For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோத்ரா ரயில் எரிப்பு சதிச் செயல் - மோடி குற்றமற்றவர்: நானாவதி கமிஷன்

By Staff
Google Oneindia Tamil News

Modi
காந்திநகர்: சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி. அது விபத்து அல்ல. அதைத் தொடர்ந்து கோத்ராவில் நடந்த வன்முறையில் முதல்வர் நரேந்திர மோடிக்கோ அவரது அமைச்சர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக அரசு அமைத்த நானாவதி கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சபர்மதி எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில், அயோத்தியிலிருந்து திரும்பிய கர சேவகர்கள் 58 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக குஜராத்தில் பெரும் வன்முறை மூண்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையில் பாஜக அரசு கமிஷன் அமைத்து. இந்த கமிஷனில் இன்னொரு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்ஷய் மேத்தாவும் இடம் பெற்றிருந்தார்.

இந்த கமிஷனின் முதல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை குஜராத் மாநில சட்டசபையில், மாநில அரசு தாக்கல் செய்தது.

அதில், சபர்மதி எக்ஸ்பிரஸ் சம்பவம் விபத்து அல்ல. திட்டமிட்ட சதிச் செயல். கோத்ராவில் உள்ள அமன் கெஸ்ட் ஹவுஸில்தான் இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபர்மதி ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றபோது எஸ்-6,7 பெட்டிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 நிமிடம் இந்த தாக்குதல் தொடர்ந்துள்ளது. இதனால் அந்த பெட்டிக்குள் இருந்தவர்களால் வெளியே முடியவில்லை. அதோடு தீயும் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கி 58 பேர் எரிந்து இறந்துள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கோத்ரா வன்முறையில், குஜராத் முதல்வருக்கோ அல்லது அவரது அமைச்சர்களுக்கோ தொடர்பு இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காவல்துறை அதிகாரிகள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் நானாவதி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு சட்டசபையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இது மக்களை திசை திருப்பும் அறிக்கை என்று அவை வர்ணித்துள்ளன.

விசாரணையில் திருப்தி-நானாவதி:

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல், தனது குழுவின் விசாரணை திருப்திகரமாக இருந்ததாக நீதிபதி நானாவதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருக்க மாட்டோம். நாங்கள் எழுதிய தீர்ப்பில் எங்களுக்கு எந்த சந்தேகமும், குழப்பமும் இல்லை.

முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நாங்கள் நன்னடத்தை சான்றிதழ் தந்திருப்பது குறித்து விமர்சிப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தனித் தனி கருத்து இருக்கும். அவற்றை அவர்கள் வெளியிடுவதை யாராலும் தடுக்க முடியாது. மக்கள்தான் இதுகுறித்து விவாதித்து, முடிவெடுக்க முடியும் என்றார்.

மோடி அப்பாவியா? - லாலு கிண்டல்:

இந்த அறிக்கை குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில், நரேந்திர மோடி அப்பாவி என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், இது ஒரு கண்துடைப்பு அறிக்கை. இதை ஏற்க முடியாது என்றார்.

மோடி அமைத்த கமிஷன்:

குஜராத் அரசு அமைத்த நானாவதி கமிஷனிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். இதில் அதிர்ச்சியோ வியப்போ ஏற்படவில்லை. கோத்ரா சம்பவத்தின் முதல் எதிரியே மோடிதான். அவர் அமைத்த கமிஷன் எப்படி நடுநிலையாக இருக்க முடியும் என்று கூறியுள்ளது காங்கிரஸ்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், குஜராத்தில் நடந்த வன்முறையில் மோடிக்கு தொடர்பில்லை என்று இந்த அறிக்கை கூறியிருப்பது அரசியல் நோக்கிலானது. இதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

பகுதி பகுதியாக தனது அறிக்கையை நானாவதி கமிஷன் தாக்கல் செய்வது ஏன் என்பது புரியவில்லை. வன்முறையை நியாயப்படுத்த முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்று சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார்.

இதே கோத்ரா சம்பவம் குறித்து ரயில்வே துறை சார்பில் லாலு பிரசாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி யு.சி. பானர்ஜி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், சபர்மதி எக்ஸ்பிரஸ் சம்பவம் சாதாரண விபத்துதான். அதில் எந்த சதியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நேர் மாறாக நானாவதி கமிஷன் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X