For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடங்களில் புகைக்க தடை - பரவலாக வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

No Smoking
டெல்லி: பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளான இன்று இந்த தடைக்கு ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் சிகரெட் விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவமனைகள், தியேட்டர்கள், பிளாட்பாரம், ஹோட்டல்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்தத் தடையை விதித்துள்ளது. காந்தி ஜெயந்தியான இன்று முதல் நாடு முழுவதும் இந்த சட்டம் கடுமையாக அமலுக்கு வருகிறது.

சிகரெட், பீடி, சுருட்டு, குட்கா, புகையிலை போன்றவற்றை உபயோகிப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள புகைபிடிக்க மத்திய சுகாதாரத் துறை தடை விதித்தது.

கடந்த மே மாதம் 30ம் தேதி இதற்கான தடை அறிவிக்கையை அமைச்சகம் வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தடை சட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து மக்கள் கூடுகின்ற அரங்கங்கள், திறந்த வெளி அரங்கங்கள், மருத்துவமனைகள், பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள், பிளாட்பாரங்கள், வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், தியேட்டர்கள், நீதிமன்றம், ஹோட்டல், தங்கும் இடங்கள், சிற்றுண்டி விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

சட்டத்தை மீறுவோர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாவார்கள்.

அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிப்போர் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகள், புகையிலை கட்டுப்பாட்டு நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள்.

புகைப்பிடிப்பது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்தல், ஊக்கப்படுத்துதல், புகையிலைப் பொருட்களை கல்வி நிலையங்களுக்கு அருகில் அதாவது 100 மீட்டர் தூரத்திற்குள் விற்பனை, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது ஆகியவை தடை செய்யப்படுகிறது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

புகை பிடிப்போரை தடுக்க மாநில, மாவட்ட, வட்ட, கிராம அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை செயல்படுத்த கோரி அரசுத்துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும்படி அனைத்து மாநில முதல்வர்கள், தலைமை செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை அமல்படுத்த டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

உ.பி.யில் சொதப்பல்:

உ.பி. மாநிலத்தில் பெரிய அளவில் இந்த தடை உத்தரவுக்கு பலன் இல்லை. போலீஸாரும், மாநில அரசும் இதுகுறித்து அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததோடு உ.பி. அரசு நின்று விட்டதைக் காண முடிந்தது.

இருப்பினும் சுகாதாரத்துறையின் அனைத்து அலுவலகங்களிலும் புகை பிடிப்பு ஒழிப்புப் பிரிவை அரசு ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரவேற்பு...

தமிழகத்தில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பெருவாரியான ஆதரவு காணப்பட்டது.

முக்கியச் சாலைகளையொட்டி உள்ள பெட்டிக் கடைகளில் சிகரெட் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்ற போதிலும், பொது இடங்களில் புகை பிடிப்போரை அதிகம் காண முடியவில்லை.

அதேசமயம், மெயின் ரோடுகள், பொது இடங்களில் உள்ள கடைகளில் விற்பனை இன்று சரிவைக் கண்டதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். பல கடைகளில் இங்கு புகை பிடிக்கக் கூடாது என்ற போர்டுகளையும் காண முடிந்தது.

புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த தகவல் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால்தான் விற்பனையில் சரிவைக் காண முடிகிறது என்று பல கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் இந்த தடை சரியானதே என்று பொதுமக்கள் தரப்பிலும் வரவேற்பு காணப்படுகிறது. இதன் மூலம் புகைபிடிப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்தை குறைக்க ஒரு வாய்ப்பு ஏற்படும். அதேசமயம், பாசிவ் ஸ்மோக்கர் எனப்படும், புகை பிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் குறையும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் இந்தத் தடை உத்தரவை அமல்படுத்தும் பொறுப்பு, மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் துறை அதிகாரிகள், நூலகர்கள், விமான நிலைய மேலாளர்கள், மாநில, மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புகை பிடிப்பவர்களைப் பிடித்து அபராதம் வசூலிப்பார்கள்.

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் பரவலான வரவேற்பு காணப்பட்டது. கேரளாவில் ஏற்கனவே இந்த தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X