For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் நானோ: மோடி-ரத்தன் டாடா ஒப்பந்தம்

By Staff
Google Oneindia Tamil News

Modi and Ratan Tata
அகமதாபாத்: மேற்கு வங்கத்திற்கு டாடா காட்டி விட்ட டாடாவின் நானோ தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் கிராமத்தில் அமைகிறது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று மாலை குஜராத் முதல்வர் மோடியும், டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவும் கையெழுத்திட்டனர்.

ரூ.1 லட்சத்தில் நானோ என்ற பெயரில் சிறிய கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தை திரும்ப தரக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி தலைமையில் தொழிற்சாலை முன் தொடர் போராட்டம் நடந்தது.

பிரச்சனை முற்றிய நிலையில் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்த டாடா நிறுவனம், வேறு மாநிலங்களில் இடம் பார்க்கத் தொடங்கியது. கர்நாடகா, ஜார்கண்ட், குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து டாடாவுக்கு அழைப்புகள் குவிந்தன.

இந்த நிலையில், டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தில் அமைப்பது என்று டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தலைநகர் அகமதாபாத்துக்கு அருகில் உள்ள சனந்த் என்ற கிராமத்தில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. முன்னதாக கட்ச் மாவட்டம் அம்பாதா தாலுகாவில் உள்ள சாங்கான், மத்திய குஜராத்தில் உள்ள ஹலோல் ஆகிய கிராமங்களையும் டாடா நிறுவன குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியில் சனந்த் கிராமத்தில் ஆலையை நிறுவ தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா இன்று குஜராத் சென்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அப்போது மோடியும், டாடாவும் நானோ தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.

குஜராத் மாநிலத்தில் நிலவும் தடையற்ற மின் விநியோகம் மற்றும் தொழிற்சாலைக்கான சாதகமான சூழ்நிலை, தொழில் ஆதரவு அரசு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குஜராத்தை டாடா நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் பதவிக்கு வந்து 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் மோடி. இதையொட்டி நானோ ஆலையை அவர் குஜராத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதை பாஜகவினர் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். குஜராத் மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக 7 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஒரே முதல்வர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனத்தின் நானோ ஆலோ தொடர்பாக குஜராத் அரசு தரப்பில் கூறுகையில், சனந்த் பகுதியில் அமையவுள்ள டாடா ஆலோ தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகிறது. இதற்காக ரத்தன் டாடா வருகிறார். அவரும் முதல்வர் மோடியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.

மாலை 5.30 மணியளவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அதற்கு முன்னதாக டாடா மற்றும் டாடா நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிகாந்த் ஆகியோர் முதல்வருடன் பேச்சு நடத்துவர் என்று கூறினார்.

அதன்படி மோடியும் ரத்தன் டாடாவும் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று மாலை கையெழுத்திட்டனர்.

1000 ஏக்கர் நிலம்:

சனந்த், தலைநகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஆனந்த் விவசாயப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமாக 2220 ஏக்கர் நிலம் முன்பு இருந்தது. இது அப்படியே அரசிடம் வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலத்திலிருந்து 1000 ஏக்கர் நிலம் டாடா நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.

தலைநகருக்கு மிக அருகில் இருப்பதாலும், தேசிய நெடுஞ்சாலை இதன் அருகே இருப்பதாலும் சனந்த் தான் பொருத்தமானது என்று டாடா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X