For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதசார்பற்றவாதிகள்- இல.கணேசன் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகத்தில் நடைபெறும் சர்ச் தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்டடவை. ஆனால் இந்து இயக்கங்கள் மீது பழிபோடப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் ஒரே மாதிரியான திட்டத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. கோத்ராவில் 50 கர சேவகர்கள் தீயில் கருகி மாண்டார்கள்.

அன்று நாடாளுமன்றம் கூடியது. இந்தக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்தவை பாஜக, அதிமுக மற்றும் சிவசேனா மட்டுமே. ஆனால், அன்று இரவே எதிர்விளைவுகள் தொடங்கிவிட்டன. முதல்நாள் வாய்மூடி மௌனமாக இருந்த அத்தனை மதசார்பற்ற கட்சிகளும் ஆர்ப்பரித்து எழுந்தார்கள்.

அப்போதும் கூட அவர்கள் முதல் நாள் சம்பவத்தை கண்டிக்கவேயில்லை. நாளாவட்டத்தில் எதிர்விளைவு மட்டுமே இன்று பேசப்படுகிறது. ஆனால், அதற்கு காரணமான விளைவு மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீர் விவகாரத்திலும்...

காஷ்மீரில் நிலம் தரக்கூடாது என்று ஆர்ப்பாட்டம், நாட்டுக்கு எதிரான கோஷம், பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கங்கள், ஆகஸ்ட் 15 அன்று தேசிய கொடியை கீழிறக்கி தீ வைத்து, காலால் மிதித்து அவமானப்படுத்தியவர்களை கண்டித்து மதசார்பற்றவாதிகள் கண்டன குரல் எழுப்பவில்லை.

மாறாக நியாயமான அமர்நாத் நில கோரிக்கைக்கு ஜம்மு மக்கள் தேசிய கொடியுடன் பாரத மாதா கீ ஜெய் என்று முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தால் அதற்கு மதச்சார்பற்றவாதிகள் விமர்சனம் செய்யும் நிலை.

ஒரிஸ்ஸாவில் மலைவாழ் மக்கள் மத்தியில் தொண்டு செய்தே பிரபலமான துறவி லட்சுமணானந்தா கிறிஸ்துவ அமைப்பினரின் தூண்டுதலால் மர்மமாக படுகொலை செய்யப்பட்டார். அதுகுறித்து எதுவும் பேசாத மதசார்பற்றவாதிகள் அதன் எதிர்விளைவுகள் குறித்தே பேசுவதால் முதல் நிகழ்வு மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்படுகிறது.

திட்டமிட்ட தாக்குதல்...

கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் திட்டமிட்டவை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சென்ற மோப்ப நாய், காங்கிரஸ்காரர் வீட்டுக்குள் புகுந்தது.

திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி, இந்து இயக்கங்கள் மீது பழி போட்டு, அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட அனைத்து கட்சியினரும் வந்தன.

காவிரியில் உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்த கர்நாடக அரசு மறுத்தபோது கூட 355 பிரிவில் கடிதம் எழுதாத மத்திய அரசு, உடனே கடிதம் எழுதி கர்நாடக அரசை கலைக்க கோரிக்கை வைத்து எல்லாமே திட்டமிட்ட செயல்கள், திரும்ப திரும்ப நிகழ்கின்றன.

அடுத்த மதத்தவனை தாக்குவது என்பது இந்துவின் பண்பிலேயே இல்லை. ஆனால், ஒன்று புரிகிறது. இந்துக்களும் பொறுத்தது போதும் என தீர்மானித்துவிட்டார்கள். அதனால் சில இடங்களில் எதிர்விளைவுகள் ஏற்பட துவங்கியுள்ளன.

எதிர்விளைவுக்கு விமர்சனமும் அரசின் தரப்பில் நடவடிக்கையும் தீவிரமாக இருக்கிறது. ஆனால் அடிப்படை விளைவு குறித்து அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இந்துக்கள் மன உணர்வு இன்னமும் பாதிக்கப்படுகிறது.

சென்னை அருகே போரூரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட இயக்கம் ஒன்று திரும்ப திரும்ப கூட்டம் போட்டு இந்து மதத்தை விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

மிக மோசமாக தரம் தாழ்ந்து பேசியதை கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பினர் வன்முறையில் இறங்கி அந்த பகுதி முழுவதும் கலவரம் செய்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களை மட்டுமே போலீஸார் கைது செய்தனர். விழா ஏற்பாடு செய்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், திட்டமிட்டு ஆயுதங்களோடு வந்துள்ளார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதிலும் நியாயம் கேட்டவர்களே விமர்சிக்கப்படுகிறார்கள், போலீஸ் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த போக்கு நல்லதல்ல, கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X