For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருகும் கந்தக தொழில்!

By Staff
Google Oneindia Tamil News

Match Box
கோவில்பட்டி: விளக்கேற்றிட வேண்டிய தீக்குச்சிகள் தயாரிக்கும் தொழில் இருளை நோக்கி பயனிக்க தொடங்கி விட்டது.

தீப்பெட்டி- இது மக்களின் அத்திவாசிய பொருள். ஆனால் இதைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளின் நிலை அதள பாதாளத்தை நோக்கி பயனிக்க தொடங்கியுள்ளது. இருளை அகற்றி வெளிச்சம் தர வைக்கும் தீக்குச்சிகளை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை அணைந்த தீக்குச்சிகள் போல கந்தக வெப்பத்தில் கருகி கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மற்றும் வேலூர் மாவட்டம் குடியத்தம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி குடிசை தொழிலாக நடந்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், சிவகாசி உள்பட பல பகுதிகளில் தீப்பெட்டி தொழில்தான் பிரதானமாக இருந்து வருகிறது.

ஆனால் சமீபகாலமாக மூலப் பொருட்களின் விலையேற்றம், இயந்திரமயமாக்கம், ஆட்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் தீப்பெட்டி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் முன்பு 1300 ஆக இருந்த தீப்பெட்டி நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 600 ஆக குறைந்து விட்டது. தீபாவளிக்கு பிறகு மேலும் 300 நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டியாளர் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் கூறியதாவது:

சில மூலப்பொருட்களின் விலை கடந்த 6 மாதங்களில் மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. 6 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.240 ஆக இருந்த பாஸ்பரஸ் தற்போது ரூ. 760 ஆக உயர்ந்து விட்டது. சல்பர் கிலோ ரூ.16 லிருந்து ரூ.55 ஆகவும், வச்சிரம் கிலோ ரூ.100லிருந்து ரூ.120 ஆகவும், மெழுகு ரூ.40லிருந்து ரூ.70 ஆகவும், அட்டை ரூ.21லிருந்து ரூ.31 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆனால் நாங்கள் தீப்பெட்டி விலையை இப்போதுவரை 50 பைசாவுக்கே விற்பனை செய்து வருகிறோம். மேலும் இயந்திரமயமாக்கத்தால் தீப்பெட்டி பண்டல்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு தேக்க நிலையும் ஏற்பட்டு வருகிறது. இயந்திமயமாக்கத்தால் கையால் தீப்பெட்டி செய்த உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களை மூடிவிட்டனர்.

இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கூட தரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சம்பள பாக்கி!

தற்போது தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியம் பாக்கி இருக்கிறது. அதேபோல மூலப்பொருட்கள் விற்பனையாளர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். தனியார் நிதி நிறுவனங்களிலும், நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று தொழில் நடத்தி வருகிறோம்.

எனவே இத்தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உடனே தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய நீண்ட கால கடன் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய பாக்கியைக் கொடுக்க முடியும் என்றார்.

இதுகுறித்து அப்பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஒரு காலத்தில் இத்தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் இன்று வெறும் 3 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டு மின்தடை மேலும் எங்களை வாட்டி வதைக்கிறது. இத்தொழிலை முழுமையாக இயந்திரங்கள் ஆக்கிரமிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இயந்திரமயமாக்கம்!

கையினால் செய்யும் தீப்பெட்டிகளை விட குறைவான விலைக்கு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்வோர் தருகின்றனர்.

பகுதி இயந்திரம் மற்றும் முழு இயந்திர தீப்பெட்டி உற்பத்திக்கு ஒரே வரி விதிப்புதான் உள்ளது. இதில் வித்தியாசம் வேண்டும். எனவே பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்திக்கு அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.

பகுதி இயந்திரம் மற்றும் முழு இயந்திர தீப்பெட்டி உற்பத்தி மூலம் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.30 கோடி வருமானம் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிய நாட்டு முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிவக அரசு நீண்ட காலமாக உள்நாட்டில் கணிசமான வருமானத்தை ஈட்டு தரும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க முன்வரவேண்டும்.

தொழில்நுட்ப துறையில் உலக அரங்கில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் நடைபோடும் இந்த நூற்றாண்டில் கசங்கிய ஆடைகளுடனும், கலைந்த கேசத்தோடும், வாடிய முகத்தோடும், தினம் தினம் கந்தக குச்சிகளோடு தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் கேள்வி குறியாகி வருவதை எண்ணி வாழ்க்கையோடு போராடும் இத்தொழிலாளர்களின் வேதனையை அரசு போக்குமா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X