For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு அவலமா? 'சன்' ஆதங்கம்

By Staff
Google Oneindia Tamil News

SUN Pictures
சென்னை: 'காதலில் விழுந்தேன்' படத்தை மதுரையில் திரையிட வழி வகை செய்யாமல் வெறும் விளக்கத்தோடு அரசு நிறுத்திக் கொண்டிருப்பது நியாயமற்றது. ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு அவல நிலையா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ெதரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள காதலில் விழுந்தேன் படம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகையில், மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக கூறுகின்றனர்.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தது. இந்த மறுப்புக்கு சன் பிக்சர்ஸ் விளக்கம் தெரிவித்துள்ளது.

அமோக வெற்றி:

இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸின் 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மதுரை, ராமநாதபுரம் பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் திரையிடப்பட்டு ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றி நடைபோடுகிறது.

மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் மட்டும் இந்த படம் ரிலீசாக இருந்த தியேட்டர்களுக்கு சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும், சில தியேட்டர்களுக்கு நேரடியாகச் சென்றும் படத்தைத் திரையிடக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

மீறித் திரையிட்டால், அவர்கள் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்து அங்கெல்லாம் இப்படம் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய அவல நிலையை விளக்கி, பாதுகாப்பு கேட்டு தமிழக அரசு உள்துறை செயலாளருக்கு புகாரும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில், செய்தி, மக்கள் தொடர்பு துறை மூலம் இன்று ஒரு அரசு செய்தி வெளியீடு தரப்பட்டுள்ளது. அதில் சிலர் தங்கள் சுய லாபத்திற்காக அரசின் மீது வீண்பழி சுமத்துவதை திட்டவட்டமாக மறுப்பதோடு, சட்டம், ஒழுங்கிற்கு உட்பட்டு அத்தகைய அதாவது தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட படங்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று அரசு தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வேடிக்கையாக உள்ளது:

இந்த அரசு வெளியீடு வேதனையைவிட வியப்பையேத் தருகிறது. புகார் கொடுத்தவர்களையோ சம்பந்தப்பட்டவர்களையோ அழைத்து உண்மை நிலையை கேட்டு விசாரித்து அறியாமல் தங்கள் சுயலாபத்திற்காக அரசு மீது வீண் பழி சுமத்துவதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

அரசு மீது யாரும் பழி சுமத்தாத நிலையில், அரசிடம் பாதுகாப்பு கேட்டும், படத்தை திரையிட உரிய வழி வகைகளை வகுத்துத் தருமாறும் கேட்கப்பட்டுள்ளதே தவிர, எந்தக் குற்றச்சாட்டையும் அரசு மீது சுமத்தவில்லை. இந்த நிலையில் அரசு தானாகவே தங்கள் மீது பழி சுமத்துவதாகக் கூறுவது எந்தவித நியாயம் என்பதும் எங்களுக்குப் புலப்படவில்லை.

தமிழக அரசு நேர்மையான அரசு, நியாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் நடந்ததை விளக்கி பாதுகாப்பு கேட்டு நாங்கள் உள்துறை செயலாளருக்கு புகார் கொடுத்தோம்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்...

சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து பேசி, உரிய பாதுகாப்பு வழங்குகிறோம், நீங்கள் திரையிடுங்கள் என்று கூற வேண்டிய அரசு அப்படி செய்யாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறாமல் யாரோ சிலர் வீண் பழி சுமத்துவதாக கூறியிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாகவே தோன்றுகிறது.

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி இப்போது புதிதல்ல, இதற்கு முன் இயக்குனர் சங்கரின் 'முதல்வன்' படம் திரையிட்ட உடனே அதன் வீடியோ படம் எல்லா கேபிள்களிலும் போடப்பட்டதாக அப்போதே புகார்கள் எழுந்தது. அது திரைப்படத் துறையினரிடம் ஒரு கொதிப்பை உருவாக்கிய நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது மதுரையில் என்பதை திரையுலகினர் அனைவரும் அறிவர்.

பொறுப்பிலிருந்து அரசு விலகுகிறது:

இந்தச் சூழலில் 'காதலில் விழுந்தேன்' படத்தைத் திரையிட உரிய வழிகளை வகுத்துத் தராமல் அத்தகைய படங்களை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று கூறி அறிக்கையோடு நிறுத்தியிருப்பது அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாகவே தெரிகிறது.

இப்படித் தங்களுக்கு வேண்டாதவர்கள் படங்களை சில சக்திகள் தடுத்தும் நிறுத்தும் நிலை அனுமதிக்கப்படுவது ஒரு தவறான முன் உதாரணத்துக்கு வழி வகுத்துவிடும். திரையுலக நண்பர்களும் இந்த அபாய நிலையை உணர்ந்து, முறையாக தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை மதுரை ராமநாதபுரம் பகுதியில் வெளியிட உதவிட வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X