For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகோதரி அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம்: போப் வழங்கினார்

By Staff
Google Oneindia Tamil News

Sister Alphonsa
வாடிகன்: இந்தியாவின் முதல் பெண் புனிதராக சகோதரி அல்போன்சாவை, போப் 16ம் பெனடிக்ட் நேற்று அறிவித்தார்.

இதற்காக வாடிகனில் நடந்த சிறப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உட்பட ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குடாமலூர் என்ற கிராமத்தில் ஜோசப்-மேரி தம்பதிக்கு மகளாக 1910-ம் ஆண்டு பிறந்தவர் அல்போன்சா. கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக தவ வாழ்க்கை மேற்கொண்ட அவர், பரநங்கனம் என்ற பகுதியில் பல்வேறு சமூக நலச் சேவைகளை செய்தார். உடல்நலக் குறைவு காரணமாக மிக இளம் வயதிலேயே 1946-ம் ஆண்டு இறந்தார்.

இறந்த பின்பும், அவருடைய சமாதியில் ஜெபம் செய்தவர்களுக்கு பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் இந்தியா வந்தபோது புனிதர் பட்டம் பெறுவதற்கு முதல்நிலை தகுதியான தூயவர் பட்டத்தை அல்போன்சாவுக்கு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, அல்போன்சாவுக்கு நேற்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

சிறப்பு விழா:

வாடிகன் நகரில் நேற்று காலை புனித பீட்டர் பேராலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து புனிதர் பட்டம் பெறும் இத்தாலியின் எரிக்கோ கெத்தானோ, மரியா பெர்னாதா பியூட்ளர், நார்ஸிசா மார்த்திலோ மோரான், இந்தியாவின் அல்போன்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வாசிக்கப்பட்டது.

புனிதர் பட்டம் வழங்கும் கமிட்டியின் தலைவர் கர்தினால் அஞ்சலோ அமாத்தோ, கேரளாவிலுள்ள பால பகுதியின் ஆர்ச் பிஷப் மார் ஜோசப் கல்லறங்காடு ஆகியோர் பாஸ்டுலேட்டர் கர்தினால் ஜொவானி ஜூசேபே காலிஃபானோவுடன் சேர்ந்து சகோதரி அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்குமாறு போப்பை கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து போப் 16ம் பெனடிக்ட் 'தன்னுடைய தீர்மானங்கள் ஒருபோதும் தவறாது' என்ற சிறப்பு வரத்தை பயன்படுத்தி அல்போன்சா உள்ளிட்ட 4 பேரையும் புனிதராக அறிவித்தார்.

ஏற்கனவே புனித பிரான்சிஸ் சேவியர், புனித கோன்சாலோ கார்சியா மற்றும் புனிதர் ஜான் டி.பிரிட்டோ ஆகியோர் இந்தியாவில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து சொந்த நாட்டிலேயே மறைந்த சகோதரி அல்போன்சாதான் இந்தியாவின் முதல் புனிதர் மற்றும் முதல் பெண் புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X