். இது உள்நோக்கத்துடன் கூடிய, களங்கம் ஏற்படுத்தக் கூடிய அவதூறு புகார். புகார் கொடுத்த முருகேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விரிவான விசாரணையில் இறங்கினர். அப்போதுதான், முருகேசன் நடத்திய சதி நாடகம் அம்பலத்திற்கு வந்தது.

காவலாளி முருகேசனோடு, வக்கீல் எழிலரசன் என்பவரும், நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த குமார் என்பவரும் பின்னணியில் இருந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. வக்கீல் எழிலரசன், நிலத்தின் சொந்தக்காரர் சந்திரசேகரை நேரில் சென்று மிரட்டியுள்ளார்.

காவலாளி முருகேசன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட இடத்தில் குடியிருந்துள்ளார் என்றும், சட்டப்படி நிலம் அவருக்குத்தான் சொந்தம் என்றும், நிலத்தை காலி செய்வதற்கு ரூ.25 லட்சம் பணம் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால், நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் வக்கீல் எழிலரசன் மிரட்டியுள்ளார்.

இந்த தகவலை சந்திரசேகர், போலீசாரிடம் தெரிவித்தார். அதோடு இதுதொடர்பாக வக்கீல் எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திரசேகர், போலீஸ் கமிஷனரை சந்தித்தும் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

சந்திரசேகர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலீசார் வக்கீல் எழிலரசன் பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் அவர் வக்கீலே இல்லை, பிரபல வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக இருந்தவர் என்று தெரிய வந்தது.

நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த குமார் என்பவரும் அதே வக்கீலிடம் கார் டிரைவராக பணிபுரிந்தார். எழிலரசனையும், குமாரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தார்கள். அப்போது திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் வக்கீலுக்கு படித்ததாகவும், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும் எழிலரசன் தெரிவித்தார்.

சென்னை பார்கவுன்சிலில் விசாரித்தபோது எழிலரசன் வக்கீல் இல்லை என்றும், போலி வக்கீல் என்பதும் உறுதியானது. ஆனால் எழிலரசன் தன்னை ஒரு வக்கீல் என்று விசிட்டிங் கார்டு அடித்துள்ளார். அதிமுக பெயரை பயன்படுத்தியும் அவர் விசிட்டிங் கார்டு வைத்துள்ளார்.

எழிலரசன் பல கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுள்ளார். வங்கியில் கடன் வாங்கி ஸ்கார்பியோ காரையும் வாங்கியுள்ளார்.

சந்திரசேகரின் ரூ.3 கோடி நிலத்தை அபகரிக்க, அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீது பொய்யான புகார் கொடுத்ததற்கு காவலாளி முருகேசனுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதால் போலி வக்கீல் எழிலரசனும், குமார் என்பவரும் கைது செய்யப்பட்டனர். காவலாளி முருகேசனும், அவரது மகன்கள் ஏழுமலை, ரங்கன் ஆகியோரும் கைதானார்கள்.

போலி வக்கீல் எழிலரசன் கொடுத்த வாக்குமூலத்தில், அமைச்சர் ஆற்காடு வீராசாமியை இந்த பிரச்சினையில் இழுத்தால்தான் பிரச்சினையை தனக்கு சாதகமாக ஆக்க முடியும் என்று கருதி பொய் புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் மீது ஆள்மாறாட்டம், நம்பிக்கை மோசடி உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X